திசுக்கள் எல்லாம் காதல் 3

வழியனுப்பும் பொழுதுகளில்
போகாதே என நானும்...
அனுப்பாதே என நீயும்...
சொல்லிவிட வைத்திருந்ததை
வெறும்
மௌனங்களோடு தலையசைத்து
உடைந்துவிடாமல்
பார்த்துக் கொள்கிறோம்.....!
தேவதையும் மூன்று கோடரிகளும்
கதைதான்
ஞாபகத்தில் வருகிறது.....
நீ... கிள்ளுகிறாய்... மரம்...!
மீண்டும்.. கிள்ளுகிறாய்.. வெள்ளி...!!
என் அசட்டைகள் பொறுக்காமல்
முத்தமிட்டு விடுகிறாய்.....
ஐ...... தங்கக் கோடரி....!!
உன் வெட்கத்தை
நமக்கான இடைவெளிகளில்
நிரப்பிவிடு...
ஒவ்வொருமுறை
கடக்கும்பொழுதும்..உன்னை
அம்மாஞ்சியெனவும்
என்னை அசமஞ்சம் எனவும்
பரிகசித்துவிட்டுப் போகிறது
காற்று...!!
நீரடிச்சி நீர் வெலகுமா..?
பழஞ்சொல் சொன்னவனுக்கு
சிலை வைக்கலாம்....!
நீ.......மழையில்
நனைந்து கொண்டிருக்கிறாய்....