திருவலிவலம் பதிகம் 11
முதல் திருமுறையில் 123 வது தலமாக ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருவலிவலம் பதிகத்தில் 11 ஆம் பாடல்.
மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழின்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபது முயர்பொருள் தருமே. 11
பொழிப்புரை:
நிலைபேறுடைய வலிவலநகரில் உறையும் இறைவன் மீது இனிமையான இயல்பினை உடைய கழுமல நகருக்குத் தலைவனும் அழகிய வேதங்களையும் கலைகளையும் ஓதாமல் தானே உணர்ந்த தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் எண்ணி உரைத்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தும் உயர்வான வீடு பேறாகிய செல்வத்தை அளிக்கும்.
குறிப்புரை:
வலிவல நாதனைக் கழுமலநாதனாகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்தப்பத்து உரைகளும் உயர்ந்த பொருளைத் தரும் என்கின்றது.
எழில்மறை தன்னியல் கலைவல தமிழ்விரகன் - அழகிய வேதத்தையும், கலைகளையும் ஓதாதே தன்னியலாலேயே திருவருள் துணைகொண்டு உணர்ந்த தமிழ் விரகன்.
உன்னிய - எண்ணிச் சொன்ன. உயர்பொருள் - வீடு.
குறிப்பு:
திருவலிவலம்:
இறைவர் பெயர் இருதய கமலநாதேஸ்வரர், மனத்துணைநாதர்,
இறைவியின் பெயர் வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி,
தல மரம் - புன்னை, தீர்த்தம் - சங்கர தீர்த்தம்.
தல வரலாறு: வலியன் (கரிக்குருவி) வழிப்பட்டதால் இத்தலம் 'வலிவலம்' என்ற பெயர் பெற்றது.
சூரியன், வலியன், காரணமாமுனிவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர்.
சிறப்புகள்: வில்வவனம், ஏகச்சக்கரபுரம், முந்நூற்றுமங்கலம் முதலிய இப்பதியின் வேறு பெயர்கள்.
இது கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்.
தேவாரப் பாடல்களை ஓதத் தொடங்கும்போது பொதுவாக முதலிற் பாடத் தொடங்கும் 'பிடியதன் உருஉமை கொள' என்னும் பாடல் இத்தலத்திற்குரியதேயாம்.
கோவிலுக்குச் செல்லும் வழி:
தமிழ் நாட்டில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி (வழி கீவளூர்) சாலையில் உள்ள தலம்.
திருவாரூரிலிருந்து 10-கி. மீ. தொலைவிலுள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் புலிவலம், மாவூர் வழியாகவும் வரலாம்;