இனிதே வாழ்வோம்

நெஞ்சிலே ஈரம் நெடும் புனலாய் பெருக்கெடுக்க
பஞ்ச மனிதரின் பாவம் கரைக்கும் தீப்பிழம்பாய்
மஞ்சம் விடுத்து மாட மாளிகை சுகம் துறந்து
போதியின் கீழ் புதுஞானம் பெற்றவனே புத்தனே

அன்பென்னும் விதையை அகிலமெங்கும் தூவி
அகிம்சை நாற்றாக்கி அறிவாம் நீர் பாய்ச்சி
ஆசையாம் களைகள் நீக்கி இரக்க உரமிட்டு
அற்புதமாய் நீ வளர்த்த பௌத்த மரம்

எங்கள் அசோகனின் இதயத்திற்குள் பரவி
இனியொரு போரில்லை உயிர்பலி ஏதுமில்லை
அன்பொன்றே அனைத்தும் இனியதை அகிலமெங்கும்
எடுத்துச் செல்வேன் என சூளுரைத்து அன்று

அவன் விதைத்த விதைகள் ஈழத்தில்
சீனத்தில் சப்பானில் மியான்மரில் தாய்லந்தில்
கருணைப் பெருக்கெடுத்து கடலாய் விரிந்தது
காலங்கள் கடந்தது இன்று காண்பதென்ன

நீ தந்த அகிம்சை பெரிதும் நீர்த்துப்போக
இரக்கமில்லா அரக்கர்தம் கொடுஞ்செயலால்
ஏதுமறியா எண்ணி லடங்கா எம்தமிழர் ஈழத்து
புத்த மண்ணில் புதையுண்டு போயினர்

இரக்கம் வளர்த்தெடுத்த புத்தத்தின் அடிவருடிகள்
அரக்கராய் அவதரித்து ஆயுதங்களாய் உருமாறி
இஸ்லாமியர் இரத்தத்தில் இழிவாய் நீராடி
மியான்மர் வீதிகளில் மிருக நடம் புரிகின்றனர்!

புத்தி இல்லா இம்மனிதர் புரிகின்ற செயல்கள் யாவும்
புத்தம் ஒருபோதும் போதித்தல்ல புரிகிறது என்றாலும்
புத்தனே உன் போதி மரத்து போதனைகள் இந்த
புல்லர்களுக்கு புரிவதெப்போது புதுயுகம் பிறப்பதெப்போது

மதச் சண்டையில் மாள்வதற்கா இப்புவியில் நாங்கள்
மனிதர்களாய் பிறப்பெடுத்தோம் இல்லை இல்லை
இருக்கின்ற காலம்வரை இணைந்தே நடப்போம்
இன மத சாதி பேதமின்றி இனிதே வாழ்வோம்!
-----

எழுதியவர் : கொ.வை.அரங்கநாதன் (4-Jul-15, 12:11 am)
Tanglish : inithe vaazhvom
பார்வை : 114

மேலே