ஒரு புன்னகையுடன்

விரல்களை
மடக்கி மடக்கி பார்த்து
வெள்ளை போடாத
கொக்குகளின் மீது
எரிச்சல் நீங்க நீ
சொல்லிக்கொண்டிருந்தாய்
எனக்கும் சேர்த்து
உன் நகங்களில் என்று..

ரஜினி காந்தும்
குஷ்புவும் கட்டிப்பிடித்து
உருண்ட காட்சியை
கறுப்பு வெள்ளையில்
பணக்கார வீட்டில்
பார்க்க நேர்ந்த பொழுது
அம்மா தேடுவாங்க என்று
நீ நழுவிய கணத்திலிருந்து
எனக்கு மீசை அரும்பியிருந்தது
உனக்கு மூக்கொழுகல்
நின்றிருந்தது..

நம்மிருவரின் பெயர்கள் எழுதி
எழுத்துக்களை அடித்துப்பார்த்து
எண்ணிய நாளொன்றில்
நட்பு என்று வந்த பொழுது
என் உதட்டில் தவழ்ந்தது
சிரிப்பாகவும்
உன் உதட்டில் திணறியது
கோபமாகவும்
இருந்திருக்கவேண்டும்...

இது தான் விடை
குறித்துக்கொள்ளுங்களென
இராசமணி வாத்தியார்
சொல்லிக்கொண்டிருக்க
அந்த நூற்று நாற்பத்தி மூன்றை
எழுதுவதற்கு முன்
என்னை நீயும்
உன்னை நானும்
ஒரு முறை பார்த்து
சிரித்துக்கொண்டோம்..

1100ல் நீ அனுப்பியிருந்த
காலை மாலை வணக்கங்களை
பார்த்துவிட்ட நண்பனிடம்
நான் சும்மா என்றது போல
நீ உன் தோழியிடம்
ஒன்றுமில்லையென
ஏமாற்றிக்கொண்டிருந்தாய்..

வெறுமையாய் உரசிக்கொண்டிருக்க
தொடுதிரையை முட்டிய
செய்தி ஒன்று சொன்னது
நீ நட்புக்கான கோரிக்கை
அனுப்பியிருப்பதாக..

நலமா என்று ஆரம்பித்து
எனக்கு இரண்டு குழந்தைகள்
என நீயும்
என் குழந்தை ஒன்றாம் வகுப்பு
படிப்பதாக நானும்
ஒரு புன்னகை சின்னத்தோடு
உரையாடலை
முடித்துக்கொண்டோம்...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (4-Jul-15, 3:11 pm)
பார்வை : 146

மேலே