ஒதுக்கீடு என்னும் அநியாயம்
கோணிப்பை விரித்து அதில் தனியாய்
அவள் அமர்த்தப்படவில்லை.
சாதிகள் பார்த்து பின்அவளை
தோழி ஆக்கவில்லை.
குருதி யாவருக்கும் ஓர் நிறமென்றே
உறுதியோடு நாங்கள் இருந்தோம்.
எங்கள் இருக்கைகளும்
தினம் மதியம் நாங்கள் உண்ணும்
பருக்கைகளும் ஒரே தரமே.
அவளுக்கும் எனக்கும் ஆசிரியரும் ஒன்றே.
அருகருகே இருந்துதான்
அனைத்தையும் கவனித்தோம்.
அவளினும் ஆறு சதவீகித மதிப்பெண்
உயர்வாய் பெற்றேன்
ஆனால் ஒதுக்கீடு முறையால் தாழ்த்தப்பட்டேன்.
அவள் இன்று மருத்துவர்
நான் இன்று செவிலியர் .
இத்தோல்வி நேருமென
கருமுட்டையில் குறிப்பிட்டிருந்தால்
அப்போதே தோற்றிருப்பேன்
முட்டைக்கு முந்தாது.
வென்றாலும் தோற்கும் கதையை
பாட்டியாவது கூறியிருந்தால்
உறக்கத்தை ஒதுக்கு உடல் வருத்தி
படிக்காது உறங்கியிருப்பேன்.
தேர்வில் அவளை வென்றும்
எனை தோற்றவள் என்றது அவளது ஜாதி
இது என்ன நீதி?
தனி உரிமை வேண்டி நின்று
சம உரிமை என்கிறார்கள்
ஒதுக்கீடுகள் பெற்று உயர்ந்த பின்
மீண்டும் ஒதுக்கீடு கேட்க
தாழ்த்தப்பட்டவர்கள் ஆகிறார்கள்.
அன்று
ஒதுக்கீடு வேண்டுமென்று போராடிய எவனும்
இன்று
போதும் ஒதுக்கீடு என போராடியதாய் நினைவில்லை.
போதுமென சொல்ல எவனுக்கும்
போதிய மனமுமில்லை.
வரும் காலமும் இது தொடர்ந்தால்
நம் வரலாறே பிழையாகும்
சமஉரிமை என்னும் கூற்றே
கேள்விக்குறியாகும்.