கவிதையெனப்படுவது

இந்த என் எண்ணங்கள் யாவையும் முதலில் எண்ணத்தில்தான் இட்டேன்.ஏனோ தெரியவில்லை ஏடேறவில்லை.அதையே தற்போது கட்டுரையாக கட்டியுள்ளேன்.

எண்ணத்தில் என்னத்தை எழுதுவது, எண்ணுவதெல்லாம் எண்ணம்தான், ஆனால் எல்லாத்தையும் எழுதிவிட முடியுமா...என்ன...? சரி கவிதையை பற்றிய என் எண்ணங்களையே எழுத்தில் இட்டால் என்ன...?

கம்பர் ஒருநாள் என் வீட்டுப்பக்கம் வந்தார். அய்யா...நானும் ஒரு கவிஞன் படித்துவிட்டு சொல்லுங்களேன்... என்றேன். உரைநடைகளுக்கு கவிதை என்று பெயரிட்டால், கவிதைகளுக்கு என்ன பெயரிடுவீர்கள். வழிந்தேன்.... விழித்தேன்.... பின் விழித்தேன்.அதன்பின் என்னை ஒருநாளும் கவிஞனென்று சொல்லிக்கொண்டது கிடையாது.என் எண்ணங்களை சொல்வதற்கு மொழி வேண்டும்.அதற்கு ஒரு வழி வேண்டும். அவ்வளவுதான்... இது புதுக்கவிதையென்று அவருக்கு புரியாது.

நான் இலக்கணங்கள் பயின்றதில்லை. இலக்கியங்களை வாசித்ததில்லை. இருந்தும் காதல்தான் என்னை கவி எழுத தூண்டியது. கண்ணே... மணியே.... முத்தே.... முள்ளே... மலரே... என்றுதான் ஆரம்பித்தேன். முழுவதுமாய் கவிதை பயில்வதற்குள் காலம் காதலை முறித்துவிட்டது.தத்தி தத்தி நடை பழகிய எழுத்துக்களை விட முடியவில்லை.

என்றாவது ஒருநாள் என் எண்ணங்கள் கிளைதாவும் குரங்கென தாவித்திரியும்.அப்படி தாவித்திரியும்போது தவறி விழுந்தவைகள்தான் இவைகள்...ஏதோ ஒன்று எண்ணத்தை இம்சிக்கும்போதும்.... ஏதோ ஒன்று மனதை கிளர்ச்சியடைய செய்யும்போதும் மட்டுமே எழுதினேன்.தளத்தில் இணைந்தபிறகே ஏதோவொன்றை எழுத எத்தனிக்கிறேன்.(தளத்திற்கு நன்றி)

தோழர் கவியமுதன்தான் சொல்லியிருந்தார்.நான் ஒரு சமையல்காரன் உங்கள் கருத்துக்களே என் உணவுயென்று... உண்மைதான்,ஒரு படைப்பாளிக்கு கருத்துக்களும், கைதட்டல்களுமே உணவு.

படைப்புகளை படைத்துவிட்டு,கருத்துக்களுக்கு காத்திருக்கையில் ஒரு கருத்து வந்தால் கூட போதுமானது.யாரோ ஒருவரை அசைத்து பார்த்திருக்கிறது என்பதோடு,ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என எடுத்து கொள்ளலாம்.

காதை சுத்தி மூக்கை தொட்டு மூக்கு என்பதைவிட...நேரே மூக்கை தொட்டு மூக்கு என்பதையே நான் விரும்புகிறேன்.குருவி தலையில் பனம்பழத்தை வைத்து குருவியை வதைக்காமல், சொல்லவந்த ஏதோவொன்றை எளிய வரிகளில் ஈர்ப்புடன் சொன்னாலே போதுமானது என்று நினைக்கிறேன்.

படைப்பவர் எவருமே படைப்பாளிகள்தான். அந்த படைப்பாளிகளில் கவிஞனுக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. எதையுமே சுருங்க சொல்வதால் கூட அப்படி இருக்கலாம் என்பது என் எண்ணம்.இந்த எண்ணங்களும் தளத்திற்கு வெளியேயான என் எண்ணங்களேயன்றி வேறோன்றுமில்லை....

இனி என்னமாய் எழுதுகிறேன் என்பதும்....என்னமோ எழுதுகிறேன் என்பதும்.... உங்கள் கைகளில்.... கருத்துக்களில்....

எழுதியவர் : பனவை பாலா (8-Jul-15, 5:46 pm)
பார்வை : 391

சிறந்த கட்டுரைகள்

மேலே