பாக்கியம்

பேய நானும் பாத்ததில்ல
நீ சொல்ல கேட்டிருக்கேன்,
பயந்ததில்ல வெளியில
உன் முகந்தான் நெஞ்சுக்குள்ள!
நீச்சல் நீ பழக்க
கூச்சல் நான் போட
கிணறுந்தன் ஆலமுன்னு
வாய்க்காலுல பழக விட்ட!!
வானம் இடரும் நேரத்துல
பயந்துபோயி நானும் உன்னருகே
பதுங்கயிலே, ஐயம் போக்கி
என்னை அனச்சுகிட்ட!
மிதிவண்டி நீ பிடிக்க
மிதி மிதின்னு நான் மிதிக்க
கூடவே நீ ஓடி வந்த
குதியங்காலு வலி வலிக்க!!
மறுபிறவி நானெடுக்க
தந்தை நீதானே, உனக்கு
மகனாகும் பாக்கியம்தான்
என்றும் மாறாதே!!