காலைச் சாரல் 11 - கனவு

10-07-2015
அதிகாலை எண்ணங்கள்...... "கனவு"

இது எப்படி "அதிகாலை எண்ணங்கள்" என்ற சந்தேகம் எனக்கு உண்டு. கடைசி வரிகள் படித்தால் உங்களுக்கும் ஏற்படலாம்..

****
கனவுகளை அப்படியே தரவிரக்கம் (Download) செய்யும் வசதி இருந்தால் நிறைய கதைகளுக்கும், கவிதைகளுக்கும் கருவாகும் என்பது என் எண்ணம்.

கனவுகள் ஏன் ஏற்படுகிறது, காரணம், அர்த்தம் இவை பற்றிய ஆராய்ச்சிகள் பல உண்டு.. அது இந்தப் பகுதிக்குத் தேவை இல்லை.. இங்கே என் எண்ணங்களுக்கே முதலிடம்.

நேற்றைய நிகழ்வுகள் மனதில் / மூளையில் ஏறி, பழய நினைவுகளுடன் கலந்து ஒரு புது விதமான கலவையாய் மாற்று யோசனை தரும் உத்திதான் கனவோ..? ஆனால் நிறைய குழப்பமான பிம்பங்களும், தாறு மாறான கால வித்தியாசங்களும் கனவின் சுவையைக் கூட்டுகிறது

பல பிரச்சினைகளுக்கு கனவில் விடைகள் உள்ளது போல் தோன்றும்.. விடிந்தபின் அவை நினைவில் வருவது இல்லை.... ஆழ் மனம் செய்யும் தில்லு முல்லுகள் அம்பலம் ஆகும் இடமும் அதுவே... இன்னும் ஒன்று, எல்லோரும் இளமையாய் இருப்பது கனவில்தான்..... வண்ணங்கள் அற்ற கனவில் இளமை எங்கே வந்தது.....? நல்ல வேளை சின்ன வயசில் வரும் பறப்பது போன்ற கனவுகள் இப்பொழுது வருவதில்லை.

ஒரே ஒரு முறை சமீபத்தில் திடுக்கிட்டு நடு இரவில் எழுந்து கனவில் கண்டதை அப்படியே கவிதையாக எழுதியது உண்டு.. ஆனால் பல முறை கனவில் வார்த்தைகளைக் கோர்த்து, எண்ணங்களைச் செதுக்கி கவிதையாக்கி, காலையில் எழுந்து கோட்டை விட்டதும் உண்டு... ஒற்றை வரி கூட நினைவுக்கு வந்ததில்லை...

****
நேற்று பல தொடர் கனவுகள், விடிய, விடிய. எட்டு மணிக்குத்தான் விழித்தேன். அவற்றில் (வெளியில் சொல்லக் கூடிய) ஒன்று மட்டும் லேசாய் நினைவில்....

ஊரில் உள்ள அரை ஏக்கர் நஞ்சை நிலத்தை பயிரிட ஒருவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தேன்.. அப்பாவைக் கேட்டுச் சொல்கிறேன் என்றார்... விடாது பல இடங்களில் சந்தித்துக் கேட்டும் சரியான பதில் இல்லை... ஒவ்வொரு முறை அவர் கூறிய காரணங்களும் (கனவில்தான்) நம்பும்படித்தான் இருந்தது. ஆனால் இப்பொழுது எதுவும் நினைவில் இல்லை. அந்த அரை ஏக்கர் நஞ்சை ஏரியில் தண்ணீர் வந்தால்தான் பாசனம்... ஏரியில் அதிகத் தண்ணீர் வந்தால் அது ஏரிக்கு கீழ். எனக்கு நினைவு தெரிந்து அந்த நிலம் எப்போழுதும் பயிரிட்டதாகத் தெரியவில்லை... கனவிலும் கூட...!

****

எனக்கு நஞ்சை என்றாலே கவுண்டமணி - செந்தில்தான் நினைவுக்கு வரும்.

"ஜெயிலுக்குப் போனவங்களுக்கு நிலம் தாராங்களாம் ம்ம்ண்ண்ணே...!

நஞ்சையா, புஞ்சையா...?
ஆற்றுப் பாசனமா.... ஏரிப் பாசனமா....? "

என்ன வெள்ளந்தியான நகைச்சுவை....
****

குயில், புறா, காக்கா, வேப்ப மரம் எல்லாம் ரசிக்கும் நேரம் தாண்டி, காப்பி, டிபனும் சாபிட்டாகி விட்டது....

கருவேப்பிலை மரத்தில் ஒரே ஒரு பட்டாம் பூச்சி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. காய், பழம் இருந்தால் பூ நிச்சையம் இருக்கும் அல்லவா...?

இரண்டாவது காப்பி கிடைக்குமா என்று எண்ணும் பொழுதே கையில் காப்பியுடன் கேட்டாள்..."ஏன் இன்று எட்டு மணி வரைத் தூக்கம்...?"

கனவில் நாம் யார் யார் பின்னால் அலைகிறோம் என்பதை எல்லாம் சொன்னால் நமக்கு முதல் காப்பிக்கே வில்லங்கம் வந்து விடாது....?
---- முரளி

எழுதியவர் : முரளி (10-Jul-15, 8:26 pm)
பார்வை : 393

சிறந்த கட்டுரைகள்

மேலே