திருவள்ளுவரும் மருத்துவமும்

முன்னுரை:
சென்னைப் பல்கலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் பங்கு பெறும் பொருட்டு திருவள்ளுவரும் மருத்துவமும் என்ற தலைப்பில் திருக்குறளின் 95 ஆவது அதிகாரமான ’மருந்து’ என்ற தலைப்பிலுள்ள 10 குறட்பாக்களை விரிவாக ஆய்வு செய்து இந்த ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தேன்.
பழவினையாலும், பிற காரணங்களாலும் மக்கட்கு வாதம் முதலிய பிணிகள் வரும்; அவற்றுள் பழவினையால் வருவன தீராமையின் அவை ஒழித்து, ஏனைக்காரணங்களால் வருவனவற்றைத் தீர்க்கும் மருந்தின் திறம் கூறுகின்றார். உணவு செயல்களது ஒவ்வாமையாகலின், பிணிகளும் வெவ்வேறு காரணத்தால் வருவனவாயின.
மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 941
உணவும், உண்பவரின் உழைப்பும் அவரவர் செயல்களுக்குத் ஒத்த அளவிலன்றி அதனின் மிகுந்தாலும் குறைந்தாலும் மருத்துவம் பற்றி ஆய்ந்தறிந்த நூலோரால் வாதம், பித்தம், கபம் முதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பம் செய்யும் என சொல்லப்படுகிறது.
மருத்துவ அறிவுடையோர் அவ்வாறு வகுத்த வாதப்பகுதி (வளி), பித்தப்பகுதி, ஐயப்பகுதி (கபம்) என்னும் பகுதிப்பாடும் அக்காலம் தொட்டே உள்ளது. அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களாலும், அளவாலும் பொருந்துவது ஆகும். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களால் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல் ஆகும். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தம் நிலையின் நில்லாது வருத்தும் என்பதாம். இதனால் உடலுக்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதும், அவை துன்பஞ் செய்தற்கு காரணம் இருவகைத்து என்பதும் கூறப்பட்டன.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின். 942
ஒருவன் ஏற்கெனவே உண்ட உணவின் அளவு, வகையை உணர்ந்து, தன் உடலுக்குப் பொருந்தாத உணவுகளை அறிகுறிகளால் தெளிய அறிந்து தேவையான, அளவான உணவினை பின் உண்ணுவானாயின் அவன் உடலுக்கு மருந்து என்று வேறெதுவும் தேவைப்படாது.
குறிகளாவன - யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை,
காரணங்கள்: தொழிற்குரியவாதல், பசி மிகுதல் ஆகியன.
பிணிகள் உடல் சம்பந்தப்பட்டதால், 'யாக்கைக்கு' என்றார்.
'உணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது.
தெய்வத்திற்கு பலியென்ற பெயரில் சடங்குகள் செய்கையில் புலால் கிடைத்தது. உண்டார்கள். தெய்வத்தின் பெயரால் செய்வதால், கொலையாகாது என்று நம்பினார்கள். 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்று பழமொழியும் சொன்னார்கள்.
இறைச்சி சாப்பிட்டுப் பழகியவர்கள் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் அளவோடு சாப்பிட்டால் நோய் வர வாய்ப்பு குறைவு. வயோதிகர்கள், உழைப்புக் குறைவானவர்கள் மிகுந்த அளவில் இறைச்சி சாப்பிட்டால், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்க முடியாது.
என் நெருங்கிய நண்பரின் 40 வயதுள்ள மகன் மாரடைப்பால் மரணமானது குறித்து, அவருடைய அண்ணனிடம் விசாரித்த பொழுது, 'அவன் மிகுந்த அளவு 'மூளைக்கறி' சாப்பிடுவான், அதனால் தான் இறக்க நேரிட்டது என்றார்.
இக்கருத்தை 'பழக்கம்' கவிதையில்,
புலால்பெறவா பலிப்பழக்கம்?
புசிப்பதற்கேன் கொலைப்பழக்கம்?
புலால் உண்ணல் தீப்பழக்கம்
புலாலுக்கோ நோய் பழக்கம்' என்ற ஒரு சிறந்த செய்தியைக் கவிஞர் கந்ததாசன் சொல்கிறார்.
நான் 1970 - 74 ல் திண்டுக்கல்லில் மருத்துவராக இருந்த பொழுது, 'ஒரு மதிய விருந்தின் போது முஸ்லிம் முதியவர் தண்ணீர் கேட்டார், மயங்கி விட்டார், வந்து பாருங்கள்' என்று என்னை அழைத்து சென்றனர். பரிசோதித்ததில் மாரடைப்பில் இறந்தது உறுதியானது. எனவே சைவஉணவோ, மாமிச உணவோ எதுவாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுங்கள்.
அற்றால் அளவறிந் துண்க வஃதுடம்பு
பெற்றா னெடிதுய்க்கு மாறு. 943
முன் உட்கொண்ட உணவு செரித்த பின், அடுத்த வேளை உண்ண வேண்டிய உணவை அளவோடு அறிந்து உண்பதுதான், இறந்தாலும் பலவிதமான உயிர்ப்பிறப்பு உடல்களுக்குள் பிழைத்துப் பெறுவதற்கு அரிய இம்மானிட உடலைப் பெற்றவன் நெடுங்காலம் உயிருடன் வாழும் நெறியாகும். (இம்மை மறுமை வீடு பேறுகள் எய்தற்கு இது ஒன்றுதான் வழியாதலால், 'உடம்பு பெற்றான்' என்றும், அது நெடிது நின்று அவை பெருகச் செய்து கொள்ளலாம் என்பதால், 'நெடிது உய்க்குமாறு' என்றும் கூறினார்.
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. 944
முன்னுண்டது செரித்து விட்டது என்பதை அறிந்து, பின் மிகப் பசித்து, உண்ணும் பொழுது உடம்புக்கு ஏற்றுக் கொள்ளாத உணவு வகைகளைத் தவிர்த்து உண்ண வேண்டும். உண்டது செரித்தாலும், அவற்றை உண்ணும் ஆசை குறையாது என்பதால் அதுவும் அறல் வேண்டும் என்றும், 'மிகப்பசித்து' என்றார். மாறு கொள்ளாமை என்பது உண்பவன் உண்ணும் அளவிலும், கால நேரத்திலும், சுவை வீரியங்களாலும் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆகும். அவையாவன முறையே வாத, பித்த, சயகபங்களாலான உடற் பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், காலையில் எதைச் சாப்பிட வேண்டும், இரவில் எதைச் சாப்பிட வேண்டும் என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும், தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போலவும் ஆகும். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் விரும்பியபடி துய்ப்பின், அதனால் நோயும் மரணமும் வருமாதலால், 'கடைப்பிடித்து' என்றார்.
உடல் பருமன் எப்போதும் ஆரோக்கியமான விஷயமில்லை. உயர் ரத்த அழுத்தம், கூடுதல் அளவு சர்க்கரை நோய், மூட்டுவலி என முதுமையில் வரும் பிரச்னைகளுக்கு உடல் பருமன்தான் காரணம். வயிற்றில் தொப்புளின் மீதான சுற்றளவு ஆண்களுக்கு 94 செ.மீ க்கு மேலும், பெண்களுக்கு 80 செ.மீ க்கு மேலும் இருந்தால் உடல் பருமன் இருப்பதாக தெரிந்து கொள்ளலாம்.
எடை அதிகரிக்காமல் இருக்க, மூன்று வேளை சத்தான உணவு தவிர நொறுக்குத் தீனிகள் கூடாது. ஆவியில் வெந்த உணவுகளை அளவாகச் சாப்பிடலாம். சர்க்கரை கலந்த உணவுகளும், எண்ணெயில் நன்கு பொரித்த, வதக்கிய உணவுகளும் சாப்பிடக் கூடாது. சமைக்கும் போதும் குறைவான எண்ணெயை உபயோகித்தால் போதுமானது.
சாப்பிடுவதற்கு சற்று முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து சாப்பிட உட்கார்ந்தால், சாப்பிடும் உணவின் அளவு குறைந்துவிடும். நம் வயிறு நிரம்பி விட்டது என நம் மூளை உணர 20 நிமிடங்கள் ஆகும் என்பதால், மெதுவாக சாப்பிடுங்கள். 'நொறுங்க சாப்பிட்டால், 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்' என்பது பழமொழி. நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தே இல்லாத கலோரிகளை மட்டும் தரும் மதுபானம் அருந்தக் கூடாது. உங்கள் உணவிற்கு சுவைதர பூண்டு, இஞ்சி, தக்காளி சேர்த்த துவையல், சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
குடிகெடுக்கும் குடிப்பழக்கம்
குடல்கெடுக்கும் மதுப்பழக்கம் - என்கிறார் கவிஞர் கந்ததாசன் என்ற சு. ஐயப்பன்.
எடை அதிகரிப்பதைத் தவிர்க்க தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி அவசியம். சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து, இரவு படுக்கப் போகும் முன் நடைப்பயிற்சி செய்யுங்கள். உடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாட்டுக்கு அடுத்த வழி, தவறாமல் செய்யும் உடற்பயிற்சியே. இதை கடைப்பிடித்தால், ஆரோக்கியமான உடல்வாகு நிச்சயம் என முதுமை நோய் நிபுணர் வ.செ.நடராசன் கூறுகிறார்.
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை யுயிர்க்கு. 945
மாறுபாடு இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினால் இல்லாது, பிணி வராத அளவில் ஒருவன் உண்ணும் பொழுது, அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் உண்டாகாது. உறுவதனை 'ஊறு' என்றார். துன்பமுறுவது உயிரேயாதலால் அதன் மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இவை நான்கு பாட்டாலும் உண்ணப்படுவனவும், அவற்றின் அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.
’சைவமே நலம் சைவமே பலம்
சைவமே ருசி சைவமே புசி’ என்றும்,
உயிரை வளர்க்க உயிரை கொன்று ஊண் தின்னாதே
கொன்றால் பாவம் தின்றால் தீராது’ என்றும்,
உன்குடல் என்ன விலங்கின் இடுகாடா?
விலங்கைப் போல விலங்கைத் தின்னாதே’ என்றும்,
இறைச்சி தின்றால் உடலில் கொழுப்பேறும்
இரத்தக் கொதிப்பால் இதயம் அடைப்பாகும்’ என்றும் கவிஞர் கந்ததாசன் கூறுகிறார்.
அடுத்தபடியாக கீழேயுள்ள குறளில்,
இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்குங்
கழிபே ரிரையான்க ணோய். 946
குறைவாக உண்பது நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவனுக்கு இன்பம் நீங்காது நிலைத்து இருப்பது போல, மிகுந்த அளவு பொருந்தாத இரையை உண்பவனிடம் நோய் நீங்காது நிலைத்திருக்கும் என்கிறார் திருவள்ளுவர்.
அவ்வாறே உண்டல்: அளவில் சிறிது குறைய உண்பதால் வாத முதலிய மூன்றும் தத்தம் நிலையில் மாறுபடாமல் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தில் இருக்கும். அதனால் அறம் முதலிய நான்கும் கிடைக்கப் பெறும். இரையை அளவின்றி உண்டு அதனால் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்' என்றார்.
உண்ணும்பொழுது ஒவ்வொரு சுவையுள்ள உணவுகளை எப்பொழுது உண்ணவேண்டும் என்பதை ’ஆசாரக் கோவை’ நூலின் ஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் ’கைப்புச் சுவையுள்ள கறியெல்லாம் கடைசியாகவும், தித்திக்கும் கறியெல்லாம் முதலாவதாகவும், பிற சுவைகள் உள்ள கறிகளெல்லாம் இடையிலும் முறைப்படி உண்ண வேண்டும் என்று கீழ்க்கண்ட பாடலில் குறிப்பிடுகிறார்.
கைப்பன வெல்லாங் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையா லொழிந்த விடையாகத்
துய்க்க முறைவகையா லூண். 25 - ஆசாரக் கோவை
சத்துள்ள ஆகாரமாக ஒரு வேளை மட்டும் சாப்பிடும் ஒருவனின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும் என்று எடுத்துரைக்கிறது சித்த மருத்துவம்.
"ஒரு வேளை உண்பான் யோகி
இரு வேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி"
உணவை ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே உண்டு அதிலேயே அப்படியே வாழத் தெரிந்தவன் யோகி எனவும், இரண்டு வேளை சாப்பிட்டு வசதியாக வாழ்பவன் போகி எனவும், மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி (நோயாளி) என்றும் கருதப்படுவான்.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். 947
தன் உடலுக்குத் தீமை செய்யும் உணவின் அளவறியாது, அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டிய உணவை வேண்டிய நேரத்தில் ஒருவன் உண்பானாயின், அவனிடம் நோய்கள் எல்லையின்றிப் பெருகும்.
நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 948
மருததுவன் நோயுற்றவனிடம் ஏற்படும் குறிகளால் (history and symptoms) இன்னது என்று அறிந்து, பின் அது வருகின்ற காரணத்தை (etiology) ஆராய்ந்து, பின் அது தீர்க்கும் (types of treatment like medicines and surgery) உபாயத்தினை அறிந்து, அதனைச் செய்யும் முறையில், பழைய மருத்துவர் செய்து வருகின்ற முறையில் தவறின்றிச் சரியாகச் செய்ய வேண்டும்.
(காரணம்: உணவு, செயல் என்ற இரண்டு. அவை நாடுதற்பயன் – நோயினையும், அது ஏற்படுத்தும் வகையையும் ஐயமறத் துணிதல். மருந்து செய்தல், உதிரங் களைதல், அறுத்தல், சுடுதல் முதலிய செயல்களெல்லாம் சேர்த்து 'அது தணிக்கும் வாய்' என்றார்.
சீனாவில் சியாபோ சியன் என்ற ஒரு 11 வயதான சிறுவனை அவனது தாயார் தொண்டை வலியும், மயக்கமும் இருப்பதாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவனது தொண்டையில் ஒட்டி இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருந்த 7 செ.மீ நீளமுள்ள நீர் அட்டையை மருத்துவர் எடுத்திருக்கிறார். பையனை விசாரித்ததில், அவன் சில வாரங்களுக்கு முன் சாலையோரத்திலிருந்து கிணற்றின் வாளியிருந்து நீர் அருந்தி யிருக்கிறான். அதிலிருந்த அட்டைப்பூச்சியைக் கவனிக்காமல் விழுங்கியிருக்கிறானெனத் தெரிய வந்தது.
இரு விகற்ப நேரிசை வெண்பா
பதினோ ருவயது பாலகன் தொண்டை
அதிகவலி கண்டு அழவே - மதியுடை
நல்மருத்து வர்பையன் தொண்டையி லேகண்டு
மெல்லயெடுத் தார்சலசூ சி! - வ.க.கன்னியப்பன்
சலசூசி – Water leech
உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல். 949
ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன், நோயுடன் வரும் ஒருவனுக்கு அவன் நோயைத் தீர்க்கும் உபாயத்தினைச் செய்யும்முன், நோயுற்றவன் சொல்லும் நோயின் அறிகுறிகளைக் (symptoms) கேட்டும், அவனது உடற் பாகங்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை (signs) அறிந்தும், நோயால் பாதிக்கப்பட்ட கால அளவினையும் (duration) கருதி, தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்ய வேண்டும்.
காலம் – தொடக்க, நடு, ஈறு (early, late, terminal) என்னும் அதன் பருவ வேறுபாடும் மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் (book knowledge), உணர்வு மிகுதியானும் (experience) அறிந்து செய்க என்பதை 'கற்றான் கருதிச் செயல்' என்றார்.
உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வானென்(று)
அப்பால்நாற் கூற்றே மருந்து. 950
பிணிக்கு மருந்தாவது நோயுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்குத் தரப்படும் மருந்து, அதனைப் பிழையாமல் கவனித்துக் கொடுப்பவன் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது.
அவற்றுள் உற்றவன் வகை நான்காவன: பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை.
தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை.
மருந்தின் வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களால் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை.
இயற்றுவான் வகை நான்காவன: நோயுற்றவனிடம் அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவையெல்லாம் கூடிய வழியில்லாமல் பிணி தீராது என்பதால் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார்.
முடிவுரை:
1. சுவை வீரியங்களாலும், அளவாலும் பொருத்தமானதும், மனமொழி மெய்களால் செய்யும் தொழில்களுக்கு ஏற்ற உணவை மிகாமலும், குறையாமலும் உண்ண வேண்டும்.
2. ஒருவன் ஏற்கெனவே உண்ட உணவின் அளவு, வகையை உணர்ந்து, தன் உடலுக்குப் பொருந்தாத உணவுகளைத் தவிர்த்து அளவான உணவினை உண்டால் அவன் உடலுக்கு மருந்து எதுவும் தேவைப்படாது.
3. உட்கொண்ட உணவு செரித்த பின், அடுத்த வேளை உணவை அளவோடு அறிந்து உண்பதுதான், அரிய மானிட உடலைப் பெற்றவன் நெடுங்காலம் உயிருடன் வாழும் நெறியாகும்.
4. முன்னுண்டது செரித்து விட்டது என்பதை அறிந்து, மிகப் பசித்து உடம்புக்கு ஏற்றுக் கொள்ளாத உணவு வகைகளைத் தவிர்த்து உண்ண வேண்டும்.
5. மாறுபாடு இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினால் இல்லாது, பிணி வராத அளவில் ஒருவன் உண்ணும் பொழுது, அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் உண்டாகாது.
6. குறைவாக உண்பது நன்று என்று அறிந்து உண்பவனுக்கு இன்பம் நீங்காது நிலைத்து இருப்பது போல, மிகுந்த அளவு பொருந்தாத இரையை உண்பவனிடம் நோய் நீங்காது நிலைத்திருக்கும்.
7. தன் உடலுக்குத் தீமை செய்யும் உணவின் அளவறியாது, வேண்டிய உணவை வேண்டிய நேரத்தில் ஒருவன் உண்பானாயின், அவனிடம் நோய்கள் எல்லையின்றிப் பெருகும்.
8. நோயுற்றவனிடம் ஏற்படும் குறிகளால் (history and symptoms) அறிந்து, பின் அது வருகின்ற காரணத்தை (etiology) ஆராய்ந்து, பின் அது தீர்க்கும் (types of treatment like medicines and surgery) உபாயத்தினை அறிந்து, தவறின்றி மருததுவன் சரியாகச் செய்ய வேண்டும்.
9. நோயுற்றவன் சொல்லும் நோயின் அறிகுறிகளைக் (symptoms) கேட்டு, அவனது உடற் பாகங்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளை (signs) அறிந்து, நோயால் பாதிக்கப்பட்ட கால அளவினையும் (duration) கருதி, தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் பொருந்தச் செய்ய வேண்டும்.
10. பிணிக்கு மருந்தாவது நோயுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்குத் தரப்படும் மருந்து, அதனைப் பிழையாமல் கவனித்துக் கொடுப்பவன் என்று அனைவரும் சேர்ந்து செயல்பட்டால் நோய் பறந்தோடும் என்பது உறுதி.