சூழல் காப்போம் சுகம் பெறுவோம்

சூழல் காப்போம் .... சுகம் பெறுவோம்....

எண்ணிலடங்கா கிராமங்கள்
கழிவுநீர் வெளியேற்றத்திற்கு
வழி ஏதும் அறியாமல்
அறிந்த வழிகளில்...

கால்வாய் ரயிலேற்றி
ஆற்றூருக்கும் ஏரியூருக்குமாய்
கழிவுகளனைத்தையும் வழியனுப்பி...
ஆறோ .. அல்லது ஏரியோ..
என்ன பாவம் செய்ததோ??
கால்வாயிலிருந்து
தன்வாய் வாங்கி களங்கப்பட்டு...
கலங்கியதில் கலங்கியிருக்கும்...

களங்கப்பட்ட நீர்நிலைகள்
சாபம் விட்டது போலும்
உண்டவர்க்கும்... தொட்டவர்க்கும்
தோற்று நோயும் தோல் வியாதியுமாய்...

நொய்யல் ஆற்றுப் படுகை
சாயப் பட்டறை கழிவுகளால்
நோய்ப்படுக்கையாகி....

பாசன ஏரிகளில் பாசானம் கலந்த
தொழிற்சாலைக் கழிவுகள்
இரவோடு இரவாக
சாயப்பட்டறை முதலாளிகளின்
நயவஞ்சக வேலைகள்
சட்டங்களின் கண்களில் மண்ணைத் தூவி...

நஞ்சைக் குடிக்கும் நஞ்சை நிலம்
அழுது புலம்புகிறது
"யாரும் கேட்பாரில்லையா...?"

கழிவுகளின் திணிப்புகளால்
திணறுகிறது விவசாய நிலம்...

"மலடாகிவிட்டோம்... மடிந்தபாடில்லை...
மனித இனமே உணவளிக்கவில்லை என்று
வருத்தம் கொள்ளாதீர்...
நீங்கள் உணவின்றி இறக்க நேரிடின்
உங்களை புதைப்பதற்கான
மயானங்களாகவாவது
எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்....

மாசு கட்டுப்பாட்டு சட்டங்கள் யாவும்
காலாவதி ஆனவர்களாய்
நான்கு சட்டங்களுக்குள் ...
வாருங்கள்
மாலை செலுத்தி
மரியாதை செய்வோம் ....

":தூய்மையான இந்தியா " திரைப்படம்
இயக்குனர் இல்லாத படப் பிடிப்புகள்
யார் யாரோ நடித்துவிட்டுப் போனார்கள்...
படம் வெளி வந்த சில நாட்களுக்குள்
படம் பெட்டிக்குள்.....

சுத்தப் படுத்தும் திட்டமாம்
நாளாக... நாளாக
சுத்தமாய் போய்விட்டது....

நாட்டுச் சுகாதாரம்
நாடகத்திலும் நயவஞ்சகத்திலும்..

வீட்டுச் சுகாதாரமும்
வீதிச் சுகாதாரமும் நம் கையில்
வீதியில் சிரிக்கும் குப்பைகள்
குப்பைத் தொட்டிகளுக்குள்
தங்களின் விதியை முடித்துக் கொள்ளட்டும்...

வெற்றிலையை குதப்பும்
வாய் மட்டும் சிவக்கட்டும்
வீதிகளும் பாதைகளும் சிவக்க வேண்டாம்...

மரண வாசல் இட்டுச் செல்லும்
வாய்ப்புகைக்கு மரண வாய்ப்பளிப்போம்

ஈயும் கொசுவும் இன்ன பிற வைரஸ் கிருமியும்
வசிக்க இடமின்றி தற்கொலை புரியட்டும்...

சுற்றுச் சூழல் தூய்மை காப்போம்
புற்றும் தொற்றும் காணாதொழிப்போம்...
ஆரோக்கிய வாழ்வில் ஆனந்தம் கொள்வோம்...

எழுதியவர் : சொ.சாந்தி (11-Jul-15, 12:11 pm)
பார்வை : 5899

மேலே