தயாபுரி

களைந்த கேசம், ஒட்டிய முகம் ,மெலிந்த சரீரம்
பொலிவான கண்கள்
முதுமையின் அனுபவக்கோடுகள்
முகத்தில்
தன்னம்பிக்கையுடன் புன்னகை ....
இதன் கலவை தான் தயாபுரி .....
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர்களுக்கு ஒரே மகளாய் பிறந்து இல்லறத்தில் நுழைந்து வலிகளை
தாண்டி ஆறு குழந்தைகளுக்கு தாயாகி , கணவனை இழந்து, இரண்டு குழந்தை செல்வங்களையும் இழந்து
தன் 72 வது வயதில் உழைப்பின் வியர்வையில் தினமும் நீராடி தன்னம்பிக்கையுடன் நடை போடும் தயாபுரிக்கு தன்மானம்
தான் பெரியது .
படிப்பறிவு இல்லை, பெற்ற செல்வங்களின் ஆதரவும் இல்லை.
ஆனால் சமுதாயதிற்கு தயபுரியின் கருத்து ஒன்றே ஒன்று தான்
இந்த உடல் இருக்கற வரை உழைக்கனும் , கடைசி வரை உழைக்கனும் !
தன் மானத்தோடு வாழனும் !
வெந்ததை சாப்பிடனும் !
வேகாம போயிடனும் !
தயாபுரி ஒரு சிறிய உணவகத்தில் பாத்திரம் தேய்த்து வருகின்றாள். மாத வருமானம் 7000 காலையில்
7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை .
பாத்திரம் தேய்த்து மாளாது . ஆனாலும் வலியை பொருட்படுத்த மாட்டாள் .
அவள் கூறும் வார்த்தைகள்
எதையும் இஷ்டமா செய்யனும்
கஷ்டத்தை
கஷ்டமா நினைக்க கூடாது !
தன் வருமானத்தில் 2000 ரூபாய் அருகில் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு கொடுத்து விடுவாள்.
என்னாலே உழைக்க முடியுது உழைக்கறேன் . பாவம் அவர்களால் ..... நான் மட்டும் வாழ்ந்தால் போதுமா ?
3000 ரூபாய் பக்கத்து வீட்டு மாமியிடம் கொடுத்து விடுவாள் அவளின் அந்தி கால சடங்கிற்கு
மீதி அவள் மகள் வீட்டிற்க்கு கொடுத்து விடுவாள் அவள் தங்கும் செலவிற்கு .
பேரன் கேட்டான் பாட்டி இந்த வயதில் இவ்வளவு கஷ்டப்படனுமா ?
அதற்க்கு அவள் பதில் சும்மா குந்தின்னு இருக்க சொல்றியா ?
3 வேளை காபி ஒரு வேளை இட்லி இது தான் தயாபுரியின் தினசரி உணவு .......
உணவகத்திற்கு விடுமுறை எடுத்தால் வசவு தான். என்ன கிழவி ! ஒழுங்கா வர மாட்டியா? நீ ?
எங்கே போயிட்டே ? இனிமே சம்பளத்தை பிடிச்சுடுவேன். அதிகார குரலில் .... உணவகத்தின் உரிமையாளர்
கேள்வியை தொடுத்தார் .
தயாபுரியின் பதில் ......
உதட்டோர புன்னகை தான் ...
சொல்லு சொல்லு ? நீ சொல்ற இடத்திலே குந்தின்னு இருக்கே !
நான் வேலை செய்யற இடத்திலே குந்தின்னு இருக்கேன்
அவ்வளவு தான் வித்தியாசம் !
பாத்திரங்கள் குமிந்தன . குறிக்கோள் உழைப்பு தான் அதனால் குறிக்கோளை நோக்கி நகர்ந்தாள் தயாபுரி !
ஒரு மாதத்திற்கு பின் ஒரு நாள் .....
அதி காலை 4 மணி
காலையில் படுக்கையை விட்டு எழ முடியவில்லை !
உடல் நெருப்பாய் கொதித்தது !
கண்களின் ஓரத்திலிருந்து
நீர் உருண்டோடி முகத்தின் வெப்பத்தில் காய்ந்து போனது ...
நாக்கு வரட்டியது ......
7 மணிக்கு வேலைக்கு போகனும்.......
ஒரு கிளாஸ் காப்பியை குடித்தாள். ......
தன் பேரனை உணவகத்திற்கு அழைத்து செல்லுமாறு கேட்டாள். !
அவன் அழைத்து சென்றான்
முனகி கொண்டே ...
என்ன கிழவி !
உடம்பு முடியலையா ?
அதிகார தொனியுடன்
உரிமையாளர் கேட்ட கேள்வி
காதில் பாதி தான் விழுந்தது !
பதில் எதுவும் கூற முடியவில்லை ......
பாத்திரம் அவள் உயரத்திற்கு மேல்
விழுந்து இருந்தது .
உட்கார்ந்தாள் பலகையில் ......
தண்ணீரை தொட முடியவில்லை .....
ஐஸ் கட்டியாய் இருந்தது ....
விரல்கள் நடுங்கியது ...
உடல் முடியாமல் இருந்தாலும்
உள்ளத்தின் வலிமையால் எல்லா பாத்திரங்களையும் தேய்த்து முடிக்கும் தருணத்தில் .....
நெஞ்சில் சுரீர் என்ற வலி ...
கைப்பையில் வைத்து இருந்த பாட்டிலை திறந்து தண்ணீரை ஒரு வாய் விட்டு கொண்டாள்
தொண்டையில் நீர் இறங்காமல் வெளியில் உருண்டோடியது . தலை தொங்கியது
கிழவி .....என்ன
தூங்கறே ! ஊட்டுலே தூங்கலியா ?
அதிகார குரல் தொடர்ந்தது.......
தன் இறுதி மூச்சு வரை
உழைத்து
உழைக்கும் இடத்தில்
உழைத்து கொண்டே
உயிரை விட்டாள்
தன்மான தயாபுரி ....
கூட்டம் கூடின ...
அய்யயோ ...
கிழவி செத்துடுச்சு ...
சூப்பர் கிழவி
என்னமா உழைக்கும் தெரியுமா
ஒரு காசு கூட வாங்காது யாருக்கிடேயும்
லீவே எடுக்காது
எல்லாருக்கும் தானம் வேறே செய்யும்
தான் செத்தா கூட யாருக்கும் செலவு இருக்க கூடாதுன்னு
காசு சேத்து வைக்கும் ....
த்சொ த்சொ ...
நல்லவங்களுக்கு
காலம் இல்லேப்பா !
பாவம் !! கிழவி
-----------------------------------------------------------------------------------------------------------------
எல்லா வார்த்தைகளும்
செயற்கையாய் இருந்தன
இயற்கையாய்
மரணத்தை
தழுவிய
தயாபுரிக்கு
வாழும் போது
விழுந்தாலும்
வீழாமல்
எழுந்து
வாழ்வதே
வாழ்வு .......
என்ற கருத்தை
உலகத்திற்கு
தன் எளிமையான
வைராக்கியமான
வாழ்க்கையின்
மூலம்
செதுக்கி விட்டு
சென்று விட்டாள்
தன்மான தயாபுரி !
*********************************கிருபா கணேஷ் ****************************