வலையில் விழுந்த மீன்கள்

“உன்னோட பைக் சவுண்டக் கேட்டாலே யேங் உயிரே ஏங்கிட்டத் திரும்பி வந்த மாதிரியிருக்குடா… நீயில்லாம என்னால வாழவே முடியாது போலிருக்குடா… எப்பவும் உங்கூடவே இருக்கனும் போல இருக்கு நீ என்னோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அந்த நேரத்துல வீணா வேறெதுவும் பேசி நேரத்த வேஸ்ட் பண்ணாதே கடைசி வரைக்கும் ஏங்கூட இப்படியெ இருப்பில்ல… உனக்கு ஏம்மேலப் பாசம் இல்லாட்டிக் கூடப் பரவாயில்ல சும்மா பாசமா இருக்குற மாதிரி நடிக்கவாவது செய் ஏன்னா? உன்ன விட்டா எனக்கு வேற யாருமே இல்லடா நான் உனக்கு அக்கா மாதிரி… ஃப்ரெண்ட் மாதிரி… ஏங் உன்னோட வெல்விஷ்ஷரா எப்பவுமே சாவுர வரைக்கும் இருப்பேன்டா… என்ன மட்டும் மறந்திடாதே ப்ளீஸ்…டா செரின்னுச் சொல்லேங்…யேங் செல்லம்ல்ல…யேங் பப்லுல்ல…”
எனச் சுஜாவின் மயக்கும் ஜால வார்த்தைகள் எல்லாம் பொய்யாகிவிட அவை திரும்பத் திரும்ப அவனது காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தன. பேருந்துகள், கனரக வாகனங்கள், மோட்டார் வண்டிகள் எனச் சாலையில் இரைந்தும் மனம் எங்கோ, பாதை எங்கோவெனத் தடுமாறிட அவளின் குரல் மட்டும் தொடர்ந்து ஒலித்தது. ஹெல்மட்டுக்குள் வாய்விட்டுக் கதறிய அழுகைக் கண்ணீர்க் கோர்வையாகத் தாடையில் வழிந்தது. மனம் நூறாய் நொறுங்கிட வார்த்தையேதும் இல்லாதவனாய். தனக்கென்று இவ்வுலகில் ஏதும் இல்லாதவனாய் முச்சந்திச் சிக்னலில் எல்லாம் முற்றுப் பெற்றதாய் நிற்க எதையும் துச்சமென்னும் அவனது இதயம் அவளின் பிரிவை மட்டும் ஏனோ? மிச்ச மெனக் கொண்டது.

அன்றொரு நாள் முதன் முதலாக அவளைச் சந்தித்ததும் இதே போன்றதொரு சிக்னலில் தான். செல்போனில்

“ஹலோ எங்க இருக்கீங்க?”

“சிந்தாமணிச் சிக்னலுக்கு முன்னாடிச் சிக்னல்லதான் இருக்கேங் ஃபைவ் செகண்ட்ஸ்ல வந்துடுவேங்”

“சீக்கிரம் வாங்க நாங் சிந்தாமணிச் சிக்னல்லத் தான் நிக்கிரேங்”

“ஓகே…”வெனச் சிகப்புச் சிக்னலில் பத்து நொடிகளைக் காட்ட அதுவரை பொறுத்திடாத அவனது ஆவல் சிக்னலை அத்துமீறியது. முன் பின் தெரியாத ஒருவள் அவனுக்காகக் காத்திருப்பது இதுவே முதல் முறை. இதயம் நிதானமின்றித் துடித்தது. பைக் சிந்தாமணிச் சிக்னலைத் தொட ஷோரூம் வாசலில் புடவைக் கட்டி ஒய்யாரமாய் நிறுத்தியிருந்த பொம்மைகளின் அணித் தலைவியாய் சுஜா நின்றிருந்தாள். அவளைப் பார்த்ததும் அவனை அறியாமலேயே அவனுள்ளீருந்த ஹீரோ வண்டியினை வளைத்து நிறுத்திக் கூலிங்கிளாசை உயர்த்தி

“எப்டி இருக்கீங்க?”

“ம்ம்ம்…நீங்க…! பப்லுவா…?

“ஆமாங்…”

“எப்டி என்னெக் கண்டுபுடிச்சீங்க?”

“சிந்தாமணிச் சிக்னல்ல நிக்குற ஒரே லேடி நீங்கதான் அதுவும் நம்ம ஊருத் தைலா சில்க்ஸ் பேக் வேற…”என அவளின் கைப் பையைப் பார்க்க

“ஓ…”வெனச் சுஜாவின் முத்துப் பற்கள் ஜொலித்தன. ஷோரூம் பொம்மைகள் ‘ஹீம்’ என வெறுப்பாய்த் தங்கள் முகங்களைத் திருப்பிக் கொண்டன. அடுத்து என்ன? எங்கே? என்பதறியாது அவனிருக்க அவளின் கருவிழிகள் இரண்டும் குறுகுறுவென்றன.

“என்ன சொல்லுங்க?”என்றான்

“ஒண்ணுமில்ல… டி.நகர் வரை போகனும் ஒரு முக்கியமான வேல ஒண்ணு இங்கெ யாரையும் எனக்குத் தெரியாது நீங்க ரொம்ப நம்பிக்கையான ஆளுன்னு வினோத்து தான் உங்க காண்டாக்ட் நம்பரைக் கொடுத்தாரு…”

“ம்ம்…த் தெரியும் ஏங்கிட்டயும் சொன்னாரு… ம்ம்… நீங்க இப்ப டி.நகர் தானே போகனும் வண்டில ஏறுங்க” என மறுநொடி அவள் பின்புறம் ஏறி இருக்க.
(பச்சைச் சிக்னல் போட்டும் பழைய நினைவுகளில் மூழ்கியவனாய் அவன் நிற்க. வாகன ஓட்டிகள் ஹாரன் சவுண்டில் அவசரப்படுத்த சுதாரித்தவனாய் சிக்னலைக் கடந்தான்)
காற்று இதமாய்த் தழுவிட மீண்டும் அந்தப் பழைய நினைவுகள் அவனை விடாதுத் துரத்தித் தொற்றிக் கொண்டன. இதுவரை எந்தப் பெண்ணையும் சுமக்காத அவனது பைக் பச்சைச் சிக்னலில் அவளைச் சுமந்துச் செல்ல அவளைப் பற்றிப் போனில் வினோத் சொன்னவை யாவும் அவனது நினைவலையில் வந்து பேசின.

“அவக் கிட்ட உங்களப் பத்தி ரொம்பவே எடுத்துச் சொல்லியிருக்கேங்”

“என்னான்னு?”

“அதாங்…ப் பப்லு ரொம்ப நல்லவரு… வல்லவருப் பக்கா ஜென்டில் மேன்னு உனக்குப் பியூட்டி டிப்ஸ்ஸெல்லாம் கூட அவருச் சொல்வாரு, ரொம்ப ரசனைக்காரரு, சென்னையில உனக்கெங்காவது எதாவது வாங்கனும்…ப் போகனும்னா அவருக்கிட்டச் சொல்லுக் கூட வந்து ஹெல் பண்ணுவாருன்னு”

“அய்யய்யோ...! ஏங்க பியூட்டி டிப்ஸீக் கொடுப்பேன்னாச் சொன்னீங்க?

“ஆமாம்மா…அதச் சொன்னப் பிறகுதானே அவ ஓகேன்னா”

“ஏங்க இப்படியெல்லாம் என்னெ மாட்டி விடுறீங்க”

“பப்லு உங்களுக்காக இல்ல இன்னும் ரெண்டு நாள்ல நாங் அங்கெ வர்ரெங் உங்க வீட்ல தான் அவக்கூட வந்து ஸ்டே பண்ணப்போறேங் முன்னப் பின்னப் பழக்கமில்லாதவங்க வீட்லத் தங்கமாட்டேன்னுட்டா அதனாலத் தாங் இந்த ஏற்பாடெல்லாம் நீங்க நாங் வர்றதுக்குள்ள கொஞ்சம் அவக்கூட நல்லா மிங்கிள் ஆயிடுங்க என்ன?”

“ம்ம்…வினோத்… நாங் எப்டி…?”

“இந்தக் காலத்துலயும் ஏங்க இப்டியிருக்கீங்க நாங் சொல்றதக் கேளுங்க அவக் கூப்ட இடத்துக்கு மட்டும் போங்க அவளே நல்லா வாயளப்பா நீங்க போன போதும் செரியா?

“ம்ம்…செரி…பாக்குறேங்…”

“பாக்குறேங் கீக்குறேங் இல்லக் கண்டிப்ப்ப்பா போறீங்க…”
வினோத்தின் கட்டளைகள் அவனை வலம் வர போக்குவரத்துச் சாலையை அடைத்துக் கொண்டு வழித்தேடி முழித்தன.

“என்னாச்சு?” என்றாள்

“ட்ராபிக் ஜாம்”

“உக்கும்… சென்னைய்ல எங்கப் போனாலும் இந்த ட்ராபிக் தொல்ல வேறெ எப்டித்தான் நீங்கெல்லாம் இங்க இருக்கீங்களோ என்னெ இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வருமா… ச்சே…”எனச் சலித்துக் கொண்டாள். ஊர்வாசிகளுக்குச் சகித்துக் கொள்ள முடியாத சூழ்நிலைகள் இது. நகரத்திற்கு வந்த ஆரம்பத்தில் அவனுக்கும் ஏற்பட்ட அதே சலிப்பை எண்ணி பப்லு தனக்குள் சிரித்துக் கொண்டான். பொறுமையிழந்தவளாக

“இதோ இந்த ரோடு எங்கப் போகுது?”என அதிகம் போக்குவரத்தே இல்லாத இன்னொரு சாலையைப் பார்த்துக் கேட்டாள்.

“இது… பீச்சுக்கு”

“ஐ…! பீச்சுக்கா…”என வாயைப் பெரிதாய் பிளந்தாள். அதை அவன் வண்டியின் சைடு மிர்ரரில் ரசித்திருக்க. சிறு மௌனம் யோசித்தாள். மிர்ரரில் நோட்டமிடுபவனைப் பார்த்து
“நாம பீச்சுக்கே போயிறலாமே அப்புறங் வேணா ஒரு நாள் டி நகர்ப் போயிக்கலாம்” என ஆவலில் அதிரச் சொன்னாள். அவளின் ஆசைக்கு வண்டியைத் திருப்பினான். முக்கியமான வேலைகளையெல்லாம் காற்றில் முந்தானையோடு பறக்கவிட்டு ஒரு குழந்தையாய் அமர்ந்திருந்தாள். சிறிதில், சில்லென்றக் காற்றுத் தழுவிடக் கடல் அலைகள் ஒன்றை ஒன்று ஓயாமல் துரத்திப் பிடிக்க, ஒரு குழியிலிருந்து மறு குழிக்கு நண்டுகள் ஓடி விளையாடின. வானம் மாடர்ன் ஆர்ட் வரைந்திருக்க, பட்சிகள் கால்களை நீரில் உரசிப்பறந்தன. மணல் பரப்பெங்கும் மகிழ்வானப் பாத சுவடுகள் பதிந்திருக்க. அதில் இவர்களது சுவடும் ஒன்று கலந்தது. கரையின் நிசப்தத்தில் இருவரும் அமர்ந்திருக்க அலைகள் சப்தமாய்ப் பேசிச் சிரித்தன. வானமும், கடலும் ஒன்று சேரும் அந்த மைய அழகை ரசித்தவனாய் அவளைப் பார்த்தான். ஒவ்வொரு அலையின் வேகத்தையும், உயரத்தையும் அளந்து அதிசயித்திருந்தாள். காற்று ஏகந்தமாய் மணல் பரப்பினை ஊதிச் செல்வதும், சில வேளைகளில் அவளது புடவையைச் சீண்டி விளையாடுவதுமாகவே இருக்க. அவளின் வெண்ணிற மேடுகள் கண்களை மட்டுமல்ல மனதையும் கூசியது.

“கடலை… வேர்க்கடலை…” எனக் கூவி வந்தவனைப் பார்த்ததும் பப்லுப் பர்ஸை எடுக்க அதற்குள் வேண்டாமெனச் செய்கையில் அந்தக் கடலைகாரனை அப்புறப்படுத்தினாள். சிறு நாழியில்

“சுண்டல்… சுண்டல்…சூடான கேரட் மாங்காய்ச் சுண்டல்…”வர அவனது பர்ஸ் போனியாகமல் பாக்கெட்டுக்கே திரும்பியது.

“பீச்சுக்குன்னு வந்தா இவுங்கத் தொல்லை வேற ச்சே…”வெனப் பல நாள் வாடிக்கைப் போல் வெடித்தாள். ஃப்.எம் ரேடியோவாய் இடைவிடாதுப் பேசிய அவளது கீச்சுக் குரலும், முத்தானப் பல் வரிசையும் அவனைக் கிறங்கடித்தன. அதற்குள் காற்று அவளது அழகை மீண்டும் ஒரு முறைச் சீண்டியது. இம்முறை புடவையைத் திருத்த சோம்பலுற்று இருந்தாள். அவனது ரத்தம் சூடானது. கண்கள் வேறெங்கும் விலக மறுத்தன இறைவனது படைப்பின் உன்னதத்தை அக்கணம் அவனால் முழுதாய் உணர முடிந்தது.

“அக்கா சுண்டல் வாங்கிகங்க…மாங்காய் சுண்டல்”எனப் பொடியன் நெற்றி விபூதியில் தீர்க்கமாயிருக்க, கையில் சுண்டல் வாளியைச் சுமந்துப் பரிதாபமாய் நின்றான். புடவையைத் திருத்தியவளாய் பொடியனை ஊற்று நோக்கி இருந்தாள் எப்படியும் வாங்கப் போவதில்லை எனப் பப்லு ஆர்வம் இல்லாமல் வேடிக்கையில் ஆழ்ந்திருக்க. பொடியனிடம் அவள்

“நீ ஸ்கூலுக்கெல்லாங் போறதில்லையா?”

“போயிட்டு வந்துதாங்க்கா இங்க வர்ரேங்…”

“வீட்ல உங்க அம்மா அப்பாவெல்லாம் என்னடாப் பண்றாங்க?

“அம்மா தான் சுண்டல் விக்க அனுப்பறதே…”
சுண்டல் பையன் கிண்டலாய்ச் சொல்ல

“அப்போ…அப்பா?”

“அப்பா எங்களை வுட்டுட்டுப் போயிட்டாருக்கா…”என்றான். தொட்டாச் சிணுங்கியாய் அவளின் முகம் துவண்டது. சிறு அமைதி. ஓயாத அலைகளைப் போல அவனும் ஓயாது

“அக்கா சுண்டல்…”எனச் சுண்டலைத் தலையில் கட்டுவதிலேயே கண்ணாய் இருந்தான்.

“செரி…க் கொடுறா”என்றாள்
சூடான சுண்டல் பொட்டலங்கள் பப்லுப் பர்ஸைச் சுட

“உங்க அப்பா எங்கடாப் போனாரு?”என்றாள்

“ஏங் மூணாவது தங்கச்சி பொறந்ததும் எல்லாம் பொம்பளப் புள்ளயாவே பெத்துட்ட இனி ஊங்கூட இருந்தா தரித்ரம்னு எங்கம்மாவ வுட்டுட்டு வேற கலியாணம் பண்ணிகின்னு போயிட்டாருக்கா…”

“என்ன! வேற கல்யாணமா…” எனக் கண்களில் நீர் தெரிக்கச் சிரித்தாள்.

“செரி…வர்ரேங்க்கா…”எனச் சுண்டல் பையன் அடுத்த ஜோடிகளிடம் சுண்டல் கடையை விரித்தான். இருவரும் சிரிக்க. அலைகளும் சேர்ந்து சிரிக்கச் சத்தம் பேரொளியானது. காற்று அவளைத் திரும்பக் கலைக்காதா என அவன் கண்கள் காத்துக் கிடக்க ஏனோ! இம்முறை அவளைப் பூவென மென்மையாய் வருடி அவனுக்கு வன்மையைச் செய்தது.

“மல்லி… ஜாதிமல்லி… ரோஜாப் பூ…பூ வாங்கிக்க கண்ணு ஜாதிமல்லி இருக்கு ரோஜா இருக்கு“என வெற்றிலையில் வாய் சிவந்து நின்றிருந்தாள் பூக்காரி. சுஜா சிரிப்பைக் கட்டுப்படுத்தியவளாகப் பூக்காரியிடம் வேண்டாமெனச் செய்கைக் காட்டினாள்.

“பூவ வேண்டான்னு சொல்லாத கண்ணு நாளுங்கிழமையுமா வச்சுக்கக் கண்ணு”என வற்புறுத்தி ஒரு முழப்பூவை அளந்தாள் பூக்காரி. சுஜா

“வேண்டாங்குறேங்ல…”என மறுத்தும் அந்தப் பூக்காரிப் பூவைக் கட்டாயப் படுத்தித் தலையில் வைத்தும் விட வேண்டா வெறுப்புடன் உட்கார்ந்திருந்தவள். பூக்காரி நகர்ந்த மறு கணமே தலையில் வைத்து விட்டப் பூவை எடுத்துக் கடலில் வீசினாள்.

“வேண்டாங் வேண்டாங்குறேங் வெச்சுட்டுப் போறா”எனக் கோபமாய்த் திட்டித் தீர்த்தாள். பப்லுவுக்கு ஒன்றும் புரியாது முழித்தான் அதற்காகப் பூவை ஏன்? எறிந்தாள் அவளின் முகம் சிவந்திருக்கக் காரணம்? கேட்கத் தயக்கமாய் இருந்தது. அவன் ஒன்றும் பேசாதிருக்க அவள்

“போவோமா…” என்றாள்

“ம்…”எனப் புறப்பட அவள் வீசி எறிந்தப் பூவை அலைகள் கரைச் சேர்த்திருந்தன. மணற் பரப்பெங்கும் ஆரவாரமானச் சுவடுகளிருக்க இரு மௌனச் சுவடுகள் மட்டும் நடந்திருந்தன.

இரவு அவனைக் கொன்றது பூவை ஏன்?வீசினாள் அவளுக்குப் பூக்கள் மீது என்ன வெறுப்பு? பூவென்றால் பிடிக்காதா? பெண்களைப் பூக்களுக்கு இணையாக வைப்பார்களே ஏன்? அப்படிச் செய்தாள்? இல்லை வேறெதுவும் காரணம் இருக்குமா?” என அவனுள் பல கேள்விகள் கேட்டுத் துளைத்தன. கண்கள் அயர்ந்திட. வீட்டு அழைப்பு மணி டிங்…டாங் என்றது. தூக்கத்தில் அவன் ஆழ்ந்திருக்க டிங்…டாங்…டிங்…டாங்… என அழைப்பு மணித் தூங்க விடாது தொல்லைக் கொடுத்தது. கதவைத் திறக்க வினோத்

“என்ன பப்லு நல்ல தூக்கமா?”

“ஆமாங்”

“ப்ப்பெ…”எனப் பின்னாலிருந்து பப்லுவை பயமுறுத்தியதாகப் பெரிதாய் சிரித்தாள் சுஜா. கலகலவென அவளது கம்மல்களும், தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூ மொட்டுக்களும் கைகொட்டிச் சிரித்தன. ஆம், அவைகள் பரிகாசப் பார்வையில் ‘நேத்து உன்னை ஏமாத்திட்டோங்ல்ல…’எனப் பப்லுவை கேலிப் பார்வைப் பார்த்தன.

“என்ன பப்லு நீங்க இங்க தனியாவாத் தங்கியிருக்கீங்க?” என்றாள்

“ஆமாங்”

“நீங்க ஃபேமிலியாவுல்ல தங்கியிருக்கீங்கன்னு நெனைச்சேங்!”
அதற்குள் வினோத் உடைகளைக் கலைந்து இடுப்பில் டவலுடுடன் டாய்லெட்டுக்குள் அவசரமாய்ப் புகுந்தான்.

“பப்லு டாய்லெட் சுவிட்ச் எங்கெருக்கு?”உள்ளீருந்து கத்தினான்.
வெளியிலிருந்து சுவிட்சை பப்லு தட்ட உள்ளீருந்து

“தாங்க்ஸ்” எனச் சத்தம் வந்தது
டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் சுஜா அவள் அழகை மேலிருந்து கீழாக ரசித்துக் கொண்டிருந்தாள். கண்ணாடியின் ஓரத்தில் பப்லு அரை நிர்வாணமாய்த் தெரிய ஓடிச்சென்று டிசர்ட்டிக்குள் புகுந்து கொண்டான். வெளிக்கதவில் தொங்கிக்கிடந்த பால் பாக்கெட்டை எடுத்து வந்தவன் கண்ணாடியில் லயித்திருந்தவளிடம்

“உங்களுக்கு டீயா…? காஃபியா…?”

“காஃபி”என்றாள்

ஸ்டவ்வை பற்ற வைத்தான். என்னெ பேச்சுலர் வீட்ல காஃபியா! சுவரஸ்யமாகிடக் கிச்சனில் இருக்கையைத் தேடிஅவள் கண்கள் அலைந்தன. கிச்சன் மேடையில் அமர முயன்றாள் உயரம் எட்டவில்லை மிக அருகில் அவள் அமரப் போவதை கணித்த அவனுள்ளீருந்த ஹீரோ பதட்டமானான் சட்டெனக் கீழே கிடந்த முக்காலியைக் காலால் நகர்த்தி

“இதுல ஏறி உக்காருங்க”என

“ஓ…தாங்க்ஸ்” என அவள் அதில் காலை ஊணி ஏறி அமர்ந்தாள். அவளது வாசனை மூளையைக் கிளறியது. அவனுள்ளிருந்த காமுகன் வெளியே எட்டியவனாய் ‘ச்சே நல்ல சான்ஸ் அவளோட இடுப்பக் கையால அப்படியே தூக்கிச்சே… மிஸ் பண்ணிட்டியேடா ஸ்டுபிட்… நான்சென்ஸ்…’என்றது

“ஹலோ…” விரலைச் சுண்டி “என்ன அப்டியொரு யோசனை?” என்றாள்

“ம்ம்…ஓண்ணுமில்ல…”என இருப்பதாக அவன் தலைக் கணமாக அசைந்தது

“நீங்களே சமையல் பண்ணுவீங்களா?”

“இல்ல…இல்ல… டீ காஃபி மட்டுந்தான் இங்க, மத்ததெல்லாங் வெளியதாங்”

“ஓ”வென உதட்டைக் குவித்தாள். டாய்லெட்லிருந்து வெளியே வந்த வினோத்

“மாறுகோ…மாறுகோ…மாறுகையி…
அடி ஜோருகோ…ஜோருகோ…ஜோருகையி…
ஆஹா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேங்
வாடியேங் கப்பக்கெளங்கே…”என அவளைப் பார்த்துப் பாட அதற்கவள்

“என்ன கப்பக்கெளங்க?”எனக் கோவைச் சரளாவைப் போல் கீச்சிட, நகைச்சுவையில் மூவரும் கலக்கக் காஃபி கப்பில்கலந்தது.

“சிகரெட் இருக்கா பப்லு?”என வினோத் கேட்க

“இல்ல…வாங்கிட்டு வற்றேன்”என ஜீன்ஸை மாட்டிக் கொண்டு பப்லு வீட்டிலிருந்து வெளியேறினான். சிறிதில், சிகரெட் பாக்கெட்டுடன் வீடு திரும்பக் கதவுகள் தாளிடப் படாமல் திறந்துக் கிடந்தன. ஹாலில் மின் விசிறி மட்டும் அனாதையாய்ச் சுற்றியிருக்க இரண்டு கப் காஃபியிலும் ஆடைப் படிந்திருந்தது. படுக்கையறைக் கதவுகள் கப்சுப் என மூடியிருந்தன. கதவைத் தட்டினான்

“வினோத்… வினோத்…”எனப் பதிலும் இல்லை திறக்கவும் இல்லை மின் விசிறியை நிறுத்தி விட்டு முக்காலியில் உட்கார்ந்தவனாய் சிகரெட்டைப் பற்ற வைக்க நாழிகள் கடந்தன கதவுகள் திறந்தபாடில்லை. ஏதோ அவனைத் தனிமை கொன்றது. மீண்டும் ஒரு சிகரெட்டில் கொள்ளியிட்டான் தனிமையில் வியர்வை வழிய தன் சுவாசமே புகையாகித் தன்னை அழுத்த கொஞ்சமாய்ச் சுவாசித்த வாசல் கதவுகளை முமூதாய்த் திறந்தான் படாரெனப் படுக்கையறைக் கதவுகளும் திறந்தது. உள்ளிருந்து வினோத் முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் எடுத்தவனைப் போல வியர்க்க விறுவிறுக்க வெளியில் வந்தவன் பப்லுவின் கையிலிருந்த சிகரெட்டினைப் பிடுங்கித் தம் கட்டினான். தலைக்கு மேல்ரெயில் வண்டியாய் ஊதிவிட்டு முழுத் திருப்தியடைந்த களிப்பில் சோம்பல் முறித்தான். மார்பு முடிகளில் சிக்கியிருந்த பூவிதழ்களைத் தட்டி விட்டபடி நக்கலாய் பப்லுவை பார்த்துச் சிரித்தான். பெட்ரூமைப் பார்த்து ‘என்ன?’ எனப்புருவங்களை உயர்த்திட. முன் அனுபவம் இல்லாத பப்லு அரைமனதாய் தலையசைக்க ‘நீயெல்லாம் சுத்த வேஸ்ட்’என்பதைப் போலப் பப்லுவை கீழிறங்க பார்த்தான். அசடு வழிந்துக் கொண்டிருந்தவனைப் படுக்கையறைக்குள் அழைத்துச் சென்றான். தயக்கத்துடன் பப்லு உள்ளே செல்ல டி.வியில் ஊமைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அதன்ஒளியளவு படுத்திருந்தவளின் மீது கூடிக் குறைந்திருக்கப் பெட்ரூம் விளக்குகளை வினோத் எறியவிடப் பளீரென ஓளி வெள்ளத்தில் அலங்கோலமாய்க் கிடந்தவளின் முழு நிர்வாணமும் கண்களைக் கூசியது. கதவருகில் கிடந்த காலி மதுபாட்டில்கள் காலில் இடற, அவள் தூக்கம் கலைந்து கூசியக் கண்களுடன்

“லைட்ட ஆஃப் பண்ணுங்க வினோத்…ப்ளீஸ்…”எனப் போதை மயக்கத்தில் உளறினாள். வினோத் வெளிச்சத்தை அணைத்துப் பப்லுவை உள்ளே தள்ளிக் கதவை வெளியே தாழிட்டான். அலங்கோலமாய்க் கிடந்த அவளதுஅருவருப்பான உள்ளாடைகள் பப்லுவை வெளியே பிடித்துத் தள்ள. வினோத் நம்மைக் கையாளாகாதவன் என நினைத்துவிடுவானோ என்கிற ஆண்மை பயத்தில் செய்வதறியாது உள்ளேயே அனைத்தும் உறங்கிக் கிடக்க அவனும், டி.வியும் விழித்திருந்தனர் திடீரென

“ஆ…ஆ…”வெனக் காலைப் பிடித்தவளாய்த் தூக்கத்தில் அலறினாள். மெலிதாய்ப் பரவியிருந்த வெளிச்சத்தில் அவளது கால்களைத் துழாவிப் பிடித்துக் கைகளைப் பாதத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் முட்டியைத் தொட்டிருந்தான்

“ஹாங்… அங்கதான் ஷ்ஷ்ஷ்…”எனத் தவித்தாள். அவன் கைகளால் மென்மையாய் நீவிடச் சற்றே நிம்மதியனாள். அந்தவெளிச்சத்தில் அவளின் கைகள், கால்கள் அங்கங்களை மறைத்திருந்தும் மீதங்கள் அவனை உசுப்பேத்தியது. முட்டியிலிருந்த கைகள் அவனை அறியாமலேயே மேலே எறும்புற

“தண்ணீ…வினோத் தண்ணீ…வேணும்”எனக் கைகளை நீட்டினாள். வினோத்தென்று இருப்பவளிடம் அனுமதியின்றித் தொட்டிருப்பதை நினைத்துப் பப்லுவுக்குப் பகீரென்றது.

“தண்ணீ…த் தண்ணீ…”எனத் தாகத்தில் தவித்தாள். காலியான குவாட்டர்ப் பாட்டில்களிடையே ஒரு வாட்டர்ப் பாட்டிலும் இருந்ததாக ஞாபகம் இருட்டில் தேடி எடுத்தான் அதிஷ்டவசமாக அதில் கொஞ்சம் நீர் இருக்க அதை அவள் படுத்தவாறேபிடித்துக் குடித்தாள் சில நீர்த்துளிகள் அவளது மேடுகளில் வழிந்து மையமாய்த் தொப்புள் குழிக்குள் உருண்டோடியது. அவனுக்கு அது முதல் காட்சி. அவளது தாகம் தனியப் பப்லுவின் உடல் தாகம் எடுத்தது. அவனுள்ளிருந்த காமுகன் எட்டியவனாய் ‘ஏய் இது நல்ல சான்ஸ்டா மிஸ் பண்ணிடாதே’ எனத் தூண்டிட டிசர்ட்டையும், ஜீன்ஸையும் கழற்றித் தூர வீசினான். அவளின் மேல் கையை வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் மேலே முன்னேற அவனது சுவாசச் சூட்டில் அனல்பறக்க அவனைப் பிடித்துத் தூரத் தள்ளினாள். திரும்பவும் அவளை நெருங்க அவனுள்ளீருந்த ஹீரோ எட்டியவனாய்‘டேய்… வேண்டாங்குற நீ திரும்பவும் போய் அசிங்கபடாதே வேண்டாம் அது டீசண்ட் இல்ல வுட்ரு’எனத் தடுத்தது.உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தூரமாய் விலகித் தரையில் சூடாகிக் கிடந்தான். கைகளில் தட்டுப்பட்ட புடவையை அவளின் மீது எறிய அவளது நிர்வாணத்தை அது போர்த்திக் கொண்டது. டி.வியும் அவனும் மீண்டும் தனிமையில் விழித்திருந்தனர். சிறிதில் பப்லு அயர்ந்திட, மின் விளக்கு வெளிச்சம் கண்களைக் கூசியது. தலைக்கு மேல் உள்ள முகக் கண்ணாடியில் தலைவாரியபடி ரேடியோ எப்.எம்மில் ஒலித்த பாடல் வரிகளைத் துரத்திப் பிடித்துப் பாடியிருந்தாள் பாட்டில் ஸ்ருதி விலகி அது மின் விசிறிச் சத்தத்தில் ஒத்திருந்தது. படுக்கையறைப் படுச் சுத்தமாய் மாறியிருக்க டி.வி தூங்கிக் கொண்டிருந்தது. அவள் குளித்துப் புதிதாய் பூத்திருந்தாள். பூஜை அடுக்கில் ஊதுவர்த்திகள் நறுமணத்தை ஊதிக்கொண்டிருந்தன. வறண்டாவில் வினோத் செல்போன் உரையாடலில் கலவரமடைந்திருந்தான். வியர்வையில் குளித்திருந்தவனின் சிகரெட் கங்கும்; கண்களும் சிவப்பாய்க் கணத்தது. சுஜாவும் வெளியே எட்டினாள். அவனால் எதையும் யாரிடமும் பகிர முடியாதவனாய் இருக்க

“எல்லாம் சரியாகிடும்”எனப் பப்லுத் தேற்ற

“எவ்வளப் பெரிய ஆளு நீங்க இந்த மாதிரிச் சின்ன விஷயத்துக்கெல்லாம் போயி என்ன வினோத்“என அவன் மேல் வழிந்திருந்த வியர்வை ஓட்டத்தைத் துண்டினால் ஒத்தினாள் சுஜா. அவனது கண்கள் வெறித்து இருந்தது. வாய்வழியேவந்த சிகரெட் புகை மேக மூட்டமாய் நகர, அவனது நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன. அது ஒரு பரப்பான காலை நேரம் அவனக்குச் சொந்தமான மருந்துக் கடையில் கூட்டம் நிரம்பி வழியக் கடைப் பையன் அன்றென லீவு எடுத்திருந்தான். கடையில் அவசர உதவிக்கென யாரும் இல்லாதிருக்கத் தனியாளாய்க் கிடந்துத் தவித்தான். இதில் வழக்கத்திற்கு மாறாய் ஒருபுதிய மருந்தினை டாக்டர் எழுதிவிட இல்லை…ச் சுழித்துவிட மருந்துச் சீட்டிடம் மன்றாடினான். அந்த டாக்டர் உலக மொழிகளிலேயே இல்லாத ஒரு புது மொழியில் சுழித்துச் சுழித்துதான் எழுதுவார். அதுவும் புதிய மருந்தென்றால் சொல்லவே வேண்டாம் மெடிக்கல் ஷாப்பில் பல மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டால் ‘சீட்ட எடுத்துட்டு வாங்க’ன்னு வெறுப்பேத்துவார். கேட்டுவர கடையில் வேறு ஆளில்லை என்ன செய்வதறியாது

“ம்ஹீம்… இது என்னான்னுப் புரியலை நீங்க போய் டாக்டருட்ட இது என்ன மருந்துன்னு கேட்டு வாங்க”என மருந்துச் சீட்டைத் திருப்பிக் கொடுக்க அது அந்த மூதாட்டியின் கைகளில் நடுக்கமெடுத்தது. அவன் மனம் கேட்காது “செரி நீங்க இப்டி ஓரமா உக்காருங்க நாங் போய்க் கேட்டு வர்ரேங்”எனச் சீட்டை நடுக்கத்திலிருந்து பிடுங்கியவனாய் சென்று டாக்டரின்அறைக் கதவுகளைத் தட்டினான். அவை சின்னதாய்த் திறக்க அதிலிருந்து

“என்ன?”வென மையிட்டக் கண்களில் கருவிழிகள் பேச புருவங்களை உயர்த்தி முகத்தை மட்டும் வெளியே எட்டியிருந்தாள் ஒரு நர்ஸ்.அவளைப் பார்ததும் வினோத் எல்லாம் மறந்தான்.

“டாக்டர்…”என்ற வார்த்தையைத் தவிர அவனுக்கு வேறேதுவும் வரவில்லை. கையிலிருந்த சீட்டைப் பார்த்தவள்

“ஓ…பழையப் பேஷண்ட்டா…?”

“இல்ல… நாங் மெடிக்கல் ஷாப்புலருந்து வர்ரேங் ஒரு சின்ன டவுட் ஒன்ணுக் கேக்கணும்…”

“இருங்க”எனக் கொஞ்சத்தையும் படக்கென மூடிக் கொண்டாள். ஏனோ மனம் மறுபடியும் அவளைக் காண ஆவலைத் தூண்டத் திரும்பக் கதவுபடாரெனச் சத்தமாய்த் திறந்தது அதில் மையிட்டவள் இல்லை சீனியர் நர்ஸ் கண்ணம்மா வாய் நிறையப் பல்லுடன் சிரித்திருந்தாள் அவனுக்குக் கொஞ்சமும் சிரிப்பு முட்டவில்லை போலியாய்ச் சிரித்தான்.

“வினோத்தா…! சீட்டக் கொடு இதுல எந்த மருந்துப்பா?”

“ரெண்டாவதா இருக்கே… அதாங்க்கா”

“செரி இரு கேக்குரேங்” கதவுகள் திரும்பப் படாரென்றது. அந்த மையிட்டவளின் நினைவில் ஆழ்ந்தான்.

“ஹலோ… சார்…”என அழைக்க அதே மையிட்டவள் மாற்று வழிப் பாதையில் நோயாளியை வீல் சேரில் தள்ளி வர “கொஞ்சம் வழி விடுங்கப்ளீஸ்…”என அவசரப்படுத்தினாள். அந்தக் குறுகியப் பாதையில் அவன் சுவரொடு சுவராய் ஒட்டியிருக்க அவளது வாசனை நாசியை இழுத்துச் சென்றது. அவளை ரசிக்கக் கண்களை அகலமாய்த் திறந்தான். கதவிலிருந்து படாரெனக் குறுக்கிட்டக் கண்ணம்மா

“இந்தா வினோத்து… சாருப் பழைய மருந்தையே திரும்ப எழுதிட்டாரு”என மருந்துச் சீட்டுடன்
இலித்தாள்

“தாங்க்ஸீக்கா”என கண்ணம்மாவிடமிருந்து விலகித் திரும்ப அந்தக் கண்ணழகியைத் தேடினான் அதற்குள் அவள் தொலைவில் மறைந்தாள். வெளியே காத்திருந்தகடைசி நோயாளியையும் டாக்டர் அறைக்குள் படாரென அடைத்துக் கொள்ள. அவன் மட்டும் ஏனென அறியாது தனிமையில் அவள் சென்றபாதையைப் பார்த்து நின்றிருந்தான். கடைக்குத் திரும்பப் பரபரப்பான சாலையைக் கடந்தவன் அவள் நினைவில் அனைத்தையும் மறந்தான்.படாரென்றச் சத்தமும் அவளின் முகமும் அவன் கண் முன்னே வந்து வந்து நின்றது. கவனக்குறைவாக ரோட்டைக் கடந்தவனை

“யோவ்… இந்நேரம் போய்ச் சேர்ந்திருப்ப“என ஒரு காரோட்டித் திட்டித் தீர்த்தான் அது அவன் மனைவி திட்டுவது போலவே இருந்தது. வினோத்தின் மனைவி ஒரு பணக்கார வீட்டுப் பெண் சிந்து. வினோத் ஒரு பகல் நேரக் குடிகாரனென்றும்; தன்னுடைய நிழலில் வாழ்பவனென்றும்; தன்னை விட அந்தஸ்த்தில் குறைந்தவனென்றும் தரக் குறைவாகப் பேசுவாள்; நடத்துவாள் அவனிடம் எதையும் அவள் மனம் விட்டு பேசியதும் இல்லை, பகிர்ந்ததும் இல்லை. இருந்தும் இரண்டு பெண் குழந்தைகள். அவளது இறுக்கமான முகம் சண்டை முகமாக அவனுள் பதிந்துவிட எங்காவது, யாரெனும் கோபமாய் வசைந்தாலோ சண்டையிட்டாலோ அது அவனுக்குச் சிந்துவாகவே தோன்றும்.அவளிருக்கும் அந்த நரகத்திற்கு (வீட்டிற்கு) பல நாட்கள் அவன் போனதே இல்லை அதை அவள் கண்டு கொண்டதும் இல்லை. குழந்தைகள் கூட அவளின் முன் இறுக்கமாகத்தான் இருப்பார்கள். எல்லாத்துக்கும் அவள் சொல்லும் ஒரே ஒரு காரணம் ‘அவன் ஒரு குடிகாரன்’ என்பதே.

அன்றிரவு அவன் ஒயின் ஷாப்பில் பப்லுவிடம் மையிட்டவளைப் பற்றி மிக அளந்தான். .

“யோவ் செம்ம ஃபிகரு ஒண்ணு ஹாஸ்பிடல்ல நர்ஸ்ஸா வந்து சேந்துருக்குச் சொல்லவே இல்ல”

“யாரு…? நம்ம ஹாஸ்பிடல்லயா?”

“ஆமாங்…”

“தெரியலையே…!”

“ஓ… அப்ப உங்களுக்கே தெரியாதா! அதுக்குள்ள நம்மக் கண்ணுலப் பட்ருச்சா…ச் செரி…ச் செரி…”எனக் குதுகளித்து ஒரு கல்ப்பை இழுத்தான்.பப்லுவுக்குக் குடி பழக்கம் இல்லை. அவன் ஒரு மருந்துக் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக வேலைப் பார்த்து வந்தான். அவன் வேலைப் பார்த்து வந்த கம்பெனி டார்கெட்டின் பற்றாக் குறைக்கு மாதக் கடைசியில் வினோத்திடம் ஆர்டர் கேட்டு வருவான் காலை 9மணிக்குத்தள்ளுவண்டி டிபனில் தொடங்கி அரை மணிக்கொரு டீ தம், திரும்ப 2மணிக்கு மெஸ் சாப்பாடு சில நாட்களில் பாய்க்கடை பிரியாணி, அதைத்தொடர்ந்து அரை மணிக்கொரு டீ தம் என நீண்டு கொண்டே போகும். இரவு 10மணியைத் தொடும் வேளையிலே ‘அப்பாடி கடையக் கட்டுறநேரம் இந்த இம்சைலயிருந்து தப்பிச்சிறலாம் எத்தனை டீ எத்தனை தம்முக் கம்பெனித் தர்றதுக்கு ஒரு அளவுல்ல ச்சே… இதெல்லாம் ஒருபொழப்பா இதுக்கு எங்கேயாவது அடிபட்டுச் சாவலாம்’ எனப் பப்லு உள்ளுக்குள் ஆயிரம் புகைந்திருப்பான். ஒரு வழியாகக் கடையை இழுத்துஷட்டர் போட மறுகணமே

“அந்தக் கார்னர் வரைக்கும் வாங்க பப்லு ப்ளீஸ்”ஸென இழுத்து ஒயின் ஷாப்பில் சரக்கு நெடியேற ஆம்லெட் சைடிஷ்ஷும்; ஒரு கையில்தம்மும்; மறு கையில் பிளாஸ்டிக் கப்பில் சரக்குடன் வினோத் ப்ரெஷ்ஷாக வேதாந்தம் பேசத் தொடங்குவான். அங்கிருக்கும் ஒவ்வொரு மேஜையிலும் ஒவ்வொரு வேதாந்தம் ஏதோ அறிவு ஜீவிகளின் மாநாட்டைப் போல ஒரு கணம் தோன்றும். பிறகு போதையின் உச்சியில் எல்லாம் வெற்றாகத் தோன்ற நிசப்தத்தில் பப்லுவைப் பற்றி யோசிப்பான்

“என்ன எவ்வளவுக்கு ஆர்டர் போடனும்?”

“ம்ம்…”

“செரி… நீங்களே பாத்துப் போட்டுகங்க”என அவனது டார்கெட்டைக் கடைசிக் கல்பில் முடித்து வைப்பான்.

காலை மாலையென வினோத்தின் கண்கள் அந்த மையிட்டவளையே துரத்தின. அவளது கிறுக்கில் அவனக்கு மறு போதை ஏறியிருக்க. தினமும் ஒரு சாக்கினைச் சொல்லிக் கொண்டு அவளைக் காண ஹாஸ்பிடலுக்கும் கடைக்குமாய் அலைந்தான். அவளிடம் ஒரு சில வார்த்தைகளும் பேசியுமிருந்தான். அவளது தமிழ் மலையாளத்தில் கொஞ்சியது. அவளின் பின்னே ஜொள்ளுட்டதில் லேடீஸ் ஹாஸ்டலில்அவள் தங்கி இருப்பதையும், சொந்த ஊர் பாலக்காடு என்பதையும் தெறிந்து கொண்டான்.
சீனியர் நர்ஸ் கண்ணம்மாச் சில மாத்திரை, மருந்துகளை வினோத்திடமிருந்து வாங்கிச் செல்வது வழக்கம். அப்படியொரு நாள் வாங்கிக் கொண்டிருந்தவள்

“உனக்கொரு சேதித் தெரியுமா! வினோத்து”

“என்னக்கா?”

“நம்ம டாக்டரு அவரோட பையங் இருக்குற ஊருக்கே போறாராங்”

“எங்கெ அமெரிக்காவுக்கா…! “

“ஆமாங்”

“அப்ப இங்கெ?”

“இங்க…ப் புதுசா யாராவது வருவாங்க”எனப் பல் இலித்தாள்.

“அய்யய்யோ…அப்ப அவரோட பேஷண்டுங்கெல்லாங்…!”

“அதுக்கென்ன பண்றது வினோத்து… அவரும் எத்தனை நாளைக்கித்தான் ஒரே மகனை விட்டு இங்கயே இருப்பாருச் சொல்லு…”

“ம்ம்”

“அவரு போறதாலப் புதுசா வேலைக்குச் சேர்ந்தவங்களையும் வேலைய விட்டு நிக்கச் சொல்லிட்டாங்கப் பாவம் அதுக”
வினோத்தின் தலையில் இடியை இறக்கினாள்.

“அப்டியா!”

“உலகத்துல எதுதாங் நிரந்தரம் சொல்லு எதுவுமே கிடையாது எல்லாங் அப்டியே மாறிப் போயிடுது என்ன பண்றது எல்லாங் நம்ம கையிலயாஇருக்கு…ச் செரி… வர்ரேங் வினோத்து” எனக் கவலையுடன் ரோட்டைக் கடந்தாள். திரும்பப் பதிலேதும் இல்லாது அவனது மனதும் மூளையும்பேசின ‘என்ன செய்யப் போறே? அவ இங்கெருந்து வேலைய விட்டுப் போயிட்டா உன்னால அவள பாக்காம இருக்க முடியுமா?’என இரவும்,பகலும் அவளைப் பற்றியே உரையாடிக் கொண்டிருந்தன. ஹாஸ்டலுக்குத் திரும்புகையில் கூட அவள் முகம் பொலிவிழந்து இருந்தது. கண்ணம்மாச் சொன்னவை வேறு திரும்பத் திரும்ப அவனது காதில் வந்து பயமுறுத்திச் சென்றன. அவைகள் எங்குப் பலித்திடுமோ எனக் கலக்கத்தோடு இருந்தான். அவனால் ஒன்றுமே முடியாதிருக்க டாஸ்மாக்கில் குடித்தான். பக்கத்து டேபிளில் இருந்தவன் சப்ளயரிடம்

“எப்பா குமாரு…இப்டிவா”

“எண்ணாண்ணே…”

“இங்கெ என்ன வேலைக்காச் சேந்துருக்க?”

“ஆமாண்ணே... நம்மால இந்தச் சரக்கு வாசனை இல்லாம இருக்கவே முடியல… அதாங் இங்கயே வந்து செட்டிலாயிட்டேங்”

“டேய் செம யோசனைக் காரன்டா நீ… பாரேங் எனக்குக் கூட இது எட்டாம போச்சு” எனப் பார் அலறக் கொள்ளென்று சிரித்தார்கள். வினோத் மட்டும் சிரிப்பை மறந்திருந்தான். ஆனால், அவர்கள் பேச்சிலிருந்து ஓர் விடை அவனுக்குக் கிடைத்தது. அது ஜிவ்வென்றப் போதையிலும் எல்லாம் கைக்கெட்டியதைப் போல மனம் லேசானது. பாரை விட்டு வெளியேறினான் காலைச் சுற்றி வாலாட்டி நின்ற நாய்களுக்கு ரொட்டிகளை வாங்கி இறைத்தான்.

“சார் ஒரு கட்டிங்குக் காசு கம்மியா இருக்கு ஏதாவது ஹெல்ப்… முடியுமா? ப்ளீஸ்…”என ஒயின் ஷாப் வாசலில் ஒரு டீஸண்ட் பிச்சைத் தலைச்சொறிய இடுப்பில் வைத்திருந்த ஸ்பேர்ச் சரக்கினை உருவி எடுத்து

“இந்தா ம்ம்ம்..“என மறந்திருந்த சிரிப்பை வாய்விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அடுத்த நாள் காலைச் சாலைகளெங்கும் பரபரப்பாய் இயங்க மெடிக்கல் ஷாப்பில் வினோத் வழக்கத்திற்கு மாறாக அவசர அவசரமாக லேண்ட் லைனில் போன் செய்த வண்ணமிருந்தான். கடைத் திறந்ததும் முதல் வேலையாகக் கடைக்குத் தேவையான மருந்துகளை டீலரிடம் போனில் ஆர்டர்க் கொடுப்பது கடைப் பையனின் வழக்கம். அதற்காகஅவன் காத்திருக்க வினோத் பலரைத் தொடர்புக் கொண்டிருந்தபடிப் போனை ஆக்கிரமித்திருந்தான். பிறகு ஓயாது அங்குமிங்குமாய் மதிய உணவைக் கூட மறந்துச் சிலரிடம் பேசியவாறு இருந்தான். கடைப் பையன் மணிக்கு அது புரியாததொரு வேற்று மொழிச் சித்திரமாகவே இருந்தது. மாலை நேர சைக்கிள் டீயும் வந்து விடக் கடைக்கு வந்தவன் மீண்டும் லேண்ட் லயனில் நம்பரைத் தட்டினான்.

“ஹலோ… மெடிக்கல்ஸ்லேர்ந்துப் பேசுரெங்…”

“ம்…சொல்லுங்க சார்”

“நர்ஸ் கண்ணம்மாவக் கொஞ்சம் கூப்டுங்களேங்”எனச் சிறு நாழிகைக் காத்திருந்தான்.

“ஹலோ…”

“ஹலோ…அக்கா நாங் வினோத்து”

“என்ன? சொல்லுப்பா”

“ஓண்ணுங் இல்லக்கா வீட்டுக்குப் போறப்ப ஒரு எட்டுக் கடைக்கி வந்துட்டுப் போ”

“என்னப்பா எதுவும் முக்யமா...?”

“அதெல்லாங் ஓண்ணுங் இல்லெக்கா நீ வந்துட்டுப் போயேங்…ச் சொல்ரெங் என்னான்னு”

“செரிப்பா வர்ரேங்”எனப் போனைத் துண்டித்து டீயை எடுத்து உறிஞ்சினான்.

“மணி…டீ ஆறிப் போச்சுடா…”
வினோத்தின் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாதவனாய் மனதுக்குள் ‘ஆமாப் போன்லேயே பேசிட்டிருந்தா டீ ஆறாமப் பின்னெச்சூடாவாக் கொதிக்கும்’ என முனுமுனுத்தான். வினோத்தின் பார்வை ஹாஸ்பிடல் வாசலிலேயே தவங்கிடந்தது. வழக்கமாய் 9மணிக்கு டியூட்டி முடிந்து வரும் கண்ணம்மா இன்றென 9.15க்கு வெளியே வந்தாள். அவளைப் பார்த்ததும் வினோத் பரவசமடைந்தான். அவள் ரோட்டைக் கடந்து வர இவனது கண்கள் வழிச் சொன்னது. பொறுமையிழந்து இருந்தான்.

“வாக்கா வா…”

“என்ன வினோத்து”

“கிளினிக் போடப் போறேங்க்கா”

“எங்கெ…!”

“கடைக்குப் பின்னால இடமிருக்குல்ல அதுலதாங்”

“அதுலயா…டாக்டரு…?”

“சொல்லியிருக்கேங் இன்னும் ரெண்டு நாள்ளத் தெரிஞ்சுரும்”

“நேத்து வந்தேங் அப்ப ஒண்ணுமே சொல்லல இப்பத் திடீர்னு…”

“திடீர்னு தாங்க்கா ஹாஸ்பிடல் டாக்டரு போறாருன்னு நீ சொன்னப் பிறவுத் தான் நாங் இத யோசிக்கவே ஆரம்பிச்சேங்…”

“அப்டியா…!”என ஈறு வரை இலித்தாள். “சந்தோஷம்ப்பா நல்ல யோசனைத் தாங்…”

“உனக்குத் தெரிஞ்ச டாக்டருங்க யாராவது இருந்தாச் சொல்லுக்கா…”
அவள் இடுப்பில் ஒரு கையும் தாடை வாயில் ஒரு விரலையும் ஊனிப் பலமாய் யோசித்தபடி

“சொல்றேங் வினோத்”

“அப்டியே நர்ஸுங்க இருந்தாலும் சொல்லுக்கா”என அவனின் உள் நோக்கத்திற்கு வந்தான்.

“அய்யய்யே… நர்ஸுக்கா பஞ்சம் இதோ இப்பச் சொல்லி அனுப்புரேங் எல்லாங் வேலையத் தேடிட்டுத்தாங் இருக்குங்க”

“அப்டியா…!”

“ஆமாங் அத பத்திக் கவலப் படாதே நாங் சொல்லி அனுப்புரேங் இந்த டாக்டருத் தாங்…”என இழுத்தாள்

“பரவாயில்லக்கா நர்ஸுக்குப் பாத்துச் சொல்லி அனுப்பு டாக்டருக்குச் சொல்லி இருக்கேங்…”

“செரிப்பா … அப்ப நா வரவா…ரொம்பச் சந்தோஷம்”என உலகை உள்ளங்கையில் உருட்டி விட்டுச் சென்றாள். மணிக்கு எல்லாம் தெளிவானது ‘ஓ… இதுதானாக் கதை அப்பக் கடைய ஒட்டிக் கிளினிக் வருதா! செரிச் செரி’ என மனதுக்குள் எல்லாம் பேசி முடித்தான்.
அடுத்த நாள் பூஜையுடன் அஸ்திவாரத்தைத் தோண்டி இருக்க அதற்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை வாங்கிக் கொடுத்துக் கொண்டுஅலைந்திருந்தான் வினோத். மதிய உணவு வேளையில்

“அண்ணேங்… ஹாஸ்பிடல்லேருந்து ரெண்டு நர்ஸுங்க உங்களைத் தேடி வந்திருந்தாங்க “

“எப்படா?

“காலையில”

“யேங்? என்னைக் கூப்ட றதுதானே”

“நீங்க அப்ப இங்க இல்லண்ணெ வெளியிலப் போயிருந்தீங்க”

“அப்டியா…! செரி அவுங்ககிட்ட என்னான்னுச் சொன்னெ?

“அண்ணே வெளியப் போயிருக்காரு நீங்க வேணும்னாச் சாயந்தரமா வாங்கக் கண்டிப்பா இருப்பாருன்னு சொன்னேங்”

“பேரெதும் சொன்னாங்களா?”

“இல்லண்ணே”

“அவுங்க எப்டியிருந்தாங்க?”

“ஒரு நர்ஸு கறுப்பா ஒல்லியா இருந்துச்சு… அப்புறம் இன்னொரு நர்ஸுச் சுமாரா இருந்துச்சு”

“கண்ணுல மை போட்ருந்துச்சா?

“ம்ம்… ஆமாண்ணே…”

‘அதையே சுமாருங்கிறாங்..!’ என யோசனையில் ஆழ்ந்தான். ‘ச்சே…ச் சரியான நேரத்துல நாங் இல்லாமப் போயிட்டேனே’ தனக்குள் புலம்பினான். வெளிச்சம் குறைய மாலை மயக்கத்திற்கு ஆயத்தமானது. வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்திருந்த மணி ரோட்டைக் கடந்துஇரு நர்ஸுகள் கடையை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்ததும்

“அண்ணே காலையில வந்தாங்கன்னுச் சொன்னேங்ல… அவுங்க வர்றாங்க”என வினோத்தை உஷார்ப் படுத்தினான். ஆர்வமாய் அவனும்எட்டிப்பார்க்க. அதில் அவள் இல்லை. ஹாஸ்பிடல் ஸ்டாஃப் நர்ஸுகள். அதிலொருவள் அஞ்சலை அவனுக்கு முன்னமே தெரியும். இதுங்கயேங் வருதுங்க! எனத் தனக்குள் குழம்பி நின்றான்.

“சொல்லுங்க?”

“கண்ணம்மாக்காச் சொன்னுச்சு… அதுதாங் வந்தோம்… எப்பக் கிளினிக்கு ஓபனாகுது?”

“வர்ற ஒண்ணாந்தேதியிலேருந்து…”

“ஓஹோ…எவ்ளவுச் சம்பளம் கொடுப்பீங்க?”

“ஆளுக்கேத்த மாதிரி… யாருக்கு உங்களுக்கா?”

“இல்லல்ல எங்களுக்கில்ல” கெக்கெ…பிக்கெ…வெனச் சிரித்தார்கள்

“யேங் தங்கச்சிக்குத்தான்…”
அவர்கள் ஏதெதோ பேசியபடி இருந்தார்கள். அவனுக்கு ஏதும் காதுகளில் எட்டவில்லை. முடிவாய்

“இப்பத்தான் வேலைய தொடங்கிருக்கோம் முடிஞ்சதும் நானே கண்ணம்மாகிட்டச் சொல்லி அனுப்புரேங்” என அனுப்பி வைத்தான். ‘அந்தக் கண்ணழகிக்காக இவ்வளவு பாடுபட்டுக் கடைசியில யேங் தங்கச்சிக்கித்தான்னு இவ வந்து நிக்குறா ச்சே…’ எனத் தனக்குள் சலித்தான்.மண்டைக் குடைந்தது மாலை வேளை சைக்கிள் டீயும் வந்துவிடக் குடித்தபடிச் சிந்தனையில் ஆழ்ந்தான். மையிட்டவள் டியூட்டி முடிந்து ஹாஸ்டலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

“மணிக் கடையப் பாத்துக்க இத வந்துர்ரெங்”என அவளைப் பின் தொடர்ந்தான். முச்சந்திப் பெட்டிக் கடையில் தொங்கிய துண்டு அட்டைகளில்அவளது கண்கள் வேலை வாய்ப்பைத் தேடி அலைந்தன. கண்ணம்மா இவளிடம் ஏதும் சொல்ல வில்லையென அவனுக்கு அப்போதுதான்தட்டியது. இப்போதே சொல்லிவிட உதடுத் துடிக்க அவள் தவறாகப் புரிந்து விடுவாளோ என எதையும் பேசாமல் சிகரெட் வாங்குவது போல்பெட்டிக் கடைக் காரரிடம் மொக்கைப் போட்டான். திடீரென ஒரு எண்ணம் அவனுள் உருவெடுக்க

“நம்ம கடைக்கு ஆளுங்கத் தேவைப்படுது ஒரு துண்டு அட்டையில எழுதி இங்க தொங்கவுட்டுக்கவா?”

“என்னாப்பா…இதுக்கெல்லாங் போயிக் கேக்கணுமா என்ன? தொங்கவுடு”வெனச் சம்மதித்தார். வெள்ளைத் தாளில் ஸ்கெட்சினால் கலர்கலராய் எழுதி அட்டையில் தொங்க விட்டான். இதுவரை அவன் எழுத்தில் வராத ஒர் அழகு அதில் பொதிந்தது. அடுத்த நாள் காலை அவனும்;அட்டை விளம்பரமும் அவளுக்காகக் காத்திருக்க. சாலையில் அழகாய் அவள் பூத்திருந்தாள். திடீரெனப் பலமான காற்று மெல்லியச் செடியிலிருந்து பூவைப் பிய்த்து எறிவதைப் போல அவளை அள்ளிச் செல்ல நிலைத் தடுமாறினாள். தொடர்ந்து மழைத் தூரல்கள் சடசடவென்றது. செய்வதறியாது அவன் பதறி நிற்க. அவள் ஓடிச் சென்று ஒரு தாழ்வாரத்துக்குள் பத்திரமாய் ஒதுங்கினாள். காற்றில் அவளது துப்பட்டா அசைந்து அவனுக்கு ஆறுதல் சொல்ல மழைச்சாரல்களில் அவளது இனிமையான முகம் இதமாய் இனித்தது. அவன் அவளைரசித்துக் கொண்டிருப்பதைக் காணப் பொறுக்காத மேகக் கூட்டங்கள் வேக வேகமாய்க் கடந்து மழைப் பொழிவதையே தற்போதைக்குத் தள்ளிப் போட்டன. தாழ்வாரங்களில் நீர் வடிய ரப்பர்ச் செருப்புகளும், வாகன டயர்களும் சேற்றைத் துப்பிக் கடந்து செல்ல அவளும் நடந்து வந்தாள். முச்சந்திக் கடையில் அவளது கண்கள் வழக்கமாய் வேலைக்காகத் தேடி எந்த ஒரு ஆர்வமும் இன்றித் திரும்பிச் சென்றதைப் பார்த்துமுழித்தான். யோசித்தான். எழுதியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? எனத் தனது விளம்பர அட்டையை ஒரு முறை நோட்டமிட அதுமொத்தமும் மழையில் நனைந்துக் கலர்க் கலராய் அழுது வடிந்திருந்தது. மற்ற அட்டைகளும் நனைந்திருந்தன ஆனால் அவைகள் அச்சில் பதிந்தவை ஆதலால் அவைகள் சிரித்தன. அதில் ஒன்று மட்டும் லேமினேட் செய்யப்பட்டு மழைக்கும் வெயிலுக்குமாய்ச் சேர்த்து இன்ஷுரன்ஸ் எடுத்த கர்வத்தில் ஆடிக்கொண்டிருந்தது. அவசரத்தில் சொதப்பி விட்டதை எண்ணித் தனது அட்டையைக் கழற்றித் தூர வீசினான்.

‘நர்ஸ் வேலைக்கு அனுகவும்‘- 9380 2222 11 எனக் கம்பியூட்டர் மானிட்டரில் காட்ட டிடீபிச் சென்டர்ப் பையன்

“என்னாண்ணே…ஓகேவா? பிரிண்ட் கொடுத்துடவா?”

“கொஞ்சம் இருப்பா… அந்த இடத்துல ஆட்கள் தேவைங்கிறதெச் சேத்துக்கோ”

“எங்கெ நர்ஸ் வேலைக்கு அப்புறமா…?”

“ஆமா”மெனத் தலையாட்டினான் வினோத்

“எத்தனை தடவண்ணே அத மாத்துவீங்க முடிவாச் சொல்லுங்க”

“முடிவாத்தாங் சொல்றேங் மாத்து”என ‘நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை’ அனுகவும் – 9380 2222 11எனப் பிரிண்டர்ப் பேப்பரை வெளியே தள்ள லேமினேட்டர் மிஷினில் பிதுங்கிட அது கம்பீரமாய்ப் பெட்டிக்கடையில் நின்றது.

காலை எட்டு பத்தென அவனது கைக்கடிகாரம் முட்களைத் துரத்திக் கொண்டிருக்க எட்டு மணிக்குக் கட்டிட வேலை ஆட்கள் வந்துவிடுவார்களெனச் சிகப்புச் சிக்னலில் தவித்திருந்தான். பச்சைச் சிக்னல் விளக்கெறிய ஆக்ஸிலேட்டரை முறுக்குவதற்க்குள் அவனது செல்போன் கினுங்…கினுங்…கென இசைத்தது. அவன் தடுமாறப் பின் நின்ற வண்டிகளின் ஹாரன்கள் பீங்…பீங்…என அவகாசமின்றி அவசரப்படுத்தினச் சிக்னலைக் கடந்து போனை எடுக்க அது மிஸ்டுக் கால் என மினுக்கியது. அந்த அழைப்பு ஏன்? அவளுடையதாய் இருக்கக் கூடாதுஎன அவன் மனம் உறுத்த அதே நம்பரைத் திரும்ப அழைத்தான்.

“ஹலோ…”

“ஹலோ… நா மேஸ்திரி தாமு பேசுரேங்…”என அவனது ஆவல் மொத்தமும் முடங்கியது. பெருமூச்சை இழுத்து விட்டவனாய்

“ம்ம்… சொல்லுங்க…”

“இங்க நாங்க கடைக்கி வந்துட்டோம் !”

“இதோ வந்துட்டேங்”எனத் தொடர்பைத் துண்டிக்க வெறுப்பில் அவனது வண்டிப் புகையைக் கக்கிப் புர்ர்ர்ர்ரெனப் பறந்தது.
வினோத் கடைக்குள் தூசு தட்டிக் கண்ணாடிக் கதவுகளைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

“ஹலோ…சார்”என அழகாய் மையிட்டவள் நின்றிருந்தாள். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவள் வந்திருக்கத் தடுமாற்றமாய்

“ஹாங்…வாங்க”

“இவ்விடக் கிளினிக்கு…”

“ஆமாங்… யாரு கண்ணம்மாச் சொன்னாங்களா?”

“ப்ச்சு… அஞ்சலை இவ்விட நர்ஸுக வேண்டிட்டு ஆயாளுகச் சம்சாரிச்சுக் கொண்டிருந்ததா…”

“ஓஹோ…! செரி அப்ப நீங்க எப்ப வர்றீங்க…?”
அவளுக்குள் பல கேள்விகள் கேட்டிருக்கக் கண்கள் அலைய அவள் யோசித்தாள். கடைசியாய் கேட்க வேண்டியதை முதலில் கேட்டு விட்டதை உணர்ந்தவன்

“வேலை நடந்துட்டுதான் இருக்கு எப்படியும் ஒன் வீக்ல கம்பிளீட்டா எல்லா வேலையும் முடிஞ்சிறும் ஒண்ணாந்தேதிக் கன்ஃபார்மா கிளினிக் ஸ்டார்ட் ஆகிடும்”எனப் பேசிச் சமாளித்தான்

“ஓ…!”

“உங்கள மாதிரிக் கொஞ்சம் எக்ஸ்பிரியன்ஸ் உள்ள ஆளாத்தாங் தேடிட்டு இருக்கோம்”

“ஓ…!”வென உணர்ச்சிக் குவியலாய்க் குவிந்த உதடுகள் மெல்ல மலர்ந்தன. அதை அவன் ரசித்திருக்க

“அப்போ… சேலரியும் கொறைச்சுக் கூடுங்ல்லே…?”

“கண்டிப்பா நீங்க ஏற்கனவே வாங்கிட்டு இருந்ததை விடப் பெட்டராவே பண்ணித் தர்ரேங் அதப் பத்தி ஏதும் நீங்க கவலைப் படாதீங்க”என்றதுமே அவளின் முகம் மொத்தமும் மலர்ந்தது. “உங்க நம்பரைக் கொடுத்துட்டுப் போங்க நாங் காண்டாக்ட் பண்றேங்”
போனில் அவனது விரல்கள் நம்பர்களைத் தட்ட அவளின் உதடுகள் இலக்கங்களை உச்சரித்தது. போன் ரெஜிஸ்டரில் நேம் ஆப்ஷன் கேட்கஅவளிடம்

“உங்க பேரு?”

“மினி” என்றாள்

“என்ன?”

“மி…னி…”

“மினியா?”என்றதும் ஆமாமெனக் கண்களை மூடித்திறந்தாள். அவனது உயிர் அனுக்கள் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. மினி என்ற காண்டாக்ட்டை அவன் அழுத்த அது அவளது போனில் பியுஜியம் வாசித்தது

“அது என்னோட நம்பரு…”

“ம்ம்..?”

“வினோத்துன்னு சேவ் பண்ணிக்கங்க… இந்த வழியாப் போகும் போது வரும் போது வாங்க”

“எந்தா!”

“இல்லக் காண்டாக்ட்லேயே இருங்கன்னுச் சொன்னேங்…”

“ஓ…”வெனப் புருவங்களை உயர்த்திப் புரிந்தவளாக “செர்ரிப் பின்னே…ஞான் வரெட்ட”என ரோட்டைக் கடந்து ஹாஸ்பிடலுக்குள் சென்றுமறைந்தாள்.

“ஹலோ… இங்க என்ன நடக்குது?”என்றவனாய் பப்லு நிற்க.

“பப்லு…! எங்க போயிருந்தீங்க…!”

“நாங் வந்து ரொம்ப நேரமாவுது… நீங்கதாங் இந்த உலகத்துலயே இல்லயே…?”

“நல்ல வேள வந்தீங்க…”எனப் பப்லுவை ஒயின் ஷாப் வரை மல்லுக்கட்டினான்.

“என்ன வினோத்? பகல்ல போயி…நெறைய்ய வேலை இருக்கு”

“அதெல்லாம்…அப்புறம் பாத்துக்கலாம்… வாங்க”என நடந்தவைகளை ஒன்று விடாமல் அவனிடம் கொட்டினான். பாட்டில் சரக்கும் காலியானது. ஒயின் ஷாப்பிலிருந்து வெளியே சாலையைக் கடந்தவர்களாய்

“என்னம்மோ… இதெல்லாங் சரிபட்டு வருமான்னே எனக்குத் தெரியலச் செரி… டாக்டருக்கு என்ன பண்ணப் போறீங்க?”என முச்சந்திப் பெட்டிக்கடையில் சிகரெட்டை வாங்கி வினோத் வாயில் வைக்கப் பப்லு தீக்குச்சியின் மிச்சத்தில் அதை நிதானமாய்ப் பற்ற வைத்தான்.

“அதாங் தெரியல பப்லு”எனப் புகைவிட்டபடி பலமாய் யோசித்தவன் அவனது விளம்பரத்தைத் தொங்கிக் கொண்டிருந்த அட்டைகளுக்குள் தேடினான். அது காற்றில் முதுகைக் காட்டிக் கொண்டிருக்கக் கோபத்தில் அதைப் பிடுங்கி எறிந்தான். அதைக் கவனித்த கடைக்காரர்

“என்னப்பா அதுக்குள்ள ஆளு வந்து சேந்துட்டாங்களா…! பரவாயில்லையே… நம்மக் கடை”எனத் தனக்குத்தானே மெச்சி கொள்ள

“ஆமாம்மா…”என வினோத் சிரிக்கப் புரிந்து கொண்ட பப்லு

“என்ன…? கஷ்டபட்டதெல்லாங் வீணாப் போச்சா”

“ஆமா”மெனத் தலையாட்டி இல்லையெனத் தனக்குள் சிரித்தான்

“ம்ம்…நாம யேங் நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுக்கக் கூடாது?”

“நியூஸ் பேப்பர்லயா…! ம்ம்…“என யோசித்தான்.
குளுகுளு ஏசியில் டைல்ஸ் தரைச் சுவர்கள் சில்லிட; சந்தனம் மணக்க; கல்கண்டு இனிக்கக் கிளினிக் மங்கலகரமாய்த் துவங்கி இருந்தது. மினி இனிப்புடன் வர வேற்றாள். முதல் ஆளாக வினோத்தின் மனைவி தன் மகள்களுடன் வந்தவள் அனைத்தையும் பார்வையிட்டாள் மினியை ஆழமாய் ஸ்கேனீங் செய்தவளாய்

“இங்கெ டாக்டரு யாரு…?”

இல்லையென மினி “ச்சு…”கொட்டச் சிந்துவிற்கு ஒன்றும் புரியாதுக் குழம்ப
“டோக்டரு இன்னும் கிட்டில்லா”

“அப்பாடா… வாயத் திறந்துட்டா…! என ஆசுவாசமடைந்தவள்” டாக்டரு இல்லையா…அப்ப…சாமி இல்லாத கோயில்லப் பூசாரிக்கென்னவேலை?”

“எந்தா…!”என மினி முழிக்க

“எந்தாவா…! தமிழ்த் தெரியாதா…!”

“கொறைச்சறியும்”

“கொறைச்சா…! டாக்டரு இல்லாத கிளினிக்கு…த் தமிழ்த் தெரியாத நர்ஸு…சரியாப் போச்சுப் போ இது உருப்புட்ட மாதிரிதாங்… எதைத்தாங் உங்கப்பேங் ஒழுங்காச் செஞ்சுருக்காங்…வாங்கடிப் போகலாம்”மென மகள்களுடன் வந்த சூட்டோடு மங்களம் பாடிவிட்டுச் சென்றாள். அவள் போன வேகத்தில் வினோத் வர அவனிடம்

“அது யாரனு?” என அவள் விசாரிக்க

“என்னோட ஓய்ஃப்”

“ஓ…”வென இரு புருவத்தைத் தூக்கினாள்

“யேங்…! எதுவும் …?”என அவன் பதறிட

“ச்சு…”இல்லையென அவளது கண்கள் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தன. வினோத் தலையைக் கீழே தொங்கவிட்டிருந்தான். அவனைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பென எண்ணிக் கொஞ்சம் அவனுள் ஆறுதலடைந்தான். நாட்கள் வாரங்களாயின டாக்டர் இல்லாத கிளினிக் என்பதை விட அவளைச் சந்திக்கும் சந்தோஷமே அவனிடம் மிகுந்திருந்தது. ஜிம், பார்லர் எனத் தன்னை மெருகேற்றிக் கொள்ள நேரத்தையும், ரூபாய்களையும் செலவழித்தான். அவளைச் சந்திக்கும் வேளைகளில் சிகரெட்டைத் தவிர்த்தான். துர்நாற்றத்தை மறைக்க ஜிக்லெட்ஸ், பெர்ஃபியும் என நறுமணப் பரப்பிகளை உபயோகித்தான். அவளுக்காக எல்லாம் மாறியிருந்தது. சைக்கிள் டீ வந்திருக்கக் கடைப்பையன் மணி டீயை வேண்டாம் என்று மறுத்தான்

“ஏம்ப்பா… வேணாங்குற?”

“நாங்க டீ சாப்பிடறது இல்ல”

“ஏங்….டீ நல்லா இல்லையா?”

“டீயெல்லாம் நல்லாத்தாங் இருக்கு ஆனா…நாங்க இப்ப பில்டர்க் காபிக்கு மாறிட்டோங்”என நக்கலாய் பதிலளித்தான்.

“பில்டர் காபியா…! அது…செரி அப்ப டீ வேணாமா?”

“ஹூஹூம்…வேண்டா”மென முடிவாய்ச் சொன்னான். பல நாள் வாடிக்கைத் திடீரெனக் கைவிட்டுப் போனதை எண்ணி அவரது உடைந்த சைக்கிளையும், மனதையும் மெதுவாய்த் தள்ளிச் சென்றார். அவளுக்காக ‘டீ’ கூட உயர்தரமாக மாறி இருந்தது. இருந்தும், வினோத் குடிப்பழக்கத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவில்லை. கிளினிக் மூடிய மறுகணமே மதுக்கடை வாசல்கள் சொர்க்கமெனத் திறந்து கொள்ளும் அவளின் போதையில் மதுவின் போதை உச்சத்தைத் தொடாதிருக்க எல்லையை மீறிக் குடிப்பான் இருபோதையும் சமமாகத் தொடக்கண்களுக்கு எல்லாம் அவளாகவே தோன்றும். போதையில் தடுமாறியவனைக் கண்டு பதறியவளைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தான்.
அடுத்த நாள் கிளினிக்கில் வழக்கத்திற்கு மாறாய் அவளிருந்தாள். அவனுக்கு எதையோ பறிகொடுத்த உணர்வுத் தலைக்குள் தகிடுத் தத்தம்போட்டது. அன்று முழுவதும் அவள் முகம் பார்த்து ஏதும் பேசவில்லையே என அவனது மனம் கடைக்கும், கிளினிக்குமாகத் தவித்திட அன்றைய நாள் ஏன்? எதனால்? எதற்காக? என்ற கேள்விக் கொக்கிகளில் சிக்கிக் கழிந்தது. கிளினிக் சாவியை ஒப்படைத்தவளாய்

“பத்திரம் கீழே தவற விட்றாதீங்க”எனச் சூசகமாய்ச் சொன்னாள். அவனுள் உணர்வுக் கதவுகள் படாரெனத் திறக்க. நேற்று போதையில் தடுமாறிப் போனதை அவள் கண்டதெல்லாம் நிஜமென அது உறுதிபடுத்திச் சொன்னது. கேவலமான தனது நடத்தையை எண்ணி இருப்புக்கொள்ளாது அவனது பைக் உருண்டோட அது அவனை அறியாமலே மதுக்கடை வாசலில் நின்றது. விடைத்தேடும் இடமே கேள்வியாய் நிற்கச் செய்வதறியாது குழம்பினான். இறுதியாய் இன்றோடு குடியை நிறுத்தி விட முடிவெடுத்தான். அதற்கொரு பிரிவு உபச்சாரம் கொடுத்திடச்சிறிதளவு குடிக்கத் தோன்றியது. கடைக்குள் நுழைந்ததும் அவனுக்கு ஓரே ஆச்சரியம் என்றுமே இல்லாத வரவேற்பு பார் முழுவதும் ஏர்கண்டிஷனில் குளுகுளுவென ஜில்லிட்டது. பெரிய எல்சிடித் திரையில் சேனல்கள் மாறிக் கொண்டிருந்தன எல்லாம் மிகச் சொகுசாகப் புதுப்பிக்கப்பட்டிருந்தது. டீசண்ட் பிச்சைக்காரன் பாட்டில்கள் பல காலியாகி இருக்க ஒரு டேபிளை முழுவதும் ஆக்கிரமித்திருந்தான். அவனுக்குமுன் ஏழையானவனைப் போல வினோத் கொஞ்சமாய்க் குடித்தான். பக்கத்து டேபிளில் இருப்பவன் ஆர்டர்களைக் கொடுத்த வண்ணமாகவே இருக்கச் சப்ளையர் ஒவ்வொரு முறைக் கடக்கும் போதும் வினோத்திடம்

“சார் வேற ஏதாவது…?”எனக் கேட்டுக்கொண்டே இருந்தான். அது அவனுடைய பிரிவு உபச்சாரத்தைக் கேலி செய்தது. இருந்தும், கடைசிக் கல்ப்பை கவலையோடு விடை கொடுத்தான்.
வினோத் திடீரென அவனை மாற்றிக் கொண்டிருப்பதை நினைத்துப் பப்லுவுக்கு ஓரே பிரமிப்பு. பிரமச்சாரியான அவனுக்கே வராத எண்ணம் இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான பிறகும் வினோத்துக்கு வந்திருப்பதில் ஒரே ஆச்சரியம். அதே சமயம் ஒரு பாவத்திற்குத் துணைப் போவதாக உள்மனம் உறுத்த அவனைச் சந்திப்பதைக் கூடத் தவிர்த்தான். இருந்தும் தொலைப்பேசியில் தொல்லை கொடுப்பான். அந்தமாதிரியான சங்கடங்களில் தொலைப்பேசியைக் கண்டு பிடித்தவனையும் நொந்து கொள்வான். கஷ்டக் காலத்தில் கடவுளை நொந்து கொள்வதைப் போல. இப்போதெல்லாம் வினோத் மல்லுக்கட்டி இழுத்துச் செல்வது டாஸ்மாக்கிற்கு அல்ல உடற்பயிற்சிக் கூடத்திற்கு. அங்குமணிக் கணக்கில் தன் உடலை வறுத்துவான் சினிமா ஹீரோக்களைப் போல. பியூட்டிப் பார்லரில் ஒயிட்னிங், ஸ்டெரயிட்னிங் என வெள்ளரி வில்லைகளைக் கண்களில் பதித்துப் பூதகரமாய்க் கிடப்பான். இதையெல்லாம் காணச் சகிக்காத பப்லு தன் சுயத்தை இழந்திருக்க. டிரெஸ்மேட்சிங்கைப் பார்த்துக் கடைக்குக் கடை அல்லாட பொறுமையை இழந்து ‘அய்யோ… என்னெ வுட்ருங்க…ப்ளீஸ்’என நடுரோட்டில் கதறி அழ அழுகைத் தொண்டையைத் தொடும் வேளையில் ‘கடவுள் இதுக்குத்தாங் நம்மள படைச்சானோ…! என்னம்மோ…! எல்லாம் தலவிதி’யெனத்தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வான்.
நாளிதழ் விளம்பரத்தைப் பார்த்ததாக ஒரு எம்.பீ.பீ.எஸ் வர கிளினிக் சூடு பிடித்தது. மருந்து, நோயாளி, டாக்டரென மினி சுழன்றாள். மருந்துக்கடையும் சுறுசுறுப்பாக, வினோத் ஓய்வில்லாது உழைத்தான். பப்லுவுக்கு அதிர்ஷ்டம் வினோத்திடமிருந்து ஆர்டர்களாய்க் குவிந்தன மாததொடக்கத்திலேயே டார்கெட் சுலபமாய் முடிய வினோத்தே கதியெனக் கிடந்தான். மினியிடம் தன்னைப் பற்றிப் பகிர வினோத்திற்கு வாய்ப்புகள் குறைந்தது. காட்டில் எரிந்த நிலவாய்; கடலில் பெய்த மழையாய்த் தனது முயற்சிகள் யாவும் வீணாகி விட நொந்தான். கல்லா நிறைந்தும்; கண்டக் கணா நிறைவேறவில்லையே எனத் தவித்தான். இரவுகள் அவனுக்கு முள் படுக்கையை விரித்தது. ஒரே ஆதரவாக இருந்தடாஸ்மாக்கிற்கும் பிரிவு உபச்சாரம் கொடுத்தாகிவிட்டது. வாழ்க்கை அர்த்தமில்லாதிருக்க, தனக்குத் தானே பேசிப் பேசித் தனது உள் மனவார்த்தைகளோடும் அலுத்தான். வீட்டில் சிந்துப் படுக் கேவலமாய்த் திட்டிக் கொண்டிருந்தாள். அவன் குடியை விட்டும் கூட அவள் திட்டுவதைக் கொஞ்சமும் நிறுத்திக் கொள்ளவில்லை. சகிக்க முடியாதவனாய் தான் எடுத்த முடிவைத் தளர்த்தினான். திரும்ப அவனது பைக்டாஸ்மாக்கினை நோக்கிப் பறந்தது. தனது சுகத் துக்கங்களைப் பகிர உயிர்த் தோழனைத் தேடிப் பறந்தான் குடித்தான்…க் குடித்தான்…ச் சப்ளேயர்ஓடி ஒழியும் வரை குடித்தான்.
வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின; தலைக்குமேல் வாகனங்கள் இரைந்தன; பரபரப்பான ஒயின் ஷாப் வாசலில் தான் மட்டும் கிடந்து உறங்குவதை உணர்ந்தவன் எழ எல்லாம் தடுமாறியது. அவனது நிலையைக் கண்டு விசுவாசமுடன் நாய்கள் பதறின; உதவிக்குக் குரைத்தன;அங்குமிங்கும் செய்வதறியாது ஓடின; அருகே டீஸண்ட் பிச்சை ஒருவனிடம் தலையைச் சொறிந்தபடி நின்றிருந்தான். அவசரமாய் ஒருஆட்டோ வந்து நிற்க அது வினோத்தை அள்ளிச் சென்றது.
எதைச் சகிக்கக் குடித்தானோ அதே சகிக்க முடியாத சிந்துவின் சத்தம் போதைத் தெளியக் கேட்டது. மின் விசிறியின் கடக் கடச் சத்தம் தாலாட்ட,வீட்டுப் படுக்கையில் படுத்திருப்பதை உணர்ந்தான்.

“செரி…நீச் சத்தம் போடாதெ”என மாமனாரின் குரல் கலவரப்படுத்த வினோத்தின் தூக்கம் கலைந்தது.

“நீங்க இதுக்கு இன்னிக்கே ஒரு முடிவக் கட்டுங்கப்பா… இனி இந்த ஆளுக் கூட என்னால வாழ முடியாது…”எனச் சிந்து வழக்கமாய்ப் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்க

“மன்னிச்சுடுங்கத் தப்புத்தாங் இனி இந்த மாதிரி நடக்காது“என வினோத்திடம் வழக்கமாய்ப் பல உறுதிகளை வாங்கிய பிறகு பஞ்சாயத்துக் கலைந்தது. அவனது பைக்கை வாசலில் தேடினான்

“என்ன மாப்ளெ…ப் பைக்கயாத் தேடுறீங்க…ப் போய் விட்ட இடத்துலத் தேடுங்க” என மாமனார் நக்கலடிக்க அங்கிருந்த மொத்தமும் இலித்தது. வழிந்தவனாய் அங்கிருந்து நகர்ந்தான்.
மணிக் கடை வாசலில் காத்திருக்க. வினோத்தைப் பார்ததும்

“அண்ணெ உங்க செல்லு என்னாச்சுண்ணே…?”

“ஏண்டா..!”

“மினியக்கா அப்பா சிரியஸாங் உங்ககிட்டச் சொல்லிட்டுப் போகத்தாங் ட்ரைப் பண்ணா… உங்க போனுச் சுவிட்ச் ஆஃபுன்னே வருது”

“தொலைச்சிட்டேண்டா…செரி… இப்ப மினி…”

“ரெயில்வே ஸ்டெஷனுக்குத்தாங் போனாங்க”

“உங் செல்லக் கொடு”என மணி செல்லில் நம்பர்களை அழுத்த அதில் ‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பாங் ஆனா கைவிட மாட்டாங்… என ரிங் டோன் பஞ்ச் அடிக்க

“ஹலோ…”

“ஹலோ…நாங் வினோத் பேசுறேங்”

“சார்…அச்சனுக்கு சிரீயஸா ஞாண் கண்டு…”

“இப்ப நீங்க எங்க இருக்கீங்க?”

“ஞாண்… ரெயில்வே ஸ்டெஷன்லயா”

“எங்கெயும் போயிடாதீங்க… ப்ளீஸ் அங்கெயே வெயிட் பண்ணுங்க ஃபைவ் செஹண்ட்ஸ்ல நாங் அங்க வந்துர்றேங்…”என தொடர்பை துண்டித்தவனாய் மணியிடம் கடையை திறக்கச் சொல்லிவிட்டு தனது பைக் ஆக்ஸிலேட்டரை முறுக்கினான். அதில் ஒட்டியிருந்த மண் கீழே கொட்டியது நேற்று டாஸ்மாக்கில் விட்டுச் சென்ற பைக் கேட்பாரற்று மண்ணில் கிடந்ததில் ஒட்டிக் கொண்டதில் மிச்சம். கைப்பேசியையும் அங்கு தேடிப் பார்த்தான் கிடைக்கவில்லை பைக் மட்டும் திரும்ப கிடைக்க சமாதானம் சொல்லிக் கொண்டவனாய் அவனது மோட்டார் பைக் ரயில் சந்திப்பை அடைய ‘யாத்ரிகள் கிருபயா தியான் தே’என ஒலி பெருக்கிகள் பயணிகளின் கவனத்தை காந்தமாய் ஈர்த்திருந்தன. டிக்கட் கவுண்டரின் அருகில் மினி பரிதாபமாய் காத்திருக்க அவளது கண்கள் வினோத்தை தேடி அலைந்து பிடித்தன. அவனது பர்ஸிலிருந்த ஏ.டி.எம் நோட்டுக்களை எடுத்து அவளிடம்

“இத வெச்சுகங்க” எனக் கொடுக்க

“ம்ஹீம்…”என மறுத்தாள்

“வேண்டான்னு சொல்லாதீங்க… இது அப்பாவோட செலவுக்காகும் ப்ளீஸ்…” என அவளது கையில் திணிக்க அதற்கவளது கண்கள் நன்றியைப் பனித்தன. அவசரமாய் ஸ்டெஷன் ஒலிபெருக்கியில் ‘பயணிகள் கவனத்திற்கு பாலக்காடு வழியாகச் செல்லும்…‘மென அறிவிக்க

“பின்னெ… ஞாண் …”என ஆயத்தமானாள்

“ம்ம்…”மென வார்த்தையளவில் வழியனுப்ப மனமோ அவளைப் போக விடாமல் தடுத்தது. ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தவளிடம் பிரிய மனமில்லாது ஓடிவந்த வினோத் “உங்களுக்கு அங்கெ எதுவா இருந்தாலும்… என்ன தேவைன்னாலும்… கடை லேண்ட் லைனுக்கே போன் பண்ணுங்க”

“ஆங்…செர்ரி…”என அவளும் பாலக்காடு எக்ஸ்பிரஸும் நகர அப்பெட்டி பயணிகளை அதிஷ்டக்காரர்களென அவனது மனம் எண்ணி ஏங்கியது. தினமும் அவளை பார்க்கக் கூடிய அற்ப சந்தோஷத்தையும் அந்த உணர்வற்ற இரும்புப் பெட்டி வேகமாய் எடுத்துப் போனது. அவனுக்கு முன்னே ஒரு காதல் ஜோடி இறுகக் கைகோர்த்து நடக்க துர்பாக்கியசாலியான தன்னை தானே வெறுத்தான். ‘சார்…யாருமில்லாத அனாதைங்க…’என ஒரு பிச்சைக்காரி பிளாட் பாரத்தில் பிச்சை கேட்டிருந்தாள். ‘யாருமில்லா அனாதை’ என்கிற அவலக்குரல் மட்டும் அந்த முழூ பிளாட்பாரத்தையும் கடக்கும் வரை தன் மனக் குரலோடு ஒத்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. பைக் உறுமிய வேகம் டாஸ்மாக்கிற்கென முடிவாக. பாரில் குடித்தான். போதையில் அவனது பைக் சீறியது. சிக்னலில் டிஜிட்டல் சைன் போர்டுகள் ‘Don’t Drunken Drive’ எனச் சிகப்பெழுத்துக்களில் திரும்பத் திரும்ப கண்டித்தும். சிகப்பு சிக்னலை அவன் வேகமாய் அத்துமீற

“ஆ…”வென அலறலில் அனைத்தும் நொடியில் கிடுகிடுத்தது. எல்லாம் முடிந்தது போல. எட்டிய கும்பல் முகத்தைச் சுளிக்க; சூரியன் சுட; பிம்பம் இருள; சுள்ளென ஒரு உணர்வு பரவ; வட்ட வட்டமாய் வெளிச்சம் கண்களைக் கூச; தூரமாய் அழுகைச் சத்தம்.
பிறகு, “வினோத்…வினோத்…”என சாந்தமாய் ஒருவர் சிரித்தார்.
பிறகு, “மாப்ள…”என மாமனார், சிடு மூஞ்சியாய் சிந்து, அவன் மகள்கள்.
பிறகு, “ஹலோ…”என கிளினிக் டாக்டரு, பப்லு, பக்கத்துல மணி அழுதான்.
பிறகு, (யோவ் எத்தனை பிறகு முடியல)
இல்ல… இது கடைசி பிறகு, (அப்ப ஓகே…)

“சார்…”என மினி நின்றிருந்தாள். போதையில் அவள் தோன்றுவதை போல இருந்தது. அவனது கண்கள் சுற்றி அனைத்தையும் கிரகித்து விபரீதமெனப் பயந்தன. வாய் வறண்டு திராணி இல்லாதிருக்க எழ முயன்றான். வலது பக்க காலும், கையும் பெரிதாய் கட்டுகளுடன் கணத்தது.

“ம்ஹீம்…வேண்டா…”மென மினி திரும்ப அவனை பழைய நிலையிலேயே படுக்க வைத்தவள் ஓடிச் சென்று டாக்டர், நர்ஸ், பீபி அப்பேரட்டஸ் என சகிதத்தையும் அவசரப்படுத்த, நாடி முதல் கண், வாய் வரை பரிசோதித்து நரம்பு வழியாக வாழ்ந்தவனுக்கு வாய் வழியாக பழச்சாறு கொடுக்க அவனது உயிர் திரும்ப வேகமாய் துடித்தது. முள் கிழிக்கும் வேதனையில் அவன் துடிக்க மினி சுகமாய் வருடியும் அது தொலைவில் தொட்டது. இருண்ட ஆழ் குழிக்குள் தள்ளப்பட்டவனாய் தூக்கத்தில் அலறி எழ ஆதரவாய் இருந்து தேற்றுவாள். கண்களை மூடினால் ஒரே கனவு பயம் அவளின் முந்தானையை பிடித்து பாலகனாய் தூங்குவான். அதையெல்லாம் ஒரு தாயாய் இருந்து சகிப்பவளைத் தவறாய் எண்ணிய அவனது இதயத்தில் ஈரம் கசிந்தது.
ஒருநாள் அறைக்கு வெளியே அவள் தொடர்ந்து தொலைப்பேசியில் தொல்லைக்குட்பட்டிருந்தாள். மொழி புரியாத போதும் ஏதோ பிரச்சனையில் அவள் தவிப்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. கூப்பிட்டான் அது அவளை எட்டவில்லை. என்னவென்று அறிந்து கொள்ள அவனை வருத்தி எழுந்தான். சப்தம் கேட்டு அவள் ஓடிவர. கீழே கிடந்தவனை பார்த்துப் பதறினாள். அவனைச் சுமந்து படுக்கையில் இட

“போன்ல…? என்ன ஆச்சு…? என பேச்சும், செய்கையுமாக அவளின் பதட்டத்தை விசாரித்தான். தயக்கத்துடன் நின்றிருந்தவள்

“இல்ல…அதொக்க சரியாகிப் போவும் அது ஒண்ணுல்ல”என அவளின் வார்த்தை கள் பொய் பேசின. அதை ஏற்றுக் கொள்ளாத அவனது கண்களில் சிக்கித் தவித்தவளாய் “அது என்டெ அச்சன் சுகா இல்லாது போக கடன் கொடுத்த ஆயாளுக விளிச்சிட்டு வளர பிரஷ்னமானு…”என அவள் கண்களில் நீர் உண்மையைச் சுமந்திருக்க

“மொத்தம் உங்க அப்பா எவ்ள கடன் தரணும்?”

“மொத்தங்கூட்டி…ம்ம்…”மென அவளது மனக் கால்குலேட்டரில் எதையோ கூட்டி முடிவாய்

“ஒன்றை லட்ஷம் வெறும்”என்றாள்.

“கடையில…”என உள்ளுக்குள் அவன் முனுமுனுத்தான்.

“அவ்விட சேச்சீயுண்டு”என்றாள்

“யாரு..? சிந்துவா!”என ஆச்சரியத்தில் அவன் கேட்க ஆமாமென அவள் கண்கள் மூடித் திறந்தது.

“அப்போ கடைக்கு கொஞ்சம் கால் போடு”என அவள் செல்பேசியில் அது கினீர்…கினீர்…ரென அவனிடம் கொடுத்தாள்.

“ஹலோ”

“ஹலோ… நாங் வினோத்”

“உக்கும்…சொல்லுங்க”என வெறுப்பாய் மறுமுனையில் சிந்து வெட்டினாள்

“ஒண்ணுமில்ல… லாக்கர்ல பணம் வெச்சுருக்கேங்…”

“ஹாஸ்பிடல் பில்லத்தான் தெண்டமா கட்றனே…” எனச் சலித்தாள்.

“இல்ல… இது மினிக்கி…”யென இழுத்தான்

“மினிக்கிதான்… சம்பளம் போட்டாச்சே அப்புறங் என்னெத்துக்கு பணம்…?”

“இல்ல…”

“அதெல்லாங் நீங்க ஒண்ணுங் கிழீக்க வேணாங் போனை வைங்க…”என அவள் அதிகாரம் தூள் பறந்தது.

“நாங் சொல்றத கொஞ்சங் கேளேங்…”என பேசிக் கொண்டிருக்கும் போதே போன் விக்கியது அவள் தொடர்பை துண்டித்ததாக, செய்வதறியாது சிந்தித்தான்

“சார் எனக்காக பாவம் நிங்களு…கஷ்டப்பட வேண்டாங்”என மினி அவன் நிலைக் கண்டு வருந்தினாள்

“உங்க கிட்ட பப்லு நம்பர் இருக்கு…?

“யாரானு… ஆயாளு… மெடிக்கல் ரெப்போ…”

“ஆமாங்”

“ஓ…”வென கண்களை மூடி அகலத் திறந்தாள்.
போனில் அழைத்த பப்லு நேரில் ஆஜராகியிருக்க

“எங்க பாஸ்… ஏங்கிட்ட போயி… இன்னும் போன மாச எக்ஸ்பென்ஸெ கம்பெனிலேர்ந்து கைக்கு வராம அங்கெயும் இங்கெயும் அல்லாடிட்டுருக்கேங்… வழக்கமா இதுக்கெல்லாங் உங்ககிட்டத்தான் வந்து நிப்பேங் இப்ப நீங்களே…”என கைகளை பிசைந்தான்

“யேங்… ஜெக் புக்”கென யோசித்தவன் “பப்லு எனக்கொரு ஹெல்ப் பண்றீங்களா?”

“ம்…சொல்லுங்க”

“பேங்குக்கு போயிட்டு அங்கெருந்து எனக்கொரு கால் பண்ணுங்க நாங் பேங்க் மேனேஜருட்ட பேசுறேங்…”எனப் பேசி ஒரு ஜெக் லீஃபுக்கு மட்டும் அனுமதி கிடைக்க கையெழுத்திட பேனாவை அவசரமாய் பிடித்தான் வினோத். அது அந்த பூதகரமான மாவுக்கட்டில் விரல்கள் புதைந்திருக்க பேனா கைக்குள் அகப்படவில்லை. முயன்றான் முட்டாள் தனமாய்; கை விரல்கள் பழைய நிலைக்குத் திரும்ப சில மாதங்களாகும் என்கிற சாதாரண விஷயமும் அந்த உணர்வின் வெளிப்பாட்டில் அது அவனை சாமானியன் ஆக்கியது. முயற்சிகள் அனைத்தும் முடங்கிப் போக படுக்கையில் துவண்டான்.
அடுத்த நாள், டாக்டர் பார்வை நேரம், ஆவலாய் காத்திருந்த வினோத். டாக்டரை பார்த்ததும்

“சார்… இந்த கட்டுலர்ந்து எப்ப என்னை ரிலீஸ் பண்ணுவீங்க”

“ஆஹ்…ஹா…ஏங் கஷ்டமா இருக்கா வினோத்?”எனச் சிரித்தார்

“இல்ல சார் முக்கியமான பேப்பர்ஸ்ல சைன் பண்ண வேண்டியதிருக்கு…” என மினியின் கவலை முகத்தை பார்த்துக் கொண்டே டாக்டரிடம் கேட்டான்.

“எப்டியும் ஒன் வீக் டென் டேஸ்ல… இந்தக் கட்ட பிரிச்சுடுவோம்” என்றதும் ஆயிரம் வாட்ஸ் ஒளி வெள்ளம் வினோத்தின் முகத்தில் பிரகாசித்தது. அதனைத் தொடர்ந்து அவர் “பட்… கை பழைய நிலைக்கு…” என கைவிரல்களை மடக்கித் திறந்து “இந்த மாதிரி ஆக்ஷன் வர்றதுக்கு மே பீ… ஒன் மன்த் கூட ஆகலாம்” என அவனது ஆயிரம் வாட்ஸையும் அப்போதே ஊதி அணைத்தார். ஏதேதோ அறிவுரைத்தபடி டாக்டர் அங்கிருந்து அடுத்த நோயாளிக்கு நகர்ந்தார்.
கடிகார முட்கள் நகரும் சத்தம் மட்டும் நிசப்தத்தில் கேட்டிருக்க சுவற்று பல்லி அமைதியாய் வேடிக்கை பார்த்திருந்தது. மினியின் செல்போன் பியுஜியம் கினு…கினு…வென அலறிட அது அபாய சங்கினைப் போல் அபஸ்வரமாய் கேட்டது. நம்பரை பார்த்ததும் அவள் திகைத்தாள். செல்போன் அலறிக் கொண்டே இருந்து பின்பு ஓய்ந்தது. அவள் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள். திரும்பவும் அதே போன்றதொரு நம்பர் வந்து அலறிட அதுவும் கடனுக்கானதாக இருக்குமோ எனப் பயந்து எடுக்கத் தயங்கினாள் மினி. அவளது தவிப்பை சுவற்று பல்லிவரை உணர்ந்து ஓடி மறைந்தது. வினோத் எடுத்துப் பேசச் சொல்லி தைரியமூட்டியவனாய் தலையசைத்தான். அவள் அழைப்பைத் தொடர

“ஹலோ…”

“ஹலோ எந்தாயி?”

“இல்ல… இன்னுங் கொறைய அவகாசம் வேணுங்…”

“எந்தா…ஞாண் எத்தறை அவகாசங் கொடுத்து பின்னெ ஞாண்…”

“இல்ல…”என வினோத்தை பார்க்க அவன் இடக்கையின் ஒற்றை விரலை உயர்த்தி காட்ட “ஒரூ மாசம்… ஒரூ மாச அவகாசம் கொடுத்தா மதி”என்றாள்.

“ஒரூ மாசமோ … அதெங்கன…”எனக் கடன் கொடுத்தவர் கடிந்துரைக்க கடனுக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாக வினோத் அவரிடம் பரிந்துரைக்க முடியாத பட்சத்தில் அவரும் அதற்குச் சம்மதித்தார். தன் குடும்பக் கடனுக்கு சற்றும் சம்பந்தமில்லாத வினோத் முழுப் பொறுப்பேற்றதை நினைத்தவள் மனம் இளகினாள்.
ஒடிந்த எலும்புகள் ஒன்று கூடிவர ஆட்டுக்கால் சூப் அருமருந்தென பாட்டி சொன்ன ஞாபகம். அதை வாங்க வெளியே அலைந்தவள் மருத்துவமனைக்குள் நுழைய மினியை கவனியாதவளாய் சிந்து வெளியேறினாள்.
மினியோ வினோத்தைக் காண வந்திருப்பதாக எண்ணிட, சிந்துவோ அங்கு வெறும் பில்லுக்கான பணத்தைச் செலுத்த வந்து போயிருப்பதையும், கேண்டீன் சோறு சிறை கைதிக்கு கொடுப்பதைப் போல வெறும் பசிக்கென அவனுக்குக் கொடுக்கப்படுவதையும், பாசமோ, பரிவோ பருக்கையளவில் கூட அவனுக்குக் கிடைக்கவில்லை என்பதையும் மினி உணர்ந்தாள். ஆனால், அவனோ மாவுக்கட்டிலிருந்து விடுபடும் தருணத்தையே எதிர் நோக்கிக் காத்திருக்க டாக்டர், நர்ஸென அனைவரிடமும் அதையே கேட்டு தொல்லை செய்தான். கட்டுகளைக் குறித்த நாட்களில் பிரிக்கப்படாமலேயே படுக்கையில் கிடந்தான் ஏதோ காரணம் சொல்லி மருத்துவமும் காலத்தை நீட்டிக்க வெறுப்பு அவனது உச்சியைத் தொட்டது. அவனுக்காக மினி கோயில் படிகளை ஏறி இறங்கினாள். வேண்டுதலை வெள்ளைத் தாளில் எழுதியது போக மீதி அவனது வெண்மையான கட்டுகளிலும் நிரப்பியிருந்தாள். அவனுக்கு இவளுமாக; இவளுக்கு அவனுமாக நலம் விரும்பி போராடினர்.

அவளின் வேண்டுதலை
அக்கட்டுகள் உணர்த்த
அன்பின் அடையாளமாய்
அதை அவன் ஆசையில் அணைக்க
அணைத்த அரை நொடியில்
அதை ஆவலோடு அறுத்தெடுக்க
ஆக்ஸா பிளெடும் கையுமாய்
அருகில் அமர்ந்தான்
அந்த அலோபதி அரக்கண்

கட்டுக்களைப் பிரிக்க தன் கையின் சுகத்தை விட அந்த அன்பின் அடையாளத்தின் நிலையைக் கண்டு மனம் பதற அதற்கு ஆறுதலாய் டாக்டர் துணிக்கட்டை போட்டு மணிக்கட்டை கழுத்து பட்டையில் தொங்க விட கை ஊஞ்சலில் ஆடி கொண்டிருந்தது.

“இப்படியே கையத் தொங்க விடுங்க இல்லேண்ணா கை ஸ்டெரெயினாயிடும்” மென
கையிலும், கண்களிலும் சுரணை இல்லாதிருந்த வினோத்திடம்.

“இப்ப அப்டித்தாங் இருக்கும் கொஞ்ச நாளைக்கு அப்புறமா மூவ்மெண்ட் பண்ணிக்கலாம்… கொஞ்சம் ரெகுலர் எக்ஸர்சைஸ் பண்ணா சரியாகிடு”மென டாக்டர் வார்த்தைகளில் வலுகொடுத்தார். கட்டின் பாரம் குறைந்து மனதின் பாரமோ கணத்தது. கடனுக்கான காலக்கெடு முடிவதற்குள் கை திரும்ப பழைய நிலைக்கு வந்துவிடுமா? என்கிற அச்சம் அவனுள் சுள்ளென சுட்டது. ஒரு மாதத்தை மின்னல் வேகத்தில் நாள்காட்டி நாட்களை கிழித்துக் கொண்டிருக்க அதற்குள் மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிவித்தது. விடை பெறும் நேரம் வேகமாய் கரைய ஊமையாகிப்போன அவர்களது மனம் உள்ளுக்குள் ஓயாமல் பேசியது. அதையும் பொறுத்து கொள்ளாத சுற்றம் வினோத்தை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அவசர அவசரமாய் கையொன்று காலோன்றுமாய் சுமந்து காரில் கிடத்தியது. அவள் கண்களில் நீரைச் சுமந்து; இதயத்தில் அன்பைச் சுமந்து; கையில் ரிப்போர்டுக்களுடன் ஓடி வர எனக்கென்ன என அலட்சியமாய் உறுமிய வாகனம் ஆக்ஸிலேட்டரை விடுவதற்குள் அவள் கொண்ட பற்றில் காரை பற்றி நிறுத்தினாள். கையிலிருந்தவற்றை ஒப்படைத்தவளாய் ஹாஸ்பிடல் வாசலில் அமர்ந்திருக்கும் விநாயகரின் விபூதியை வினோத்தின் நெற்றியில் இட அவளை தனியாய் விட்டுப் பிரிந்து அந்த நாலு சக்கர பருந்து சாலையில் பறந்தது. அதற்கு ஈடு கொடுத்து ஓடிவர முடியாதவளாய் கடுகென கரைந்தாள் மினி. அவளின் அரவணைப்பு, அவள் காட்டிய கரிசனம், எல்லாம் சிறிதில் அவளுடன் கரைந்து காணாமல் போனதை உணர்ந்த அவனது உள்மனம் மட்டும் கிடந்து தவித்தது. அவள் கடைசியாய் ஒப்படைத்துச் சென்ற அந்த மெடிக்கல் ரிப்போர்டுக்களும், மருந்துப்பையும் அறையில் அவனைப் போலவே அதுவும் தனிமையில் ஆதரவற்று மின் விசிறிக் காற்றில் சலசலத்து கொண்டிருந்தன. சலசலப்பு அவனை நெருடியது. பொறுமை இழந்தவனாய் மேஜையிலிருந்தவற்றை வெறுப்பில் கீழே பிடித்துத் தள்ளினான். அதிலிருந்து அவனுடைய பர்ஸ் விழ ஏடிஎம் கார்டுகள், டூவீலர் லைசன்ஸ், பில் ரெசிப்டுகள் என அத்தனையும் சிதறியது. உயிரில் மீதித் திரும்ப வந்த சந்தோஷம். கடனுக்கான வாக்குறுதியைக் காப்பாற்றி விடலாம் என்கிற ஆவலில் கைத்தடி உதவியுடன் மெல்ல மெல்ல நகர்ந்து அவனது நினைவில் ஆழப்பதிந்திருந்த மினியின் நம்பருக்கு ஹாலில் இருந்த லேண்ட் லைனில் டயல் செய்தான். அது செயலற்றதை உயிரின்றி உணர்த்தியது என்ன செய்வதென யோசித்தான் கிச்சனில் தடால் புடாலென ஓலிக்க

“வேணி…வேணி…”என அழைத்தான்.

“இதோ வந்துட்டேங்…”எனக் கை வேலையை அப்படியே விட்டு விட்டு வேலைக்காரி ஓடி வந்தாள்.

“ஊங்கிட்ட செல் போனிருக்கு?”

“ம்ம்… இருக்கெ”என தன் ஈரக்கைகளை முந்தானையில் துடைத்தவளாய் “இருங்க எடுத்துட்டு வர்ரேங்”என மின்னலாய் எடுத்து வந்தாள். அதில் மினியின் நம்பரை வினோத் சொடுக்க அதன் பஞ்ச் டயலாக் மினி நம்பரென உறுதிப்படுத்த உற்சாகமனான். நீண்ட நாட்களாய் கவனிக்காது போன அவளது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த மினியின் செல்போன் பிரைவேட் நம்பரென கினுகினுத்தது. அது கடனுக்கான தொல்லை அழைப்பு என எடுக்காமல் விட; வினோத் தொடர்ந்து அழைத்தான். ‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பாங் என ரிங் டோன் அவனை சோதித்தது. மறுமுனையில் அவள் எரிச்சலடைந்து போனை எடுக்க பேட்டரி வீக்கென அது தன்னைத் தானே ஸ்விட்ச் ஆப் செய்து கொண்டது. வினோத் வெறுப்படைந்து டீப்பாயில் போனைக் கிடத்திவிட்டு சோபாவில் தலையைச் சாய்த்தான். டீப்பாயிலிருந்த செல்போன் உதறலெடுத்துக் கத்த இது அவள்தானா? என அவனுக்குள் வைப்ரேட் ஆனது

“ம்ம்… சொல்லுப்பா…”என வேணி போனை எடுத்தவளாய் வினோத்திடம் “ஏங் பையங்…”என செய்கை காட்டி பேசிவிட்டு சமையற்கட்டுக்குள் அவள் திரும்ப மீண்டும் ஒரு அழைப்புமணி வினோத் ஆவலாய் சோபாவில் நிமிர்ந்தான். வேணி அதில் யாரிடமோ திரும்ப சிரித்து பேசத் துவங்கினாள். வினோத் பலமுறை நிமிர்ந்தும்; சரிந்துமாய் துவண்டிருக்க மினியிடமிருந்து மட்டும் அழைப்பு வந்ததாக இல்லை. வேணியை அழைத்துச் செல்ல அவளது மகன் வாசலில் பெரிதாய் ஒரு செல்போனில் ‘Angry Bird’-ஐ அனாயாசமாய் விளையாடிக் கொண்டிருந்தான். “வேல முடிஞ்சிச்சு நாங் கிளம்புறேங்…”என டீப்பாயில் கிடந்த செல்போனையும் வேணி எடுத்துக் கொண்டுப் போனாள். மன அழுத்ததில் அவன் கண்கள் வீடெங்கும் துழாவின. ஒரு பெண் ஓவியம் அவன் கண்களில் தட்டுப்பட அதன் கீழே V.அனன்யா ‘IIIrd Std’ என சின்ன மகளின் ஓவியம் ஏதோ அவனது மனநிலையை அது ஒத்திருந்தது.

தொடரும் .....

எழுதியவர் : அபிமான் (13-Jul-15, 9:42 am)
சேர்த்தது : அபிமான்
பார்வை : 745

மேலே