என் வாழ்க்கைப் பயணம் - 8
இன்று காலையில் எழுந்தவுடன் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன் ....இது என் அன்றாட வழக்கம்....ஒரு நாளிதழின் பக்கத்தையும் , இணையதள ரேடியோவையும் துவக்கிவிடுவேன் . எனக்கு பழைய பாடல்களை கேட்பதில் அலாதி பிரியம் . அப்படி வைத்த உடன் ... ஒரு பாடல் ...
" தோல்வி நிலையென நினைத்தால்
வாழ நினைக்கலாமா .... என்ற வரிகள் ஒலித்தது .
ஊமை விழிகள் படம் என்று நினைக்கிறேன் . அந்த வானொலி நிலையத்தில் எந்தப் படம் , யார் பாடுவது என்றெல்லாம் கூற மாட்டார்கள் ....அப்படியே தொடர்ந்து பாட்டுக்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ....இதயத்தை இதமாக்கும் எழுந்தவுடன் .....இன்பமும் , ஊக்கமும் பெருகிடும் பாடல்கள் ....
...அகமும் சுகம் பெறும் அக்காலப் பாடல்களால் ....
உண்மையில் அந்தப் பாடல் எத்தகைய எழுச்சியை ஏற்படுத்துகிறது ...எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள் . எவருக்கும் பொருந்தும் வார்த்தைகள் ....
தோல்வி மட்டுமே வாழ்க்கை என்று நினைத்தால் உண்மையில் யார்தான் இவ்வுலகில் சாதிக்க முடியும் .. நிலைத்து வாழ முடியும் ...?
நேற்று முகநூலில் , ஒரு நண்பர் செய்தி ஒன்றை பதிவு செய்திருந்தார் ..மிகவும் வறுமைக் கோட்டில் உள்ள குடும்பத்தை சார்ந்த மாணவி ஒருவர் , நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் , மேலே படிப்பை தொடர முடியாமல் , வழியும் தெரியாமல் தவிக்கிறார் என்று அவரது புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார் . பார்த்தவுடன் எனது விழிகள் நனைந்தது ...எனையும் அறியாமலே ....இதுபோன்று எததனைப் பேர் தவிக்கிரார்களோ என்று மனம் துடித்தது .
இவர்களின் வருங்கால நிலை என்னவாகும் என்றே உள்ளம் சுழன்றது ....நான் அந்த அளவிற்கு வசதியாக இல்லையே என்ற ஏக்கமும் என்னை ஆட்கொண்டது .. உதவிட இயலவில்லையே என்ற ஆதங்கம் நெஞ்சில் நிறைந்தது .
1967ம் ஆண்டு ....ஒருநாள் மாலை பள்ளியில் இருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தேன் . வரும் வழியில் எல்லாம் சாதாரண நாட்கள் போன்று அல்லாமல் , வித்தியாசமான சூழல் நிலவியது . அங்கங்கே 5- 10 பேர் நின்று கொண்டிருந்தார்கள். முதலில் புரியவில்லை . வீட்டை நெருங்கும்போது எங்கள் வீட்டிலும் எல்லோரும் வெளியிலே நின்று கொண்டிருந்தார்கள் . அப்போது சற்றுத் தள்ளி ஒரு கட்சியை சார்ந்த பலர் சுமார் 50 பேர் இருக்கும் வாழ்க கோஷமிட்டனர் . சிறிது நேரத்தில் அறிந்துக் கொண்டேன் ...அந்த கூட்டத்தின் நடுவில் ஒரு நீலக் கலர் ஜீப் ஒன்றில் நின்று கொண்டு இருந்தார் . அவர் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார் . இரண்டு அல்லது நான்கு போலீசார் கூடவே வந்தனர் . பின்பு அப்படியே திரும்பி அடுத்த வீதிப்பக்கம் சென்றார் . உடனே எங்கள் வீடு அருகேயும் , சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஏமாற்றத்துடன் முகம் சுருங்கிப் போயிருந்தனர் .
அப்போது எங்கள் சித்தப்பா மிகவும் வேகமாக சென்று , அவரிடம் இந்தப் பக்கம் அத்தனை வீடுகளிலும் உள்ளவர்கள் மிகவும் வருந்துவதாக கூறினார். அதனால் மீண்டும் திரும்பி எங்கள் வீடு உள்ள திசை வழியாக வரவேண்டும் என்று கூறினார். உடனே சற்றும் யோசிக்காமல் அந்த அரசியல் தலைவர் , வண்டியை திருப்ப சொன்னார் . எங்கள் வீட்டருகே சுமார் 30 பேர் நின்று கொண்டிருந்தனர் எங்களையும் சேர்த்து ....அவர் வீட்டருகே வந்ததும் ஜீப்பும் நின்றது. உடனே அவர் எங்கள் தாத்தாவை நோக்கி உயரே கை எடுத்து கும்பிட்டார் . பதிலுக்கு வணக்கம் தாத்தாவும் வணக்கம் செலுத்தி சைகையிலேயே நலமா என்று விசாரித்தார். நான் எங்கள் வீட்டில் ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த ஒரு வெள்ளைத் துண்டு ஒன்றை, ஓடிப் போய் அவர் கழுத்தில் அணிவித்தேன் . என் கையை குலுக்கி நன்றியும் தெரிவித்தார். என் அண்ணன் ஒரு இளநீரை அப்படியே சீவியது , அவர் கையில் கொடுத்தார் . அந்த மாலை வேளையிலும் அவர் மறுக்காமல் வாங்கி இளநீர் முழுவதையும் குடித்தார். அங்கு அருகில் நின்ற , யாரோ ஒரு புகைப்படம் எடுப்பவரை எங்களையும் சேர்த்து படம் எடுக்க சொன்னேன் . அந்த தலைவரும் தனித்தனியாக எங்களுடன் படம் எடுத்துக் கொண்டார் . அவர்தான் அந்த தேர்தலில் மாபெரும் வெற்றிப் பெற்று முதன் முதலாய் ஆட்சிக்கு வந்து , முதல் அமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட " பேரறிஞர் அண்ணா " அவர்கள் ஆவார் . என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளில் முக்கியமானதும் , பேரானந்தம் அளித்த மணித்துளிகள் அது . (அந்த படத்தை இங்கே பதிவிட தேடித்தேடி ஓய்ந்து விட்டேன் .. கிடைக்க வில்லை ).
அதே போன்று அவர் மறைந்தவுடன் மாபெரும் கூட்டத்துடன் சேர்ந்து , அன்றைய கின்னஸ் ரெகார்ட் என்றும் சொல்வார்கள் , அன்றைய மவுண்ட் ரோடில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து கண்ணீர் மல்க பார்த்ததையும் என்னால் இன்றும் மறக்க முடியவில்லை .
நான் நேரில் சென்று கண்ட மற்ற மிக பெரிய தலைவர்களின் இறுதி ஊர்வலங்கள் ....தந்தை ஈ வெ ரா . பெரியார், பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி ஆகும் .
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தை காண இயலவில்லை , காரணம் அந்த நேரத்தில் அண்ணா சாலையை அடைய முடியாமல் எழும்பூரில் நடந்த போலீஸ் கெடுபிடியும் , சில அசம்பாவிதங்களும் , போலீஸ் தடியடியுமே . நேரலையாக தொலைக்கட்சியில் கண்டேன் .
ஒருவர் வாழும்போது எப்படி வாழ்ந்தாலும் அவரின் அருமை பெருமைகளை உணர்வது , அறிந்து கொள்வது அவரின் மறைவுக்குப்பின்னும் , இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்கள் வெள்ளமும் சான்றாகும் .
வாழும்வரை நாம் மற்றவர்க்கு பயன்பெறும் வகையில் வாழ்ந்திட வேண்டும் என்பதை என்றும் உள்ளத்தில் உறுதியாக கொள்ள வேண்டும். நாம் வளம் பெறுவதிலும் இன்பம் அடைவதுமே நம் வாழ்வின் குறிக்கோளாக எண்ணி வாழ்வதைவிட , அடுத்தவர் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறைக் கொண்டவராக வாழ்ந்தால் மனநிறைவோடு , மகிழ்ச்சியோடு வாழலாம் . பிறக்கும்போது வெறுங்கையோடுதான் வருகிறோம் ...திரும்பிப் போகும்போதும் வெற்றுடலாக்த்தானே
செல்கிறோம். எதையும் எடுத்து செல்வதில்லை....
இன்னும் சொல்லப்போனால் , கவியரசு கண்ணதாசன் அவர்களின் வரிகளின்படி,
"வீடு வரை உறவு , வீதிவரை மனைவி , காடுவரை பிள்ளை , கடைசிவரை யாரோ ...." , உண்மைதானே.
அக்காலத்தில் நாமறிய வாழ்ந்தவர்களையும் , இக்காலத்தில் நம்மை சுற்றி , நாம் காணும் மனிதர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ...தனிமையில் சிந்தித்துப் பாருங்கள் பொருள் விளங்கும் . உண்மைப் புலப்படும் . இன்று சுயநலமே மிகுந்து , பொதுநலமோ மறையத் தொடங்கிவிட்டது . நமக்குப் பின்னும், வளரும் வருங்காலம் நலமோடும் மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட வேண்டும் என்றே நினைத்தல் வேண்டும் . மூத்தோரும் முதியோரும் முன்னுதாரணமாக திகழ்தல் வேண்டும் . இளையோர் அவர்களை பின்பற்றி வாழவேண்டும் . இதுவே என் விருப்பம்.
மீண்டும் சந்திக்கிறேன் ....
பழனி குமார்