யார் மீது குற்றம்

மெது மெதுவாய் ஊர்ந்து கொண்டிருக்கிறது பேருந்து.
வழி நெடுகிலும், வாகனங்களின் நெரிசல்.
சந்து கிடைக்காதாவென அங்கும் இங்கும் மாறும் இருசக்கர ஓட்டிகள்.
உருட்டி உருட்டி நாற்பது நிமிட தாமத பயணம்.
பின்னால், அவசர ஊர்தியின் அலறல் சத்தம்.
தட்டி தட்டி ஓட்டிக்கொண்டிருக்கையில், பேருந்து நிருத்தம்வேறு,
நிற்கவேண்டாமென ஒட்டுநர் நினைத்தாலும், முன்னுள்ள நெரிசலால்,
பேருந்தை சற்று நிறுத்த, கீழிருந்த பயணிகள் கூட்டம் முண்டியடித்து
ஏறிக்கொண்டிருக்க, "சீக்கிரம் ஏறு சீக்கிரம் ஏறு" குரல்கொடுத்தவாறே ஓட்டுனர்
பேருந்தை முன் நகர்த்த, ஆவேன பெரும் சத்தம்.
பேருந்தில் ஏற முயன்ற பெண்மணி கிழேவிழுந்துவிட்டார்.
பேருந்தில் ஏறியிருந்த உறவினர்கள் கதறிக்கொண்டு, ஓட்டுனரை திட்ட,
மற்றொரு பயணி, ஓட்டுனருக்கு சாதகமாக பேச,
கூச்சல் இன்னும் அதிகமாகிறது. பேருந்திற்குள் ஒரே களேபரம்.
நல்லவேளையாக அந்த பெண்மணிக்கு, அடிஏதுமில்லை.
கடைசியில், நடத்துனர் நடந்ததை சொல்லி, ஓட்டுனரின் அவசரத்திற்கு
காரணம் புரியவைத்து, ஒருவழியாக கூச்சல் குறைந்தது.
இதில், யார் மீது குற்றம்?...

அவசர ஊர்திக்கு வழிவிடநினைத்து பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மீதா?
ஓட்டுனரை நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்ல சொல்லாத நடத்துனர் மீதா?
அவசரம் புரியாமல், குடும்பமாக பேருந்தில் ஏறிய பயனியர் மீதா?

பின்னால் வருவது, அவசர ஊர்தி என்கிற தவிப்பு ஒருபுறம் இருந்தாலும்,
தன் பேருந்தில் ஏறுவோரை, இறங்குவோரை கவனிக்காமல் விட்டுவிடலாமா?

அவசர ஊர்திக்கு வழிவகை செய்வதுபோல், பேருந்தை இயக்க தன்னால் இயன்றதை உதவ முன்வரவில்லை? அவசர ஊர்தியில் இருப்பது யாரோ ஒருவர்தான் என்ற எண்ணமா?

தங்கள் வீட்டில் ஒருவர் கீழே விழுந்தவுடன் அலறித்துடிக்கும் குடும்பம்,
அவர்போல, யாரோ ஒருவர்தான் உயிர்போகும் தவிப்பில் அவசர ஊர்தியிலும்
இருக்கிறார் என்பதை உணர மறந்ததேன்?

இதில், ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு குற்றம் இருப்பினும்,
தினமும் சாலையில் பயணிக்கும் நாம் கவனிக்கவேண்டியது..

அவசர ஊர்திக்கு உடனடியாக வழிவிடவேண்டும்.
அவசர வாகனங்களை நெரிசல்களில் வேகமாக போகவைக்க,
நம்மால் முடியுமெனில், உடனடியாக உதவுவோம்.
பேருந்திலோ, தொடர்வண்டியிலோ, வாகனங்களிலோ குடும்பமாக செல்லும்போது,
தங்களில் குழந்தைகள், முதியோர், பெண்களை முதலில் பத்திரமாக ஏறவைத்துவிட்டு, பிறகு ஆண்கள் ஏறலாம்.
பயணங்களில், எப்பொழுதும், எங்கும் கவனமாக செயல்படுவோம்.
உடமைகள், உயிர்கள் இழப்பை தவிர்ப்போம்.

எழுதியவர் : சீர்காழி சபாபதி (12-Jul-15, 10:29 pm)
Tanglish : yaar meethu kutram
பார்வை : 176

மேலே