ஓர் தமையனின் தாலாட்டுப் பாடல்
சொட்ட சொட்ட நனைந்திட்டேன்
சொட்டும் விழியில் விழுந்திட்டேன்
சொட்டாமல் புன்னகையோ இதழோரம்
சொட்டும் அன்புரசத்தில் மகிழ்ந்திட்டேன்
சொல்லவோ அவளன்பை கவிசுவையாக
சொல்லினிக்கும் தமிழ் அமுதோடு....
மஞ்சள் வெயில் கிறங்கடிக்க
மதிமயக்கும் மாலையிலே
மண்வாசம் அடித்ததோ
மங்கையவள் தமையன் அவன்
மங்கா ஒளிவீசி வந்தானோ..
தமக்கையோ காத்திருக்க
தனியே பார்த்திருக்க
தமையனவன் வந்தானோ
தங்கையை தாலாட்டி சீராட்ட...
கண் உறங்கு கயல்விழியே
கண் இருட்டி வெளி இருண்டு
கருமை நிறமானதோ வெண்மேகம்
கண்மணியே கண் உறங்கு..
வெளியோடும் மேகமதில் முழுமதி
வெளியே வந்துதித்து உனை காண
வெட்கத்தில் நாணமிட்டு வெட்டவெளியில்
வெள்ளியது மேகவீதியிலோட
வெண்பட்டே அமுதே கண் உறங்கு...
கார்மேகம் கருத்ததோ
கார்முகில் நிறைந்ததோ
காலம் கனியட்டும் நிறைவோடு...
கதிரவன் ஒளிவீச வருவானே
கண்மணியே கண் உறங்கு முன்னே...
வெள்ளியதில் ஓர் பாட்டி
வெள்ளை நிற ஆடையுடுத்தி - பருப்பு
வெந்த வடை செய்தாளோ
வெள்ளந்தியாய் கதை கேட்டவளே
வெள்ளி மறைந்துவிடும்
கண்மணியே கண் உறங்கு...
காலை முதல் மாலை வரை
காட்சியாய் பல வந்து போக
கண் காட்சி திரையாகி
கட கடவென பட்டியலிட்டு
கண் அயரா செய்திடுமே
கண்மணியே கலங்காதே
காத்திடுவேன் தமையன் நானே
கண் உறங்கு...
கண் அயரும் நேரத்திலே
கனவாய் திகில் கொண்டு
கலைத்திடுமோ உன் பயமே
கலங்காதே துணை வருவேன் நானுமே...
களைத்திட்ட உன் உடல்
களைப்பைத் தீர்த்திட
கலைந்த கனவில் நொந்து
கண் அயர துடித்திடுவாய்
கண்மணியே கலங்காதே
கனவிலும் நினைவிலும் உறுதுணையாய்
கடைசிவரை நான் வருவேன்
கடைசிக்குப் பிறகும் நான் வருவேன்
கண்மணியே கண் உறங்கு...
தாலாட்டிச் சீராட்ட நானிருக்க
தமக்கையே ஏன் தயக்கம்
தாமதியாமல் கண் அயர்ந்து
தாழ்த்தாமல் நீ உறங்கு...
நீ உறங்கு நீ உறங்கு
நீளட்டும் இரவு இன்று மட்டும்
நீங்கட்டும் உன் கவலையெல்லாம்
நீக்கமற நிறையட்டும் மகிழ்ச்சியுனக்கு
நீவீர் உறங்க நானுனக்கு பாடுகிறேன் தாலாட்டு....