சிலந்தி வலை
வாசற்படியில்லாமல்
கட்டிய வீட்டுக்கு
வேயப்படாத கூரை.
விருந்தாளிகளாய் வருவோர்
விருந்தாகும் வினோத வீடு.
மரணிக்க வருகின்ற பூச்சிகளுக்கு
மரணத்தின் முன்பே வைக்கப்படும்
மலர்வளையம் அல்லது
பூச்சிகளின்
அந்தர மயானம்.
சிக்கலான வீட்டுக்குள்
சிறப்பாக வாழ்வது பற்றிக்
கற்றுக் கொள்ள
கட்டப்பட்ட பள்ளிக்கூடம்
சிக்கலுக்குள் வாழ்ந்தாலும்
சிக்கிக் கொள்வதுகளிடத்தில்
சிக்கிக் கொள்ளாமல் வாழ்வதன்
சிறந்த எடுத்துக் காட்டு
சிக்கல் இல்லாமல் போனால்
வாழ்தலில் சுவாரஸ்யம் இல்லை
என்பதையும் உணர்த்தும் சிந்தனை
கூரையில்லா வீட்டுக்குள்
குறைவில்லாக் குடும்பம்
நடத்துவதற்கான குறும்படம்
அரண்மனை வாசலில்
துப்பாக்கியோடு
நிற்கும் காவலனை ஏமாற்றிவிட்டு
அனுமதியில்லாமல்
கொத்தனாரில்லாமல் அரண்மனைக்குள்ளும்
கட்டப்பட்டு விடுகிற இந்த வீடு
அசந்தால் காவனின்
துப்பாக்கிகுள்ளும் கட்டப்பட்டுவிடும்
விளக்கைப் பிடித்துக் கொண்டு
கிணற்றில் விழுவதாய் வீழும்
மின்மினி பூச்சிகளிடம்
வெளிச்சத்தையோ ..
நிறங்களில் கவர்ச்சியூட்டி
மயக்குவதாக நினைத்து வந்து
மாட்டிக்கொள்கின்ற
வண்ணத்துப் பூச்சிகளிடம்
அழகையோ வாங்கிக்
கொள்ளாவிட்டாலும்
அழகாய் வெளிச்சமாய் வாழும்
சிலந்திகள் தன்னம்பிக்கையின் வேர்கள் !
இதோ எங்கள் தேசத்திலும்
கட்டப்பட்டு விட்டதே
தேர்தல் சிலந்தி வலைகள் .
கவனம். அபேட்சக பூச்சிகளின்
அகோரப் பசிக்கு மாட்டி இரையாகாமல்
நாமும் விழித்துக் கொள்வோம்.
*மெய்யன் நடராஜ்