மனிதம் மரணிக்கிறது
உலகத்தில் உலவும்
மனித மாதிரிகள் எத்தனையோ
மனிதர்கள் சிலபேர் தவிர ..............
மனிதன் அரிதிற் கிடைக்கா அற்புத படைப்பு
இருந்தும் அத்தனை அலட்சியம்
எண்ணிக்கையில் மனிதன் எத்தனை கோடி
இரக்கத்தில் ?
எதை எதையோ தேடி
எவர் எவரோ
எப்படி எப்படியோ
ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை பயணம் ............
கருணையையும் இரக்கத்தையும்
புதைகுழியில் புதைத்துவிட்டு
சுயநல வெற்றிக்காக
சூழ்ச்சி வாழ்க்கை .............
வெறிபிடித்தவர்களும் வேதாந்திகளும்
பித்தர்களும் சித்தர்களும்
நல்லவனும் கெட்டவனும்
நாளும் அறிந்த கலைஞனும் அறிஞனும்
கொலைகாரனும் கொள்ளைக்காரனும்
கலந்த கூட்டு கலவை பூமி .............
நியாயத்தின் கண்ணை கட்டி
நீதியை நிதியால் விலைக்கு வாங்கும்
ஓர் விசித்திர உலகில்
மனிதம் மரணித்து கொண்டிருக்கிறது ............
இரக்கமற்ற இறுகிப்போன
பாறை மனங்களில்
முட்டி முட்டி முளைவிட முடியாமல்
தோற்றுப்போகின்றன
எவ்வளவோ புன்னகை பூக்கள் ............
எவ்வளவோ விதைத்தும்
கருனைச்செடி மட்டும்
முளைக்க மாட்டென்கிறது
பாலைவன உள்ளங்களில் .............
துர் சிந்தனைகள் துளிர்ப்பதால்
நல சிந்தனைகள் நாற்றமாக தெரிகிறது -
துப்பாக்கியின் இலக்கு இரத்தமாகிவிட்டது
இரக்கம் இறந்துவிட்டது ...........
மனிதனே மனிதனை
சித்திரவதை செய்துகொண்டு இருக்கிறான் -இறக்கிறான்
சிந்திப்பது யார் ?
விதவிதமாய் படுகொலைகள்
விபரீத தண்டனைகள்
துடிக்க துடிக்க மடியும் மனிதன் -
எல்லா கடவுளும் கூறும் இரக்கம் எங்கே ?
கற்பனைக்கும் எட்டாத
நரக தண்டனைகள் நாடளுகின்றன -
இரக்கமும் கருணையும் தலைமறைவாகி
தலைமுறைகள் கடந்துவிட்ட நிலையில் ............
மனிதம் மரணிக்கிறது .............
கவிஞர் சுந்தர வினாயகமுருகன்