இவர்தாம் காமராசர்

( சூலை 15 இன்று பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் )
இவர்தாம் காமராசர்
பாவலர் கருமலைத்தமிழாழன்
அரசியலே விளம்பரமாய் ஆன பின்போ
------ஆட்சிசெய்வோர் தம்பணத்தில் செய்தல் போல
அரசாங்கத் திட்டங்கள் துவக்கி வைக்க
------அழகாகத் தம்பெயரைப் போட்டுக் கொள்வர்
சிரமுயர்த்திப் பார்க்கின்ற வண்ணம் தம்மின்
------சிரித்துநிற்கும் ஆளுயரத் தட்டி வைப்பர்
வரலாறு படைப்பவராய்ப் புகழ்ந்து பேச
------வரிசையாக அடியாட்கள் நிறுதிக் கொள்வர் !
செயல்படுத்தும் திட்டத்தின் செலவைப் போல
------செய்திடுவர் விளம்பரந்தான் செய்வ தற்கே
செயல்படுத்தும் திட்டத்தின் மதிப்பில் பாதி
------செயலாணை தருவதற்கே எடுத்தும் கொள்வர்
வயல்முழுதும் பயிராகக் களைக ளிங்கே
------வளர்ந்ததைப் போல் கயவர்கள் நிறைந்த தாலே
பயன்திட்ட மெல்லாமே ஆட்சி யாளர்
------பணம்குவிக்கும் திட்டமாக ஆன தின்றே !
மலைகுடைந்து அமைத்திட்ட குந்தா வென்னும்
------மாவணையின் சிறப்புதனை விளக்கு தற்கே
கலைநுணுக்கத் திரைப்படந்தான் எடுத்து ரைத்தால்
------காண்கின்ற மக்களெலாம் அறிவார் என்ற
நிலைதன்னை அரசாங்க அலுவ லர்தாம்
------நிறைவேற்றித் தந்திட்ட முதல்வ ரான
விலைபோகா காமராசர் தம்மி டத்தே
------விளம்பரந்தான் செய்வதற்கே விளம்பி நின்றார் !
செலவென்ன ஆகுமென்று காம ராசர்
------செப்பியஅவ் அலுவலரைக் கேட்ட போது
இலட்சங்கள் மூன்றாகும் எனவு ரைக்க
------இயம்பிட்ட அலுவலரை நோக்கி அந்தச்
செலவினிலே பத்துஊரில் பள்ளிக் கூடம்
------செம்மையாகக் கட்டிடுவேன்; வேண்டாம் எந்த
விளம்பரமும் என்றுரைத்த தலைவர் போன்று
------விளம்புதற்கே இன்றெந்த தலைவர் உள்ளார் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (15-Jul-15, 9:46 am)
பார்வை : 216

சிறந்த கவிதைகள்

மேலே