மிரட்சியின் திரட்சிகள்

ஈரக் கரையினில்
நீளும் இரவினில்
நீல விசும்பிலே
நிற்கும்
நிலவுக் கண்ணெதிரே
மணல் பூக்கள் மேல்
மனித வண்டாய்
தனித்து இருந்தேன் நான்
உலகின் மிச்சம் போல்

காட்டு மாளிகையில்
கிளையில்லா மரத்தடியில்
இலையறியா மர நொடியில்
காற்று துரத்திய
ஒற்றை இலையாய் நான்

இளஞ் சிங்கங்களின் முன்
இறைச்சியாய்
உயிருடன் நான்

அறுக்கப் பட்ட சிறகுகளுடன்
ஆயிரம் மலைகள் பறந்து
உலகின் எல்லையில்
உயிர் உதிர்க்கும் நான்

ஒரு மழையில்
ஒவ்வொன்றாய் மனித விரல்கள்
என் மானுட குடை கிழித்து
தவறுதலாய்
என்னை கொன்றுப் போகிறது
நிதானமாய் நித்தம்
இது நடக்கிறது

கையில்
மலர் வளையத்துடன்
காத்திருக்குது காலம்

நீர் குடிக்கப் போன நிஜத்தில்
நீரோடையில் விசம்
விசம் குடித்த விசேடத்தில்
விமரிசையாய் விழா
என் மரண ஊர்வலத்தில்
இன்னும் மரணிக்காமல் நான்

எரிந்து கொண்டிருக்கும்
என் சாம்பலில்
எரிக்க உழைத்தவர்களின்
வியர்வைத் துளிகள்
அபராதி யார்

எரிப்பவர்கள்
பீனிக்ஸ் பறவையாய்
உயிர் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்
நானல்ல

ஒற்றை மெத்தையில்
கொத்தாய் தனிமை
காட்டு மனசில்
ஓநாய்கள் உரசல்
என் மூச்சுக் காற்றும்
முப்பது கோடி காற்றாய்
கனமாய் நான்

எழுதியவர் : Raymond (16-Jul-15, 4:41 am)
பார்வை : 185

மேலே