இரவின் மகனாய்

இரவு
உலவும் நேரம்
வயிறுகள் அடங்கிய
பணக்கார தருணம்
அடங்காத வயிறுடன்
நடுங்கும் விழியுடன்
இரவை விட வேகமாய்
வீதியில் நடக்கிறான்
வறுமை விதியுள்ள
அந்த சிறுவன்

இரவோ
பகலை விழுங்கிய பகட்டில்
செரிக்க நடக்கிறது
இவனோ
பகல் முழுதும்
வெறுமையை விழுங்கிய
கொடுமையில்
பசி வெப்பத்தின் புழுக்கத்தில்
குப்பைத் தொட்டிகளைத் தேடி
நடக்கிறான்
வயிறு ஆற்றிக் கொள்ள

நாய்கள் வீடுகளை
ஆக்கிரமித்து விட்டதால்
குப்பைத் தொட்டிகளிலும்
வறுமை

தொலைக்காட்சியில்
நடிக்கும்
அழுகாட்சிகளை கண்டு
அழும் வீடுகளை
நிஜமாய் ஓர் வறுமைக் காட்சி
கடந்து போகிறது

சற்று தூரத்தில்
செல்வச் சீமாட்டி
கையில்
அவள் செல்லக் குட்டி
வெள்ளிக் கிண்ணத்தில்
அன்னம்
அடம் பிடிக்கும் குழந்தை
அதட்டினாள் அவள்
சரியா சாப்பிடலனா
பூச்சிகாரனுக்கு கொடுத்திருவேன்

ஆச்சர்யப் பட்ட
அந்த சிறுவன்
தாய்மை தேடினான் அவளிடம்
பூச்சிகாரன் வரலனா
அந்த சாப்பாட
எனக்கு தரீங்களா அம்மா
என தளர்ந்தான்

தள்ளிப் போ பா
பிள்ளைக்கு கண்ணு படப்போகுது
என
குப்பையின் வயிற்றுக்காய்
உணவை பத்திரப்படுத்தினாள்
அந்த பெண்

அவள் வீட்டு குப்பையோ
பலத்த வீட்டு காவலில்

வேடிக்கை பார்த்த
இரவின் மார்பில்
வெக்கை
இரவுத் துடிப்பால்
மார்பு சுரந்தது
அடை மழையாய்

மழை குடித்து
மண் மடியில் தூங்கினான்
இரவின் மகனாய்
அந்த சிறுவன் ...!

எழுதியவர் : Raymond (16-Jul-15, 4:04 am)
Tanglish : iravin makanaai
பார்வை : 124

மேலே