என் சமாதியில் நட்டு வை

என் சமாதியில் நட்டு வை

எனக்கு எப்போதும் போரின்மீது
நம்பிக்கை இல்லை
இருப்பினும் நீ ஓயாமல் என்னை போருக்கு இழுக்கிறாய்

அமைதிக்கான வழிகள் ஆயிரம் இருந்தும்
போருக்கான வழிகளைத் தேடி அலைகிறாய்

அமைதியாய் இருக்கும் என்னை
கோழை என்கிறாய்
வேண்டாத வார்த்தைகள் சொல்லி வம்பு சண்டைக்கு அழைக்கிறாய்

அடுத்தவர் மனதை நோகடித்துவிட்டு
என்மனம் யாருக்கும் புரியவில்லை என்கிறாய்

வெற்றிப்பெற வேண்டுமென்று வெறிகொண்டு அலைகிறாய்
அடுத்தவர் வேதனை எப்படி உனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது

நீ உமிழ்ந்த வார்த்தை தீப்பொறிகளில்
சாம்பலாகிக் கொண்டிருக்கும் நான்

ஒரு வார்த்தை உதிர்த்ததற்கு
உயிரை பறித்து விட்டதாக ஓலமிடுகிறாய்

கோபமும் ஆணவமும் தலைக்கேறி
தாண்டவம் ஆடுகிறாய்
அண்டப்பெருவெளியில் அணுவுக்கு அணுவான பொருள்நான் என்பதை உணராமல்

அடுத்தவரை அழித்து நான் பெறும் வெற்றி
என் அழிவின் ஆரம்பம் எனபதை உணர மறுக்கிறாய்

தொடர்ந்து மண்டியிட்டு கேட்கிறேன்
சண்டை வேண்டாமென்று

எப்போதும் போலவே
உன் செவிகளுக்கு
அது எட்டவில்லை

யாருடைய உயிருக்கும் இங்கு உத்தரவாதம் இல்லை
மறுநாள் காலை ஒருநாள் நமக்கு விடியாமல் போகலாம்

அப்படிப்பட்ட ஒரு காலையில்
உன் சமாதான கொடியை
என் சமாதியில் நட்டு வை

எழுதியவர் : சூரியகாந்தி (16-Jul-15, 3:52 am)
பார்வை : 83

மேலே