பிரதி எடுக்க முடியா பிம்பங்கள் - 4
ஒரு பின்னிரவில்
எனக்குள்ளிருந்து வெளியே வந்தான் அவன்...
ஏ பித்தனே...
நான் தூங்கப் போகிறேன்
என்னை தொந்தரவு செய்யாதே என்றேன்..
நீ தூங்கிக் கொண்டுதான் இருக்கிறாய்
இது கனவு என்றான் அவன்...
தூங்கிக் கொண்டிருக்கும் போதே
மீண்டும் தூங்க செல்வது
கனவில் மட்டும்தான் சாத்தியம்
கனவில் மட்டும்தான் நீ
உண்மையாக இருக்கிறாய்...
அடுத்தவர் காணும் கனவை உன்னால் திருட முடியாது
அவர் உழைப்பை நீ திருடுவது போல...
முட்டாளே...
கனவு என்பது வெறும் மாயை என்றேன்...
அப்படிஎன்றால் ''கனவு மெய்ப்பட வேண்டுமென்று''
ஏன் வேண்டிக் கொள்ள வேண்டும்?
நீ விழித்துக் கொண்டிருக்கும்போது
கனவுகள் கண்மூடி இருக்கும்
நீ கண்மூடி இருக்கும்போது
கனவுகள் விழித்துக் கொண்டிருக்கும்...
கனவுகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை
உனது கட்டுப்பாட்டுக்குள்ளும் அது இல்லை...
வெற்றியைக் கூட விலை கொடுத்து
வாங்கி விட்ட உனக்கு
காசு கொடுத்து கனவை வாங்க முடியாது என்பதில்
தோற்றுக் கொண்டிருக்கிறாய்...
நீ நினைத்தால் மருந்தை கொடுத்து கூட
தூக்கத்தை வர வைத்து விடுவாய் - ஆனால்
கனவு காணாதே...
கனவை வர வைக்க தூக்கம் மட்டும் போதுமென்று
''வரும்போது எதுவும் கொண்டு வருவதில்லை
போகும்போது எதுவும் கொண்டு போவதில்லை'' என்பதை கூட
ஒரு விழிப்பின் வழியே
உணர்த்தி விட்டு போவது கனவுகள்தான்...
பித்தனே... போதும் நிறுத்து...
கண்ணால் காண்பதே பொய்
இதில் கனவு காண்பது எப்படி நிஜமாகும் என்றேன் ....
கனவுகள் நிஜங்களை விட உண்மையானது என்று
நீ அறிந்திருக்க வில்லை
கனவுகள்தான் உன் கண்களை புனிதப் படுத்துகிறது...
கனவுகளில் அழும்போது உன் கண்கள்
கண்ணீர் சிந்துவதில்லை என்றான் அவன்...
கடவுள்தான் புனித படுத்துவார்
கனவுகள் அல்ல என்றேன் ஏளனமாக...
கடைசியாக என் கனவை கலைத்தவாறே
சொல்லத் துவங்கினான்...
கனவுகளில் எப்போதும்
காட்சிப் பிழை இருப்பதில்லை கண்களைப் போல...
பார்வையற்றவர்களுக்கும் காட்சி தருவதில்
பாரபட்சம் பார்ப்பதில்லை கடவுளை போல...
********************* ஜின்னா *********************
அவன் இன்னும் சொல்வான்... (தொடரும்...)