தகவல் தொழில்நுட்பத்தின் தலைமகன்களே

குறிப்பு : தகவல் தொழில்நுட்பத்தின் தலைமகன்களுக்கு சமர்ப்பணம் !

ஒரு நொடியும் உன்னை விட்டுப் பிரியேன் !
இரவும், பகலும் உன்னையே நினைத்து
உயிர் வாழ்கிறேன் என்று
காதல் மொழி பேசுகிறான்
நம் கதாநாயகன்,
கன்னிப் பொறியைப் பார்த்து அல்ல !
கணிப்பொறியைப் பார்த்து !!!

ஆம்,
கன்னியைப் பார்த்துக்
காதல் செய்ய வேண்டியவர்கள்
இங்கே,
கணினியை அல்லவா
கட்டிப்பிடித்துக் கிடக்கிறார்கள் !

அன்று,
மடியில் கன்னியை சாய்த்து
மணிக்கணக்காய் கதை பேசியவர்கள்
இன்று,
மடிக்கணினியை மடியில் வைத்து
மணிக்கணக்காய்ப் புலம்பித் திரிகிறார்களே!

பாவம் இவர்கள் !

இலட்சங்களில் சம்பளம் பெறுவதால்
பலருக்கு இங்கே
இலட்சியங்களே மறந்து போகின்றன !

தூக்கமே தொலைந்து போன பிறகு
கனவுகளைத் துரத்தும்
வாய்ப்புகளே வராமல் போகின்றன !

அக்காவின் திருமணம்
தங்கையின் மேல்படிப்பு
சர்க்கரையாய்ப் பேசும்
பெற்றோருக்குச் சர்க்கரை வியாதி !
என்று காரணங்கள் அதிகமாக
காந்தித் தாத்தாக்களும்
அதிகமாய்த் தேவைப்படுவதால்
தகவல் தொழில்நுட்பமே வழி எனும்
தவறான தீர்ப்புகள் தரப்படுகின்றன !

நாகரிகத்தின் நடை உடை மாற்றம்
ஆங்கிலத்தின் ஆதிக்கப் பேச்சு
சமூகத்தின் தேறிய மரியாதை
கண்ணாடி அறைகளின் காட்சிப் பிழை
இவையாவும்,
தகவல் நுட்பம் மட்டுமே
தலைசிறந்த நுட்பம் என்னும்
போதை விளம்பரங்களை
சுமந்து செல்கின்றன !!

ஒரு நாள் கூடுதல் விடுமுறைக் கேட்டு
பல நாள் அதற்கு விண்ணப்பம் போட்டு
ஒரு முறை ஊருக்குச் சென்று வந்து
சொர்க்கத்தைக் கண்டதாய்க் கூறும்
பக்கத்துக்கு இருக்கையின்
பத்மா அக்காவைப் பார்க்கும்போது
பச்சிளங்குழந்தையின் பரிதாபமே
தெரிகிறது !


உலகத்தையே தனக்குள் அடக்கியதாய்க்
கணிப்பொறியைக் கூறும் அறிவியல் மேதைகளே !
அதற்குள்ளே மூழ்கிக் கிடந்து
உலகத்தையே மறந்து போன
இளைஞர் கூட்டத்தை கண்டு கொண்டீர்களா ??

தோழர்களே ! தோழிகளே !
சலவை செய்த சட்டையும்
பளபளக்கும் காலணியும்
கொஞ்சமாய்த் தெரியும்
புன்னகையும் கொண்ட
ஐடி இளைஞனை எப்போதாவது
பார்க்க நேர்ந்தால்
*கொடுத்து வைத்தவன் நீ* என்று மட்டும்
சொல்லி வைக்காதீர்கள் !

பாவம் !
உண்மையிலேயே அவன்
கொடுத்து வைத்தவன் தான்
"காலத்தையும், உழைப்பையும், கண்ணீரையும்"

குறிப்பு : தகவல் தொழில்நுட்பத்தின் தலைமகன்களுக்கு சமர்ப்பணம் !

எழுதியவர் : அருண் பாரதி (15-Jul-15, 6:36 pm)
பார்வை : 1279

மேலே