பசி - சந்தோஷ்

பசி.

கெளரவப் பசியெடுத்த
ஜாதித்தின்னிகள்
மென்று கொன்றுவிடுகிறார்கள்
காதல் ஜீவன்களை!

---

சில நேரங்களில்
கெளரவத்தை பதம்
பார்த்துவிடுகிறது
பசிக்கொடுமை..!

---

கோப பசியினை
போக்கிவிடும்
மெளனச்சோறு..!

---

கர்வப் பசியுடைவன்
யாசகமிட கூச்சப்பட்டு
பதுங்கிக்கொள்கிறான்
கெளரவக் கல்லறையில்.

---

இலஞசப் பசியெடுத்த
பேய்களுக்கு எப்போதும்
இருக்காதோ
நியாய வயிறு ?

---
பசித்து துடிக்கும்
பூமித் தொந்தியினை
கொஞ்சமேனும்
தொட்டுப்பாரேன்
மழையே..!

----

தனிமைப் பசித்த
கருஞ்சாலைக்கு
துணையாக வீழ்கிறது
மரத்தினில் மரணித்த
சருகுகள்..!

-----
எனது வாழ்க்கையினை
தினமாக நாழிகையாக
தின்றுச் செரிக்கிறான்
மரணப் பசியெடுத்த
காலத்தேவன்..!


-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (17-Jul-15, 9:54 pm)
பார்வை : 88

மேலே