அகம் புறம் அந்தப்புரம் நீ - காதலியை வர்ணித்து கவிதை

காதலி
என் அகம் புறம்
அந்தப்புரம்
மூன்றுக்கும்
நாயகி நீ...!

உன் கண்கள்
என்னை கவிஞனாக்கிய கவிதைகள்
அதன் விழித்திரையில்
இருந்தே விரிகிறது
நவீன காலத்து
நானோ தொழில்நுட்பம் போல்
என் உலகம்...!

ஓளியின் வேகத்தில்
ஒளியை ஊடுருவும்
உன் பார்வை
அதில் தான் - என்
நேற்று இன்று நாளையாவும்
வாழ்வின் சாட்சியாகின்றன...

தொலைந்து திரும்புவது
அவ்வளவு எளிதில்
சாத்தியமில்லை
அமேசான் காடாய்
பரந்து விரிந்த
நீண்ட நெடிய
உன் கூந்தல் காட்டினுள்...
டிஸ்கவரிக்கு அழைப்பு விடுக்கிறேன்
உயிர்பிழைத்தல் எப்படி
நிகழ்ச்சியை இங்கு நடத்தட்டும்...!

பசுமையின் நிறம் பச்சையா
யார் சொன்னது
பசுமையின் நிறம் அடர்கருப்பு
சாட்சி - உன் கூந்தல் ...!

நிலா முகம்
என்று சொல்ல மாட்டேன் - உன்னை
காரணம் ;
உன்னைப் பார்த்தபின்
நிலாவிற்கு பெயர்
மாற்றிவிட்டேன்

நீயூமராலாஜி படி அல்ல
என் ஹார்ட்டியாலஜி படி
உன் பெயரை வைத்துவிட்டேன் ...!

பேச கூட வேண்டாம்
உன் இதழ்வழி புன்னகை போதும்
தீவிரவாத மரங்களில்
அகிம்சை பூ பூக்க....

அழகின் எல்லா தனங்களையும்
சுமந்து வந்து
என் வாழ்வின்
எல்லா தருணங்களையும்
சுகப்படுத்தும் புரவி நீ ...
பிறருக்குத்தான் நடந்து கொண்டிருப்பது
கலியுகம்...
ஆனால் எனக்கோ
இது சுக யுகம்..

இது வரையிலான
கவிதை மரபுகளை
இப்போதே தகர்க்கிறேன்
இனி ஒருபோதும்
உன்னை வர்ணிக்க
இயற்கையை உவமையாக்க மாட்டேன்
இயற்கையை வர்ணிக்க
உன்னை உவமையாக்குவேன்...!

நீலக்கடல்
உன் நீலவிழியின்
ஒளிச்சிதறல்...
நீளவானம்
உன் அகம் போல் மாயை ...
கார்மேகம்
உன் கரியகூந்தல் கண்டு
வானமகள் சூடிக்கொண்ட
நிலையற்ற நீர்க்கூந்தல்...
பனிமலைகள்
உன் தேகத்தின் பிரதிபலிப்பு...
விண்மீன்கள்
உன் புன்னகையை மொழிபெயர்த்து
வேற்றுகிரகவாசிகள்
அவர்கள் மொழியில் வெளியிடும்
கவிதை நூல்கள்...

உலக அதிசயங்கள் யாவும்
உன்னைச் சார்ந்தவற்றின்
சாயல்கள்...

சீனப்பெருஞ்சுவர்
உன்னை
வர்ணிக்க எழுதிய
கவிதைக்கான வார்த்தைகளின்
எண்ணிக்கையின் நீளம்....

தாஜ்மகால்
உன் கைப்பிடி இதயத்தின்
பெரிதாக்கப்பட்ட
மாதிரி பிம்பம்...

இன்னும் சொல்லிக்,கொண்டே
போகலாம்...
வார்த்தைகளாலேயே
மீண்டும் ஒரு
சீனப்பெருஞ்சுவர் கட்டலாம்
அல்லது அதை "ஈபில் டவராய்'
தூக்கி நிறுத்தலாம்...

சுருக்கமாக சொல்கிறேன்
உன் ஐம்புலனில்
ஐம்பூதமும் அடக்கம்
சர்வமும் உன் மயம்
ஆயினும் கர்வம்
இல்லாதவள் நீ ...

காதலி
என் அகம் புறம்
அந்தப்புரம்
மூன்றுக்கும் நாயகி நீ...

உன் ராஜ்ஜியத்திற்கு
உட்பட்ட
குறுநில மன்னன் நான்...

- மலைமன்னன்

எழுதியவர் : மலைமன்னன் (17-Jul-15, 11:54 pm)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 1104

மேலே