நன்கொடையாம்
அடம் பிடித்து உருளும் புரளும்
தவழ்ந்து விளையாட கரைசெல்ல ஏங்கும்
முண்டியடித்து மூர்க்கங் கொண்டு
முட்டி மோதும் கரையுடன் கடல் அலைகள்
வான் அலைகள் கை கொட்டும்
ஏளனம் செய்யும் கடலைப் பார்த்து
உருண்டு புரண்டாலும் கடல் அலைகள்
கடலுக்குள் குட்டிக் கரணம் போடவேண்டியதே
சுட்டு விடும் ஒளிக் கதிரால் மெல்ல மெல்ல சூரியன்
அள்ளி வீசும் வெளிச்சத்தையும் வெப்பத்தையும் ,
இதனால்
கடல் அலையும் வான் மேகங்களும்
சும்மா பொசுக்கென அடங்கி விடும்
சூரியனின்
வெப்பம் எப்போ அடங்கும் என
எண்ணித் தொலைக்கும் நிலவு
ஆகா சூரியன் தன் கணக்கில் கொஞ்சமும் பிசகாது
மறைந்து விடும்
பொழுது இருளைக் கவ்வும் நேரம்
நாணம் மிக்க மங்கை என நாற்புறமும்
இடம் பார்த்து இருள் பார்த்து தன்னிலவை
தண்ணொளியை தந்து நிற்கும் நிலவு
குளிர் நிலவில் குதித்து விளையாடும்
குதூகலச் சிறுவர்களாய் நம் குழந்தைகள்
அத்தனையும் பார்த்து பார்த்து கண் சிமிட்டும்
ஒய்யார மின்மினிகள் நட்சத்திரங்களாம்
கூடி விளையாடும் ஒளித்து விளையாடும்
ஒப்பற்ற ஒளித் துகள்களாய் நட்சத்திரங்கள்
முண்டியடிக்கும் வேளையிலும் முட்டி மோதலிலும்
தடுக்கியே விழுவதுண்டு மின்மினிகள் சில
கடலும் நமக்காக கடல் அலையும் நமக்காக
வானும் நமக்காக வான் அலையும் நமக்காக
சூரிய வெப்பமும் நமக்காக வெளிச்சமும் நமக்காக
மின்மினியும் நமக்காக மின்னுவதும் நமக்காக
இயற்கை வளம் தரும் இறுதிவரை உடன் இருக்கும்
இத்தனை வரங்களும் நன்கொடையாம் நமக்காக