உயிர்கொய்வோம் தவறல்ல வாடா தம்பி

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இலக்கியத்தின் வீதிகளில் நடக்கும் போது
---இருக்கின்ற பலபேரை பார்க்க நேரும்
மலர்விரிக்குந் தமிழியினையே மனதில் கொஞ்சம்
---மரியாதை ஏதுமின்றி ஈன மாக
இலகுமொழிக் கவிஞரென சொல்லிக் கொண்டே
---இழவுபடு கொலைசெய்யும் ஈனர் காண்பாய் !
உலகினிலே இவ்வாறு செய்வார் தம்மின்
---உயிர்கொய்வோம் தவறல்ல வாடா தம்பி !

தமிழுக்குத் தமிலென்பார் பள்ளி என்றால்
---தளராமல் பல்லியென்று எழுதச் செய்வார்
அமிழ்தொத்த பழத்திற்கு பலமென் றிங்கே
---அழகாக எழுதிவைப்பார் அறிவி ழந்தார்
குமரனைக் குமறனென்பார் தண்ணீ ரென்றால்
---குற்றமுடன் தன்னீரென் றெழுதி வைப்பார்
அமரநிலை காணுவரோ இவரும் அங்கே
---அழகாக வாழுவரோ அழிந்து போவார் !

எழுதுகையில் பிழைவந்தால் இயற்கை என்பார்
---எடுக்கின்ற உணவினிலே கல்லி ருந்தால்
முழுதாக நீக்காமல் இயற்கை என்று
---மொழிவாரோ சொல்தம்பீ மொழியே என்றும்
தொழுதிடத்தான் வேண்டுபொருள் இஃது ணர்ந்தும்
---தொடந்தவரும் பிழைசெய்தால் வாடா தம்பி
எழுந்திடடா கையிலினிலே தமிழின் வீர
---எழில்கொண்ட கவிதையெனும் வாளெ டுப்போம் !

கலையுடைய தமிழ்மொழியைத் தவறா கத்தான்
---காகிதத்தில் ஏடுகளில் எழுது வோரின்
தலைகொய்ய வயிரத்தின் வாளும் வேண்டாம்
---தமிழர்கை கவிவாளே போதும் வாடா !
கொலைசெய்வோம் தமிழுள்ளே பிழைக ளைத்தான்
---கொணர்வோரை ! அப்பொழுதே தமிழும் வாழும் !
தலையான நெல்லிடையே தவறு கொண்ட
---தாவரமாம் புல்வளரக் கொல்லல் தீதோ ?

பின்குறிப்பு : புரட்சிக்கவிஞரின் கவிதைகளில் ஒன்றினை முன்னோடியாக வைத்து எழுதியது...

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (19-Jul-15, 3:30 pm)
பார்வை : 145

மேலே