தாய் மொழி
மனிதன் எந்த மொழி பேசும் தாயின்
கருவில் இருந்து பிறந்தானோ
அந்தத் தாயின் மொழியே அவன் பாஷை அவன் மொழி
சாதியை மாற்றி விடலாம் சமயத்தையும் மாற்றி விடலாம்
பேசும் மொழி மட்டும் மாறவே மாறாது
அதுவே அவன் தாய் மொழி
அவனுடன் அதுவும் கூடவே பிறக்கிறது
தன்னை மறந்தாலும் தன் தாய் மொழியை மறக்க முடியாது
அவன் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் அவனுடையது
தானுண்ட தாய்ப் பாலில் தாய் மொழிப் பற்றும்
கலந்தே அருந்தும் ஒவ்வொரு குழந்தைக்கும்
தாய் மொழியே உலகில் உயர்ந்தது
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் தாய் மொழியே சிறந்தது
ஒவ்வொரு குழந்தைக்கும்
தாய் மொழியில் பேசும் உரிமை கடவுள் கொடுத்த வரம்
எந்த உறவும் தாய் போல் இல்லை
எந்த மொழியும் தாய் மொழிபோல் இல்லை
தாயைப் போற்றுவோர் தாய் மொழியைப் பேணுவர்
தாய் மொழி காத்திட தயங்காதே
அணைத்துக் காக்கும் உன் மொழியே
ஆசையுடன் பேசினால் தாய் மொழி
அமிர்தம் என இனிக்கும் அறிவாய் நீ