தடைகளை உடைத்து தலைமுறை காப்போம்

சாதிக்கா பிறந்தேன் நான்
இல்லையே
சாதிக்க பிறந்தேன்
வாய் திறந்து சூளுரைக்க
சுருண்டு விழுந்தேன் மண்ணில் .

தந்தையின்
இரும்புக் கரங்கள் இடியாய்
பதம் பார்த்தது கன்னத்தை .

சாதி தான் நமக்கு சாமி
தெரிந்துகொள்
பக்க வாத்தியம் வாசித்தால்
சாத்தானிடமே சாதிபார்க்கும்
அப்பன பெத்த ஆத்தா .

அப்பா சொன்னா கேளும்மா
அடி வாங்கி சாகாத
அம்மா மனசு தாங்குது இல்ல
முந்தானை தலைப்பால்
மூக்கை துடைத்துக்கொண்டாள்
அம்மா.

தினமும் திட்டுபட்டும் திருந்த மாட்டாயா நீ .
பயம்கலந்த பாசத்தோடு
அக்கா .

முயலாதே தங்கையே
முடங்கி போவாய் .
சாதியால் காதலை
சாதலுக்கு
அள்ளிக்கொடுத்த
அண்ணன் .

உன் படிப்பிற்கும் பதவிக்கும் இது
தேவையா.?
என் நலன் விரும்பும் நண்பர்கள் .

துவண்டு விடாதே தொடர்ந்தும் போராடு
வெற்றியும் நானும் என்றும்
உன் விரல்களில் .
ஒட்டிக்கொண்டு எனக்கு உற்சாகமூட்டும் பேனா .

சித்தி....
இந்த புகைபடத்துல நீயும் அழகு .
என்னையும் இவங்க கூட சாப்பிட
கூட்டிக்கொண்டு போ .

நாளிதழ் ஒன்றில்
இன்று
பிரசுரமாகி இருந்த
துப்பரவு தொழிலாளிகளும் நானும்
உணவருத்திய புகைப்படத்தோடு
அக்காவின் மகள் .

எப்படியோ
இனி அந்த பிஞ்சு மனதில்
சாதிவெறி முளைக்காது என்ற
மகிழ்ச்சியில் நான் .!!

எழுதியவர் : கயல்விழி (21-Jul-15, 5:09 pm)
பார்வை : 1197

மேலே