ஏழைநெஞ்சே ஏழைநெஞ்சே

எத்தனைநாள்மண்ணில்வாழ்வாய் ஏழைநெஞ்சே! - தினம்
ஏங்கிஏங்கித் தவிக்கிறாயே ஏழைநெஞ்சே!
கோடிபணம் குவிந்தபோதும் ஏழைநெஞ்சே! - பிறர்க்கு
கொடுத்துதவ மறுக்கின்றாயே ஏழைநெஞ்சே!

சொத்துசுகம் பலஇருந்தும் ஏழைநெஞ்சே! - பிறரை
சுரண்டும் எண்ணம்மாறலியே ஏழைநெஞ்சே!
கன்றருந்த சுரக்கும்பாலை ஏழைநெஞ்சே! கறந்து
காசாக்கி வாழவதென்ன ஏழைநெஞ்சே!

சின்னஉதவி செய்தாலும் ஏழைநெஞ்சே! - அதை
சொல்லிக்காட்டி சுனங்கச்செய்வாய் ஏழைநெஞ்சே!
என்னஎன்றே புரியாதப் புதிரினைப்போல - நீ எத்தனைநிறம் கொள்கின்றாய் ஏழைநெஞ்சே!

அதிகாரம் செய்யும்பதவி கிடைத்துவிட்டாலே - நீ
அடுத்துகெடுக்க எண்ணுகிறாய் ஏழைநெஞ்சே!
இன்றிருக்கும் நிலையினிலே ஏழைநெஞ்சே! - என்றும்
இருக்கும்நிலை வாய்த்திடுமா? ஏழைநெஞ்சே!

தோழனாகப் பழகுகின்றாய் ஏழைநெஞ்சே! - பழகி
தோற்கடிக்க எண்ணுகின்றாய் ஏழைநெஞ்சே !
தாயைப்போல அன்புகாட்டும் தாரமிருந்தும் - பிறரின்
தாரத்தைநீ இச்சிக்கின்றாய் ஏழைநெஞ்சே

எல்லோரும் நல்லவரே ஏழைநெஞ்சே! - நீ
எதையும்எதிர் பாராவிட்டால் ஏழைநெஞ்சே!
சின்னஉதவி கேட்டுவிட்டால் ஏழைநெஞ்சே! - முகம்
சிறுத்துமனம் கடுத்திடுவார் ஏழைநெஞ்சே

நீதிநேர்மை சிறிதுமின்றி ஏழைநெஞ்சே! - நீ
நினைத்ததையே சாதிக்கின்றாய் ஏழைநெஞ்சே!
அடுத்தவரை ஆட்டிப்படைத்து ஏழைநெஞ்சே! - அதில்
அதிகஇன்பம் காணுகின்றாய் ஏழைநெஞ்சே!

சிரித்துவாழ வேண்டும்என்று படித்தபோதிலும்- பிறரை
சீரழித்து சிரிக்கின்றாயே ஏழைநெஞ்சே !
பாவம்செய்து சேர்க்கும்பொருள் ஏழைநெஞ்சே ! - உனக்கு
பயன்படாமல் போவதுண்டு ஏழைநெஞ்சே!

பணமில்லாரைப் பழிக்காதே ஏழைநெஞ்சே! - அவரும்
பல்லக்கேறும் காலம்வரும் ஏழைநெஞ்சே!
குணமில்லாரை கூடிடாதே ஏழைநெஞ்சே! – காசு
கொடுத்தேனும் விலகிவிடு ஏழைநெஞ்சே

இன்றுகாணும் மனிதரெல்லாம் ஏழைநெஞ்சே! - நாளை
இருப்பதுஓர் உறுதியில்லை ஏழைநெஞ்சே!
நாடகமே வாழ்க்கைஎன அறிவாய்நெஞ்சே! - நீ
நன்மைசெய்ய தவறிடாதே ஏழைநெஞ்சே

எதிர்பார்க்கும் குணம்மாற்று ஏழைநெஞ்சே! உன்
எதிரிகூட நண்பனாவான் ஏழைநெஞ்சே!
பகைகொண்டு வாழும்வாழ்வில் ஏழைநெஞ்சே! - நல்ல
பயன்ஏதும் விளைவதுண்டோ? ஏழைநெஞ்சே

கல்விகற்றும் பட்டம்பெற்றும் ஏழைநெஞ்சே! -அதை
கடைபிடிக்க மறுக்கின்றாயே ஏழைநெஞ்சே!
காலம்உனக்கு கற்றுதரும் பாடத்தையேனும் - நீ
கனவினிலும் மறவாதிரு ஏழைநெஞ்சே!

அறிவைவளர்த்து உயர்ந்துவிட்டால் ஏழைநெஞ்சே!- பிறகு
அடுக்கடுக்காய் பொருள்குவியும் ஏழைநெஞ்சே!
இருக்கும்வரை உலகத்திலே ஏழைநெஞ்சே! - நீ
இறுமாப்புக் கொள்ளவேண்டாம் ஏழைநெஞ்சே

சிறகடித்து பறக்கநீயும் துணிந்துவிட்டாலே - அந்த
சிகரமும்உன் காலடியில் ஏழைநெஞ்சே!
எண்ணத்திலே உறுதிகொண்டால் ஏழைநெஞ்சே! - நீ
எண்ணியதை ஏந்திடலாம் ஏழைநெஞ்சே


காலம்கடக்கும் முன்பாக ஏழைநெஞ்சே! - நீ
கடமைசெய்து முடித்துவிடு ஏழைநெஞ்சே!
காலம்கடந்து சென்றபின்னே ஏழைநெஞ்சே! - நீ
கவலைப்பட்டு பயன்என்ன? ஏழைநெஞ்சே

துணிவைஉந்தன் தோழனாக்கு ஏழைநெஞ்சே! - நீ
தொட்டதெல்லாம் பொன்னாகும் ஏழைநெஞ்சே!
விடியாத இரவுமில்லை ஏழைநெஞ்சே! - என்றும்
விலகாத தடைகளில்லை ஏழைநெஞ்சே!

இன்றிருக்கும் நாளைபோகும் செல்வத்தைநம்பி - நீ
இருக்கும்உறவை பகைத்திடாதே ஏழைநெஞ்சே!
இயலாதநிலை வந்தால் ஏழைநெஞ்சே ! - செல்வம்
இனியவார்த்தை பேசிடுமா? ஏழைநெஞ்சே

வான்கொண்ட நிலவைப்போல மாற்றம்கொள்கிறாய் - நெஞ்சே
வாழ்வில்நிலை மாறிபிறரை நாசம்செய்கிறாய்
ஏன்இந்த நிலைஉனக்கு ஏழைநெஞ்சே! முடிவில்
என்னநீதான் கொண்டுசெல்வாய் ஏழைநெஞ்சே

மண்குதிரை மேலேறி ஏழைநெஞ்சே! - நீ
மகிழ்ந்துஆற்றில் இறங்கலாமோ? ஏழைநெஞ்சே !
குவிந்திருக்கும் குப்பைமேட்டை ஏழைநெஞ்சே ! நீ
கோபுரமாய் எண்ணலாமோ? ஏழைநெஞ்சே

உயர்ந்தநிலையில் இருக்கும்போது ஏழைநெஞ்சே! - பிறரை
உதாசீனப் படுத்தாதே ஏழைநெஞ்சே!
தாழ்ந்தநிலை நீஅடைந்தால் ஏழைநெஞ்சே ! - உன்னை
தண்டிக்கவே நினைத்திடுவர் ஏழைநெஞ்சே

நான்குபேர்கள் தூக்கிப்போகும் காலம்வரையும் - நீ
நாணயத்தை இழந்திடாதே ஏழைநெஞ்சே!
சோகம்வந்து சூழ்ந்துஉன்னை சுட்டபோதிலும் - நீ
சொன்னசொல்லில் மாறிடாதே ஏழைநெஞ்சே

செல்வர்களும் வறியவரும் ஏழைநெஞ்சே! - முடிவில்
சேரும்இடம் ஒன்றுதானே ஏழைநெஞ்சே!
உருவில்உடையில் மாற்றமுண்டு ஏழைநெஞ்சே! - உடல்
உணர்ச்சியிலே மாற்றமுண்டோ? ஏழைநெஞ்சே

காய்முற்றி கனிந்துவிட்டால் ஏழைநெஞ்சே! - அது
காம்பினிலே தங்கிடுமா? ஏழைநெஞ்சே!
விட்டுவிலகும் நேரம்வந்தால் ஏழைநெஞ்சே! - நீ
கெட்டியாகப் பிடித்தாலும் தங்குமா?நெஞ்சே!

நீத்தவரை கண்ணெதிரே நித்தமும்கண்டும் - நாம்
நிலைப்போம்என எண்ணுவதேன் ஏழைநெஞ்சே!
கோபத்தைநீ விலக்கிவிட்டால் ஏழைசெஞ்சே! - உனக்கு
கோடிநன்மை தேடிவரும் ஏழைநெஞ்சே

வெண்ணையினை வைத்துக்கொண்டு ஏழைநெஞ்சே! - நெய்க்கு
வெளியினிலே அலைகிறாயே ஏழைநெஞ்சே!
உயர்வுஉந்தன் கைகளிலே ஒளிந்தேகிடக்க - தேடி
ஊர்முழுதும் அலைவதுஏன்? ஏழைநெஞ்சே

இயற்கைநடத்தும் நாடகத்தில் ஏழைநெஞ்சே! - நாம்
இலவசமாய் நடிப்பவர்கள் ஏழைசெஞ்சே!
இன்பம்துன்பம் எதுவந்தாலும் ஏழைசெஞ்சே! - நீ
இயல்பாகக் கொள்ளவேண்டும் ஏழைநெஞ்சே!

கண்கள்திறக்கும் முன்னாலே ஏழைநெஞ்சே! - நீ
கருவறையில் உறங்குகின்றாய் ஏழைநெஞ்சே!
கண்ணிரண்டும் முடியபின் ஏழைநெஞ்சே!- நீ
கல்லறையில் உறங்குகின்றாய் ஏழைநெஞ்சே

பெண்ணைமணம் புரிவதற்கு ஏழைநெஞ்சே! - நீ
பெரும்பொருளை கேட்கின்றாயே ஏழைநெஞ்சே
மண்ணைவிலை பேசிப்பேசி ஏழைநெஞ்சே! - முடிவில்
மண்ணுக்கிரை ஆகின்றாயே ஏழைநெஞ்சே

காய்ந்தாலும் பேய்ந்தாலும் ஏழைசெஞ்சே!- நீல
கடலின்நிறம் மாறவில்லை ஏழைநெஞ்சே!
கெட்டாலும் பட்டாலும் ஏழைசெஞ்செ!- உன்
குணத்தில்ஏதும் மாற்றமில்லை ஏழைநெஞ்சே!

ஆசைஎன்ற நோயினிலே ஏழைநெஞ்சே!- நீ
அன்றாடம் உழல்வதென்ன ஏழைநெஞ்சே!
அடுத்தவரின் வாழ்வைப்பார்த்து ஏழைநெஞ்சே! - பல
அல்லலுக்குள் சிக்குகிறாய் ஏழைநெஞ்சே!

மண்புழுக்கள் மண்ணுக்குள்ளே புதைந்திருந்தாலும் - அவை
மரித்துப்பிணம் ஆவதில்லை ஏழைநெஞ்சே!
துன்பத்தினுள் மூழ்கிநீயும் துவளும்போதிலே - உனக்கு
துணிவுவந்து சேர்ந்துவிடும் ஏழைநெஞ்சே!

இருக்கமான இரும்பும்கூட ஏழைநெஞ்சே! - சூட்டில்
இளகிஉருகி தளர்ந்துவிடும் ஏழைநெஞ்சே!
கல்லான மனமும்கூட ஏழைநெஞ்சே! - அன்பு
காட்டமாற்றம் அடைந்துவிடும் ஏழைநெஞ்சே

அன்புதானே உயர்ந்தசெல்வம் அகிலஉலகிலும் - அதை
அடைந்துமகிழும் வழியைத்தேடு ஏழைநெஞ்சே!
அன்புகொண்டு வாழ்ந்தாலே ஏழைநெஞ்சே! - பிற
அறங்கள்செய்யத் தேவையில்லை ஏழைநெஞ்சே

ஆசைகளை விலக்கிவைத்தால் ஏழைநெஞ்சே! - வாழ்வில்
அல்லல்களும் அலைச்சல்களும் இல்லையேநெஞ்சே!
ஒருசுவையை காண்பதற்கு ஏழைநெஞ்சே! - நீ
ஓராயிரம் சுமைகளையே ஏற்கிறாய்நெஞ்சே!

கனிந்தவார்த்தைப் பேசிப்பாரு ஏழைநெஞ்சே! - உனை
காண்பவர்கள் விரும்பிடுவார் ஏழைநெஞ்சே!
கருணைகொண்டு வாழ்ந்துபாரு ஏழைநெஞ்சே ! - அந்த
கடவுள்உனக்கு அடுத்ததுதான் ஏழைநெஞ்சே!

எழுதியவர். சொ.பாஸ்கரன்

எழுதியவர் : (22-Jul-15, 8:33 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே