அறம் செய்- ராம்

பெற்றவளே எனக்கில்லை பசி தீர்க்க எனதருகில்
சொந்தங்கள் எனக்கில்லை அரவணைக்க இவ்வுலகில்
நாட்களும் நகரவில்லை பசி மறக்க இவ்வயதில்
கடவுளும் காட்டவில்லை யாசிக்க எவ்வழியில்
உணவினை சுவைக்கவே நல்லுறவினை தேடினேன்
தேடலின் தூரமோ தொலைந்தும் தேடினேன்
கரையில்லா கண்ணீரை என்விழிகளில் தாங்கினேன்
பரிதாபம் மட்டுமே பரிசாய் வாங்கினேன்
தண்ணிரில் வரைகிறேன் ஒளியில்லா நிலவினை
கண்ணீரில் கரைக்கிறேன் என் நிறைவேறா கனவினை
பசியினில் பகிர்கிறேன் கரம்தேடும் மனதினை
உலகினில் பிறிகிறேன் கையேந்தும் நிலையினை
சகோதரன் உடனிருந்தால் திசைமாறி நிற்கமாட்டேன்
சகோதரி எனக்கிருந்தால் பசிகாட்டி கெஞ்ச மாட்டேன்
படைத்தவனை கண்டிருந்தால் விதியென்று எண்ணமாட்டேன்
பகிர்ந்தவரை பார்த்திருந்தால் யாசிப்பே செய்யமாட்டேன்
இருப்பவர் கோடி இவ்வுலகினில் இருந்தும்
கொடுப்பவர் யாரோ தேடினேன் நானும்
கருணையை தேடி அலைகிறேன் எங்கும் .......................................................................................................
கடவுளை நாடி அழுகிறேன் இன்றும் .
(முடிந்தவரை பகிரவும் கருணை(கடவுள்) உள்ளத்திடம் -சேவ இல்லம்)