வௌவால் காலங்கள்
வயல் வெளிகளில்
சிந்திக் கிடந்தன சொற்கள்.
வளைந்த நதியின்
நீர்ப்பரப்பில் பெருகுகிறது
என்னைப் பற்றிய புனைவுகள்.
கீழிறங்கும் இறகுகளில்
மிதந்து வருகிறது
எனக்கான அசாதாரண புனைவுகள்.
சீரான இடைவெளியில்
ஊன்றப்படுகிறது
எனது இன்றைய சலனங்கள்.
அருவியாய் வழுக்கி
குருதியாய் சுழல்கிறது
என் பருவம்.
அகழ்ந்த இடமெங்கும்
என் உடலின் தழும்புகள்.
எனது நினைவுகளின்
நீர் கசிந்த நிலம்
புழுதியாகி ஒடுங்கும் மறைவில்
அடைந்த இருளென.
காளானாய்க் குவியும் உடல்
நீண்டு கிடக்கிறது விழுந்த மரமென
உங்களின் புனைவுகள் செல்லும் பாதையில்.
வேட்டையில் திருப்தியுற்ற
புலியென நீங்கள் திரும்புகையில்...
வறட்சியில் தவித்த வௌவாலென
கடந்து செல்கிறது எனது காலம்.