உழைத்தால் முடியும்

உழைத்தால் உன்னால் உயர்ந்திட முடியும்
உண்மையை உள்ளத்தில் உணர்ந்திடடா
பிழைத்திட பிறரைப் பணிவது என்பது
பேதைமை என்பதை எண்ணிடடா

அடுத்தவர்க் குதவும் அன்புள்ள எண்ணம்
அனைவர்க்கும் இருப்பது இல்லையடா
அடுத்தவர் வாழ்வைக் கெடுத்திட எண்ணியே
ஆள்பலம் சேர்ப்பவர் அதிகமடா

நம்பிடும் பேர்களை நாசம் செய்வது
நடைமுறையில் இன்று அதிகமடா
நன்மைகள் பிறர்க்கு செய்து வாழ்பவர்
நடமாடும் மானிட தெய்வமடா

செய்திடும் நன்மையில் குற்றம் காண்பவர்
செய்நன்றி மறந்த மனிதரடா
பொய்யால் நாளும் பிழைத்திடும் பேர்கள்
பூமியில் உலவிடும் பேய்களடா

செய்திடும் பணியிகள் சிறப்பாய் இருந்தால்
செல்வங்கள் உனக்கு குவியுமடா
சேர்ந்தவர் தமக்கு உழைத்திடும் மனிதர்க்கு
சேமிப்பு என்பது குறையுமடா

திட்டம் தீட்டியே தினம் உழைப்போர்க்கு
திருமகள் சொந்தம் ஆவாளடா
மட்டம் தட்டிய மனிதர்கள் வந்து
மன்னிப்பு வேண்டி நிற்பாரடா

குற்றம் பார்ப்போர்க்கு சுற்றம் குறைந்திடும்
கொள்கை வாழ்வில் உண்மையடா
வற்றும் நிலைமை வந்திடும் நேரத்தில்
சுற்றங்கள் தானாய் விலகுமடா

தேகத்தை வளைத்து வியர்வை சிந்திடு
தேவைக்கு மெல்வரும் செல்வமடா
தாக்கிடும் தடைகளை அறிவுடன் வென்றால்
தழுவிடும் உன்னை வெற்றியடா
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (27-Jul-15, 3:50 am)
பார்வை : 92

மேலே