உய்யும் வழி

மருளும் விழியும் மயக்கத் தோற்றமும்
எதுவுமில்லா தளிர்நடை
மழலைப் பேச்சும்
பொதுவாய் நோக்கும் நிறைந்து நல்
சிறுவர் சிறுமியர் பதின்மர்க்கு மேல்
புளிமூட்டைஎனவே போகின்றார்
பொதி சுமந்து..
அவர்களை ஆட்டோ ஆட்டென்று ஆட்டி
செல்கின்ற வாகனம்..

தவணைக் கடனோ தகவிலா முறையோ
பெரும்பொருள் ஈட்டியே
கடன் தீர்த்திட பெற்றோர்..
வரிசையில் வேகின்றார்
பணம் செய்யும் பள்ளிகளில் ..

சிறுகுடல் பெருங்குடல்
இடையிலே கனன்ற தீ
விரைவினில் பரவிட
வெகுண்டுதான் வெடிக்கின்றார்..
மதிப்பெண்கள் உச்சம் தொடும் வரை !

உயர்கல்விச் சாலை
உப கல்வி மாலையும் காலையும்
உருப்படியாவதற்கோ ..இல்லை..
உருத்தெரியாமல் போவதற்கோ..?

என்னினிய பெற்றோர்காள்..
கல்வி வந்து சேரும்..
உடன்..
கடும் சுமை கூடும்..
எங்கு செல்வீர் ..சொல்வீர்....
எடுத்துரைப்பீர்..???

எம் மக்கள்..
கற்பவை கற்ற பின்
மனிதராய் ..
வாழும் முறை..
கற்பிக்கும் திட்டமொன்றும்
சேர்க்கச் சொல்லி..
வெறும்..
புத்தகப்பூச்சியாய்
மதிப்பெண் பெற்றுத்தள்ளும்
இயந்திரமாய் இடர்ப்படும்
எம் சிறார்கள்..
உயர வழி சொல்லித் தாரீர் ..

உய்யும் வழி சொல்லித் தாரீர்
என்று முழங்கி எழுவீரோ?

எழுதியவர் : கருணா (27-Jul-15, 4:49 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 295

மேலே