மௌனம் எழுதிய கவிதை
யாரும் சொல்லாதொன்றை
எழுத துடிக்கிறது
மௌனம்
ஏனென்ற கேள்விக்கு
விடையளிக்கும்
வினாத்தாளில்
வெறும் மூன்றெழுத்துள்ளது
கவிதையாக
அதுவும்
முளைக்கிறது
மௌனம்
கவிசொல்ல
வெட்கத்தில்
முகத்தை மூடும்
கண்ணாடி பாதரசத்திலோ
பதிந்து போன
பீனிக்ஸ் பறவையின்
கால்தடம் தெரியும்
பார்க்க
பார்வையுண்டு
எழுத கையுண்டு
எழுத்தை கோர்க்கும்
எண்ணமும் உண்டு
உதவிக்கு வராத
ஊமைமொழியினை
இப்போதேனும்
கலைத்துவிட
வேண்டுமென்று
துடிக்கிறது
ஆழ்மனது
தூரிகைச் சிதறலை
சேகரிக்க
மலர்தூவலாய்
மௌனத்தின் மீது
விழுந்தன
செந்தூவல்கள்
செஞ்சோலைகள்
சிரித்து மகிழ்ந்தாடும்
வேளையில்
உடைபட துடிக்கிறது
கவிதையின்
மௌனம்
இறுதி மூச்சிற்கு
இன்னும் சில நாழிகை
இருக்க
இப்போதேனும்
படித்து விடுங்களேன்
மௌனமெழுதிய
"காதல்" எனும்
மூவெழுத்துக்
கவிதையை,,,