எங்கள் மண்ணின் மைந்தனை விட்டு விடு

காணும் கனவெல்லாம்
நனவாக விளையும் மனமே!
நேற்றிரவு நான் கண்ட
கனவை மட்டும்
கனவாகவே விட்டு விடு!

நொடிப்பொழுதும் ஓயாமல்
சுழலும் பூமியே!
நீ உன்னை நம்பி
உன்னுடன் சுழலும்
எங்களுக்காக ஒரு நாளாவது
பின்னோக்கி சுழலு!

என்றோ யாரோ ஒருவர்
வரையறைத்து வைத்த நாட்காட்டியே
நீ எங்களுக்காக நேற்றைய
ஒரு நாளை மட்டும் மறைத்து விடு!

இறைவா உன்னிடம் மண்டி இடுகிறேன்
கலாம் எனும் உழவன்
விதைத்த நிலத்தில்
நீக்கப்பட வேண்டிய களைகள்
இன்னும் கொஞ்சம் உள்ளன
விட்டுச்செல் அவரை!

காலம் தாழ்த்தி வைத்து
கொள்ளலாம் நீ
விண்ணுலகில் மேற்கொள்ளவிருக்கும்
அணு ஆயுத தேர்வுகளை!

ஐந்தாறு ஆண்டுகள் பொறுத்துகொள்
என்திருநாட்டை வல்லரசு
ஆக்கிவிடுவார் பின் எடுத்துகொள்!

தமிழன்னையே உயிர்த்தெழு
உன் வளர்ச்சிக்காக உன் பிள்ளை எழுதிய
புத்தகம் முழுமை பெற
இனி வேறொருவன் இல்லை இங்கு
உன் முன்னேற்றத்தை யோசிக்க!

கனவு காண சொல்லி விட்டு
சென்று விட்டார் அவரை தவிர
வேறொரு வழிகாட்டி
எங்களுக்கு இல்லை
என்பதை மறந்து விட்டு!

எங்கள் சிரத்தை உமக்கு
உரித்தாக்குகிறோம் இறைவா
நூறாயிரம் தலைகளை
கூட கொய்துக்கொள்
எங்கள் மண்ணின் மைந்தனை விட்டு விடு!

எழுதியவர் : Narmatha (28-Jul-15, 1:39 pm)
சேர்த்தது : Narmatha
பார்வை : 60

மேலே