தேசம் போர்த்தியவன்

அந்தக் குரலொன்றையே
ஒலிபெருக்கித் திருகி
விளையாடுகின்றது
இந்தியனென்ற உறுதிமொழி
புடைத்துக் கொள்ளும்
இதய வீக்கங்களில்......

போரெதுவும் அல்லாத
பேரமைதியில்
எங்கள் தமிழ் மரபாய்
வீட்டுக்கொருத் தலைமகனை
நேற்று பலிகொடுத்திருந்தோம்...

சதையும் எலும்புமான
கிறக்கம்
ஏற்றிய மெழுகுவர்த்தியில்
உயிராய்
உருகிக் கொண்டிருக்கின்றது....

உமக்கான
அஞ்சலிகள் எல்லாமும்
எமது கழுத்தினை இறுக்கும்
மரண மாலைகளாய்
விழுகின்றன....

காலனும் மேடையேறி
மரியாதை செய்துள்ளான்
விழவில்லை நீ
வேராகிப் படர்ந்திருக்கின்றாய்

கிழிபட்டுவிடுமோ
என்று
பசியினை மறந்து
காப்பாற்றிக் கொள்கின்றது
ஆற்றாமைக் காகிதமாய்
உன் இழப்பைப்
பதியத் துணிவில்லாத
மனம்....

சூரியன் மறையாத நாடு
இங்கிலாந்தாய் இருக்கலாம்
கலாம் மறையாத நாடாய்
இந்தியாவென
உலகத் தரத்தில்
யாவரும் அடையாக் கனவை
அடைந்துவிட்டோம்....

உமது
அக்னிச் சிறகுகளுக்கு
ஏழு நாட்கள் போதாது
இனி வரும்
காலங்கள் தோறும்
அவற்றின் அனுசரிப்புகள்
தீப்பந்தங்களாய்க்
கனவுகளின் கதவுகளில்.....

எழுதியவர் : புலமி (28-Jul-15, 2:06 pm)
பார்வை : 166

மேலே