மரணத்தை வென்றார், மண்ணின் மைந்தர் டாக்டர் அப்துல் கலாம்

நண்பர்களுக்கு வணக்கங்கள்!
இந்தியத்தாய், தான் ஈன்றபொழுதினும் பெரிதாய் உவப்பெய்த ஈன்ற திருமகன்,
உயர்திரு. அப்துல்கலாம் அவர்கள்!
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
[நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்;
மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட,
சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.]
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
[தன்னுடைய உயிர், தான் என்னும் எண்ணம் முற்றும் துறந்தவர்களை
ஏனைய உயிர்கள் தொழும்.]
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.
[எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கி,
குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள்,
சாவையும் வென்று வாழ்வார்கள்.]
இக்குறட்பாக்களின் பொருள்,
நம்கண்முன்னே இக்கணம் காட்சியாய் புலப்பட்டுக் கொண்டிருக்கின்றது!
புரிபட்டுக்கொண்டிருக்கின்றது!
வாழ்தல் எத்தகையது என்பதையும்;
அறிவு, ஞானம் யாதென்பதையும்;
துறவு யாதென்பதையும்;
வழிபாடு யாதென்பதையும்,
துல்லியமாய், எளிமையாய்க் காட்சிப்படுத்தி,
நாம் வழிபடக் காரணமாய் அமைந்து,
தன் மண்ணுடல் நீங்கி, விண்ணில் நிறைந்து.....
கலாம், காலமாய் அழியாமல் நிலைத்திருக்கிறார்.
தான் எனும் அகங்காரமில்லை!
தனதென்ற மமகாரம் இல்லை!
தானுற்ற பணியின்கண் செருக்கேதும் இல்லை!!
பதவியில், பழகுதலில், பகட்டேதுமில்லை!!
தேசத்து மூலையில், யாருமறியா குடிசையில், யாருமறியா பாலகனாய்,
எளிமையாய்ப் பிறந்த ஒரு பிள்ளை, இன்று பாருக்கே ஒளிவிளக்காய்,
எவரும் கரம்கூப்பித் தொழுகின்ற நிறைகுடமாய், தெய்வமாய் பிரகாசிக்கின்றதெனில்,
எதனால் இது அடையப்பெற்றது?
வெறும் அறிவினாலா?
ஈட்டிய பொருளினாலா?
பட்டமா?
பதவியா?
பகட்டான அணிகலனா?
செல்வமென்ற நில்லாது செல்லும்-பொருளின்மேல் கொண்ட
மோகத்தால் அலையும் மக்களின் நடுவில், "செல்வம் என்பது,
வாழும் முறைமை" எனக் கண்டுணர்ந்து,
உயர்ந்தோர் "வாழ்ந்த" நெறியைத் தானும் பின்பற்ற முனைந்து,
ஞான நூல்கள் கண்டுரைத்ததை தவமெனப் பயின்று,
தேவைகளைச் சுருக்கி,
ஆடம்பரம் தவிர்த்து,
எளிமையாய்,
வாய்மையோடு வாழ்ந்ததில் விளைந்த விளைச்சலன்றோ இது?!
83 வயதுப்பிள்ளையாய், கனிந்த இளம்முகம் கொண்டு,
யாவரையும் வசீகரிக்கும் சிரிப்பினால் நம் உள்ளம் கவர்ந்த நல்லோன்,
கலாம்!
தேசத்தைச் சுருட்டி, இரவில், படுக்கப்பாயாய் விரித்த கயவர்தம் நடுவினில்,
தேசத்தை நேசிக்க, அதுள் அன்பெனுங்காற்றை சுவாசிக்க,
குழந்தைகட்கும், இளைஞர்கட்கும் ஓய்வின்றி ஓடியோடி சாட்சிப்பொருளாய்
தன் வாழ்வினையே காணத்தந்து, கற்றுத்தந்த ஒப்பிலா குரு,
நம் கலாம்!
நான் இந்து, நான் கிறித்துவன், நான் இஸ்லாமியன் என்ற
மதப்பாகுபாடு ஏதுமின்றி,
நான் தமிழன், நான் மலையாளி, நான் தெலுங்கன், நான் இந்தி பேசுபவன் என்ற
மொழிப்பாகுபாடு ஏதுமின்றி,
நான் இம்மாநிலத்தோன், நான் இந்த தேசத்தைச் சேர்ந்தவன் என்ற
நிலப்பாகுபாடு ஏதுமின்றி,
யாவரும் இன்று கண்ணீர் தளிர்க்க,
நெஞ்சம் விம்ம,
கைக்கூப்பி,
அவர்தம் இழப்பில் வருந்துகிறோம் எனில்,
அன்பு நண்பர்களே புரிந்துகொள்ளுங்கள்!
இதுவே அன்பிற்குரிய நம் கலாம் அவர்கள், நமக்காக விட்டுச்செல்லும் கடைசி செய்தி!!
***********************************************************************
"வாழ்வெனும் கடலினில் பரிதவிக் கின்றோம்!
கரைவரும் நாளதைக் கனவுகாண் கின்றோம்!!
அன்பெனும் நீச்சல் பயின்றோ மில்லை!
பண்பெனும் படகதில் பயணமு மில்லை..!
கொலையெனுஞ் சருகை,
வெறுப்பெனு மிலையை,
கலமெனப் பற்றிக்
கவிழ்கின்றோமே!
மதமும் மொழியும் பாய்மரக்கப்பல்!
ஏறி அமர்ந்ததில் துடுப்பினை அசைப்போம்!
சீறி நகர்ந்தால், கரையது தெரியும்!
மகிழ்வுடன் இறங்கி வீடடைவோமே!
நகர்வைப் பகையெனும் திசைதிருப்பாதீர்!
மோதியழியும் மரக்கலமனைத்தும்!
மோதிமரக்கலம் நீரினுள் அமிழ்ந்தால்,
சாதல் நமக்கே நன்குணர்வீரே!"
****************************************
[வாழ்வெனும் கடலில் நீந்தத் தெரியாமல் சிக்குண்டு
பரிதவிக்கின்றோம்.
என்று கரையை அடைவோமோ என்று நம்பிக்கையின்றிக்
காத்துக்கிடக்கின்றோம்!
நமக்கு,
அன்பென்னும் நீச்சலும் தெரியாது,
பண்பெனும் படகும் கரைசேர நம்மிடத்தில் இல்லை!
கொலைசெய்யும் எண்ணமாகிய சிறிய சருகை,
வெறுப்பு என்னும் மிதக்கின்ற சிறு இலையை,
இது நம்மைக் கரை சேர்க்கும் என்று எண்ணி,
அதை பற்றுகின்றோம். ஆனால், அது பாரம் தாங்காமல் நீரில் மூழ்க,
நாமும் அதனோடு மூழ்கி வருந்துகின்றோம்!
இங்கே,
மொழியும்,
பின்பேற்பட்ட மதங்களும்,
நாம், வாழ்வெனும் கடலில் தப்பிக் கரைசேர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட
பாய்மரக்கப்பல்கள்!
அதில் ஏறி அமர்ந்து, ஒற்றுமையென்னும் துடுப்பசைப்போம்!
அதனால் அந்தக் கப்பல், சீறிப்பாய்ந்து நம் இலக்கான,
நல்வாழ்வெனும் கரையை அடையும்!
அங்கே கலத்தினின்று இறங்கி,
மகிழ்வோடு,
மரணமிலா வாழ்வாகிய வீட்டை அடைவோம்!
தயை கூர்ந்து, அந்த மதங்களாகிய மரக்கலங்களை,
பகைமை என்னும் எதிர்திசை நோக்கி திசை திருப்பாதீர்கள்!
அவ்விதம் அவை திசைமாறினால், மரக்கலங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி,
சிதைந்து, கடலில் மூழ்கும்!
நண்பர்களே,
கவனத்தில் கொள்ளுங்கள்!!
மரக்கலம் கடலில் மூழ்குவதால், நாமிழப்பது,
நம் வாழ்வையேயன்றி, நம் உயிரையேயன்றி, வேறெதையுமில்லை! ]
***********************************************************************
அன்பு நண்பர்களே....
கலாம் மரணித்தாரென்றோ, கலாம் இறந்தாரென்றோ,
இனி யாரும் மறந்தும் கூட சொல்லவேண்டாம்!!
அவர் மரணமிலாப் பெருவாழ்வை இக்கணம் அடைந்தார்!
அவர் காலத்தோடு காலமாய் அழியா நிலையை எய்தினார்!!
ஆகையால், இது ஓர் ஒப்புயர்வற்ற திருநாள் என்பதை மனதில் நிறுத்துங்கள்!!
அந்நிலைக்குச் செல்லுமுன்னே,
வாழும் முறைமையை,
தன்னையே எடுத்துக்காட்டி, நமக்கெல்லாம் பயிற்றுவித்துவிட்டுச் சென்றிருக்கிறார்!
பாருங்கள், அவர்தம் கடைசி மூச்சும்கூட, நமக்காகவே, நமைப்போன்ற இளைஞர்க்காவே
எங்கோ ஓர்மூலையில் உள்ளும்புறமும் அலைந்தாடியிருக்கிறது!
இது துயரத்தால் கண்ணீர் வடிக்கும் தருணமல்ல!
நமது உன்னதப் பெருமகன், பேரொளியை அடைந்த நாள் இதுவென்று ஆனந்தித்து,
கண்ணீர் உகுக்கும் திருநாள்!!
அவர் தியாகஉணர்வோடு நமக்கெல்லாம் தந்த அனுபவப்பாடத்திற்கு,
அவர்தம் பாதங்களுக்கு, நன்றியுடன் வணக்கம் செலுத்துங்கள்!!
அவர் காட்டிய வழியில் உவப்புடன் பயணிப்போமென உறுதி கூறுங்கள்!!
இதுவே அந்த உன்னத ஆன்மாவிற்கு நாம் செய்யும் அஞ்சலி!!
"கனவு காணுங்கள்!! கண்டதைச் செயலாக்குங்கள்!! வானம் வசப்படும் நிச்சயமாய்!!"
வாழ்க ஒப்புயர்வற்ற ஆன்மா!
வாழ்க ஒளிமிகு சான்றோன்!!
வாழ்க இணையிலா துறவி!!
வாழ்க அன்பின், ஞானத்தின் உறைவிடம்!!!
வாழ்க கலாம்!
வாழ்க கலாம்!!
வாழ்க கலாம்!!!
***************************************************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்