எங்கே போய் விடப் போகிறேன் என் குழந்தைகளே

அப்புறம் குழந்தைகளே!

இந்த மாலைப் பொழுதில்
விடை பெற்றுக் கொள்கிறேன்.

கனவுகள் நிரம்பிய
ஒரு தேசத்திலிருந்து
காற்றாகிப் போகிறேன்.

ஒரு மெல்லிய சிறகென
வருடும் உங்களின் அன்பை
இரசித்தபடி
இராமேஸ்வரத்தின் அலைகளில்
திரியத் துவங்குகிறேன்.

நான்
கனவுகளால் ஆனவன்.
உங்களையும்
கனவு காணச் சொன்னவன்.
என் கனவுகளை
உங்களுக்குள் விதைத்தவன்.

என் வாழ்க்கை
எளிமையானதுதான்.
ஆனாலும் இனிமையானது.
உங்களுக்காகவே யோசித்ததில்
எனக்கு 84 வயது குழந்தைப் பருவம்.

மரம் நடச் சொல்லி இருக்கிறேன்.
மனிதத்தை விதைக்கக்
கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
ஊழலின் வேரில்
அறிவின் அமிலம் ஊற்றச்
சொல்லி இருக்கிறேன்.
மதம் "வதம் அல்ல...இதம்"
என அறிவுறுத்தி இருக்கிறேன்.
திருக் குர்-ஆனின் படி
வாழ்ந்திருக்கிறேன்.

ஒரு விதத்தில் நான்...

இந்த தேசத்தின்
தர்ம சக்கரம்.
அறத்தின் விளிம்பு மீறாமல்
இறுதிக் கணம் வரை சுற்றியவன்.

நான் இந்த தேசத்தின்
மகத்தான அடையாளம்...
காந்திக்கு அடுத்த தலைமுறையில்.

இந்த தேசத்தில்
"வேற்றுமையில் ஒற்றுமை"...
வெறும் வார்த்தைக் கோர்வை அல்ல.
என் வாழ்க்கையின் சாரம்.

இத்தனை முதுமையில்
எனக்கு உடல் தளர்ந்துவிட்டது
குழந்தைகளே!

விடை பெற்றுக் கொள்கிறேன்.

எங்கே போய்விடப் போகிறேன்
என் குழந்தைகளே?

என் அம்மாவின் வயிறு
எனக்காகக் காத்திருக்கும்.

அலையில் இப்போதும்
எனக்காகக் காத்திருக்கும்
என் அம்மாவின், அப்பாவின்
கரம் தேடிச் செல்கிறேன்.

எனக்காகக் காத்திருக்கும்
அவர்களை ஏமாற்ற மாட்டேன்.

என் குழந்தைகளே!
உண்மையில்
இந்தப் பிறவி முழுவதும்
நான்....

அவர்களின் கனவுகளைத்தானே
வாழ்ந்திருந்தேன்.

வருகிறேன் குழந்தைகளே.
ஏனெனில் ...
உங்களுக்குக் கனவு காணவும்
கனவுகளை விதைக்கவும்
இந்தக் "கலாம்" தேவை என்பதை
எப்போதும் நான் அறிவேன்...

"குட் பை!"....என் குழந்தைகளே!

எழுதியவர் : rameshalam (28-Jul-15, 7:10 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 83

மேலே