அப்துல் கலாம் அவர்கள்
காவியத்தலைவனே!
ராமன் ஈஸ்வரனை பூஜித்த
புண்ணிய பூமியில் அவதரித்த
புண்ணிய புருஷரே!!!
உம் சுயசரிதைக்கு அக்னிச் சிறகுகள்
எனப் பெயர் சூட்டினீரே... எங்களை அநாதைகளாக்கி விட்டு
அச்சிறகுகளைக் கொண்டு பறந்து சென்று விட்டீரோ!!!
**********************************
வெற்றித் தலைவனே!
நீ வாழ்ந்த இந்த இந்திய மண்ணில்,
நானும் ஒரு துரும்பாக இருந்திருக்கிறேன்.
நீ வெற்றிச் சிகரத்தில் ஏறி நின்ற வேளையில்
உம்முடன் சம காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன்
இப்பிறவியில் எனக்கு இந்த ஒரு பெருமை போதாதா?
************************************
மக்கள் தலைவனே!
மக்கள் தலைவர்களின் பண்புகளைப்
படித்து தெரிந்திருக்கிறேன்.
முதல் முதலாகப் பார்த்துத்
தெரிந்து கொண்டது உம்மைதான்.
உண்மை, நேர்மை, எளிமை, விடாமுயற்சி
கடமை உணர்வு, தெளிவு, பரிவு, அன்பு, துணிவு
சுயநலமின்மை என உம்மிடம் இல்லாத
நற்பண்பு ஏது?
அன்புத் தலைவனே!
அவ்வை பாட்டி உன்னைக் கண்டால்
‘ஆத்திச்சூடி’க்கு பதில் ‘அப்துல் கலாம்’ என்பாள்.
“சான்றோனாக்குதல் தந்தைக்கு கடன்” என்றால்
நீ தான் நம் பாரதத்திற்கு ‘தந்தை’.
அன்பு காட்டுபவள் அன்னை என்றால்
நீ தான் நம் தேசத்திற்கு ‘அன்னை’.
வழிகாட்டுபவர் ஆசான் என்றால்
நீ இந்த உலகிற்கே ‘ஆசான்’.
இத்தகு குணங்கள் கொண்டதால்
எங்கே தனக்கு போட்டி வந்து விடுமோ?
என்று அஞ்சி இறைவன் உம்மை
அழைத்துக் கொண்டானோ!!
பிறந்த மண்ணிற்குப்
பெருமைத் தேடித்தந்த
உம்மை வாழ்க! வாழ்க! என்று
வாயார கோஷமிட
வாய் துடிக்கின்றது!!!
ஆம். நீ மக்கள் மனதில்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறாய்....
இந்த மண்ணில் உயிர் உள்ளவரை
நீ வாழ்ந்து கொண்டு இருப்பாய்.....