உன் காலடியில் வைக்க

தீர்வற்ற வருத்தத்தை
நேர்தந்து மிரட்டுகிறது - மரணம் !

எதற்காக இறந்தாய் அதற்குள்ளே
இறைவனே...?

அடர்ந்த வனத்தில்
அம்மாவைத் தொலைத்த
சிறுமியாய் வீரிட்டழவிட்டு...

எதற்காக இறந்தாய்..?
நீ தவறிழைத்தாய்..!

இலட்சக்கணக்கில் நீகண்ட
மாணவர் கணக்கில்
நானின்னும் வரவில்லையே
நீ எவ்வாறு மறையலாம்?

சைவ முகமதியரே ..

எம் இதயத்தின்
ஒரோரத்தைப் பிய்த்துப்போக
மார டைப்புக்கு நீஏன்
கொடுத்தாய் அனுமதி ?

நீ தவறிழைத்தாய்..!

எம் மனிதரில் பலர்
மறதிக்குப் பிறந்தவர்கள்
அதற்குள்ளே ஏன்போனாய்?

சிறுவயதிலுன் அக்னிச்
சிறகுகளை மடியில்வைத்து
சொட்டுச் சொட்டாய் நாங்கள்
விட்டகண்ணீர் அறிவீரா?

புதுப்பேனா கிடைத்தால்
பிள்ளையார் சுழியாய்
ஏபிஜேஏகே என்றும்பெயர்
எழுதியது அறிவீரா?

உன் புகைப்படத்தை
புத்தகத்துள் மறைத்து
வைக்கும் மாணவத்தை
வாழ்வே, நீ அறிவாயா?

எண்பத்து மூன்றிலும்
எழுச்சியுரை யாற்றச் சென்றாயே
வீழ்ச்சியின் சுவட்டை நீ
உணரவே இல்லையா?

அரசியல் தொழில் அதிபர்கள்
அறிவியல் தொடாதவர்கள்...

மூட்டை தூக்குபவன்
மூளைக்குள்ளும் ஏறியமர்ந்தாய்..

இழப்பின் வலி
ஒழுகும் கண்ணீர் -ஐயனே

கடலுக்கும் கரித்துப்போகும்
எம் கண்ணீரின் உப்பு போதும்....

அற நூல் புற நூல்
எனப்பல மறைநூல்..!

இருந்தாலும் சிம்மசொப்பனம்
வள்ளுவம் - வாரிசய்யா நீ
வெள்ளத்தனைய மலர்நீட்டம்-
ஏன் பின் வாடிப் போனாய்?

இலக்கின்றித் திரிவது தான்
இளமையில் சாபம்- நீ
இலக்கை எரியவிட்டு
எங்கே மறைந்தாய் ?

கலைஞன் தமிழன்
தலைவன் எனப்பல
முகங்கள் முளைத்தாலும்
அவை உன்போலாகுமா?

நீ- பாரதி..!

அக்கினிக் குஞ்சொன்று
பொந்தில் வைத்தே
ஆடித் திரிந்தானவன்
விடுதலைக் கனவோடு....

அக்கினிச் சிறகுகளை -எம்
அறிவினில் கொளுத்திப்
போட்டு வல்லரசுக்கனவு
கண்டாய் நீ ....!

நினைவில் கொள்
எம்மை எரித்தாலும்
மிச்சமிருக்கும் சாம்பல்
உன் வாசமே பெறும்...!

கடைக்கோடி இந்தியனுக்குள்ளும்
நடைபோட்ட உன் வார்த்தைகளை
வேரறுக்க எவராலும் முடியாது ...!

எம்மிடமிருந்து எதைச்சுரண்ட
முடியுமிந்த ஊழல்அரசியலால்..?

உன்போல் வாழத்தான்
முனைவாரா ? இல்லை
இறக்கத்தான் முடியுமா ?

எந்தச் சங்கம்
சார்ந்தாய் நீ- இன்று
எல்லா சங்கங்களின்
கண்ணீரும் சங்கமித்ததே ..!

உனைப்போலொரு இந்தியனாய்
உருவாக வேண்டுமென்ற
வெறி மூள்கிறது ;

உனைக்காட்டி எம் வாரிசுகளை
வீரியமாய் வார்த்திட
வேண்டுமென இதயம் கூவுகிறது..

அலைகடலும் அடங்கும்
இராமேஸ்வரத்தில் நீ
அடங்கினாலும் மனதோடு
எழுப்பியது புயலாகும்..!

அரிதாரம் பல பூசி -
வேறு அவதாரம் கொண்டு
நீயே வரவேண்டும் -
சாதிக்கும் வாழ்வே தரவேண்டும்.

உனக்கான கண்ணீர் அஞ்சலி
ஊழல் கரைக்கட்டும்..!

உன் வாழ்வின் உன்னதம்
உண்மை உரைக்கட்டும்..!

தனி மனித எண்ணங்கள்
இனிப் புனிதமாகட்டும் ..!


























காலமே தயவு செய்து காலமாகி போய்விடேன்
எம் கலாமைத் திரும்பத் தந்து ...

எழுதியவர் : நிலாநேசி (31-Jul-15, 11:31 am)
பார்வை : 105

மேலே