என் வேந்தனின் வேள்விகள் பற்றி ~செல்வமுத்தமிழ்
கல்லாமையைக் கருவறுக்க
நீ கைக்கொண்ட பாத்திரங்கள்
ஒவ்வொன்றிலும் நகைகனம் ,
உன் இருண்ட வீட்டின்
சுவர்களுக்குள் இன்னுமும்
மருண்டு நிற்குது பலர்மனம் !
இதழ் நிலத்தில் முத்தவிதை,
உன் எதிர்பாராத முத்தத்தால்
என்னுள்ளும் (தமிழ்) காதல் சிதை
இதுவரை காதல்சொன்ன
எவனும் நிச்சயம் ரசித்திருப்பான்
உன் கவிமொழியதை !
உம்
வீரத்தாயெனும் விந்தைக்குள்
வெறித்து நிற்கிறது பல விழிகள்
பெண்மையின் வன்மை சொல்லும்
உண்மைக்கவி உன்னை
பாவேந்தர் என்றல்லாது
வேறெவ்வாறு எழிற்தமிழ் மொழியும் ?
காதல் , காமம் மட்டுமல்ல
கடுந்துறவும் – உம்
கவிமொழியில் இனிமையே
உன் உயர்தனித்தமிழால்
ஒப்பில்ல கர்வமுற்றது
மாதவிமகளின் தனிமையே !
இவையனைத்தும்
நான் சுவைத்த உம் கவித்தேனின் எச்சம் ,
என்றென்றும்
நீயே எழிற்கவியின் உச்சம் !!!