பியுசின்னப்பா ஆவணப்பட அனுபவங்கள்

பி.யு.சின்னப்பா ஆவணப்பட அனுபவங்கள்
கவிஞர் தாமோதரகண்ணன்-ஆவணப்பட இயக்குநர்
அலைபேசி எண் 9442663637

‘‘ கலைச்சிகரம் பி.யு.சின்னப்பா ” என்னும் ஆவணப்படத்தை சூப்பர் ஸ்டார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பாராட்டினார். புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநர் அம்ஷன் குமார் அவர்கள் ‘‘ தாமோதரகண்ணனின் ``கலைச்சிகரம் பி .யு. சின்னப்பா`` ஆவணப்படத்தைப் பார்த்தது ஆறுதலாக இருந்தது. சின்னப்பாவை அறிந்தவர்களின் நேர்காணல்கள் மூலமாகவும் அவரது படங்களிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் மூலமாகவும் அவரைப்பற்றிய ஒரு அறிமுகத்தை எவரும் எளிதாகக் கொள்கிற மாதிரி ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை வாசிகள் மிகைப்படுத்தளின்றி தங்கள் ஊர் கதாநாயகனின் சாதனைபற்றி பெருமிதம் கொள்வதையும் அப்படம் பதிவு செய்துள்ளது ....” என்று பாராட்டினார். மக்கள் குரல் தி-இந்து திருச்சி வானொலி முகநூல் மின்-அஞ்சல் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் இன்றைக்குப் பேசப்படுகின்றன. இப்படம் உருவான வரலாற்றைச் சொல்லுகிறேன்.
குழந்தைஇலக்கியச் செல்வரும் பணிச்செல்வருமான திரு பி.வெங்கட்ராமன் அய்யாவிடமிருந்து வரும் ஒவ்வொரு அலைபேசி அழைப்புகளும் என்முன்னேற்றப் பாதையை முன்னெடுத்துச் செல்லக் கூடியவையாகும். அந்த வகையில் ஓர் அலைபேசி அழைப்பில் ‘‘ புதுக்கோட்டையின் ‘‘ கலையுலக மன்னர் பி.யு.சின்னப்பா ” நூற்றாண்டு வருகிறது. அவரைப் பற்றி ஓர் ஆவணப்படம் நீங்கள் இயக்க வேண்டும்.அதற்கான பணியை முன்னிருந்து நீங்கள் செய்யுங்கள். பின்னிருந்து வேண்டிய உதவிகள் அனைத்தும் நான் செய்து தருகிறேன் ” என்னும் அன்புக் கட்டளை வந்தது. அதன்படி இயங்கினேன் இயக்கினேன்.
பி.வெங்கட்ராமன் அய்யாவின் அன்புத்தம்பி திரு எஸ்.பி.பாலு ,புதுகையின் புதல்வர் எய்ம்ஸ் கல்வி நிறுவனர் கே.டீ.கந்தசாமி ஆகிய இருவரும் இந்த ஆவணப்படம் ஒளிப்பதிவு உள்ளிட்ட வேலைகளின் போது களப்பணியில் எம்மோடு தோளோடு தோள் நின்ற பெருமக்களை இங்கே பெருமையோடு நினைவுகூர்கிறேன்.
இப்படத்தில் திரைப்பட ஆய்வாளரும் நூலாசிரியருமான திரு வாமணன் ,புதுக்கோட்டையில் வாழும் ஆசிரியரும் புல்லாங்குழல் வித்துவானுமாகிய திரு ராஜகோபால் ,ஞானாலயா நூலக நிறுவனர் திரு பி.கிருஷ்ணமூர்த்தி , பி.யு.சின்னப்பா வழக்கறிஞர் மகன் திரு கே.எஸ்.கணபதி, முன்னாள் டிவிஎஸ் தொழிற்சங்கத்தலைவர் காசிநாதன், பி.யு.சின்னப்பா புகழ்பாடிடும் பி.யு.சின்னப்பா நகர் எஸ்.சுதந்திரராஜன், அய்யனார்புரம் சந்திரதுரை எய்ம்ஸ் கல்வி நிறுவனர் கே.டீ.கந்தசாமி போன்ற அறிஞர் பெருமக்கள் நேர்காணல்கள், பி.யு.சின்னப்பா நடித்த திரைக் காவியங்கள், பி.யு.சின்னப்பா நடந்த புதுக்கோட்டை பூமியும் 1.30 மணி நேர ஆவணப்படத்தில் இடம் பிடித்துள்ளன.
அறிஞர் பெருமக்கள் நேர்காணலின் போது பி.யு.சின்னப்பாவின் பன்முக ஆளுமை குறித்து கூறியுள்ள கருத்துக்களைச் சுருக்கமாகத் தருகிறேன்.
திரு வாமணன் -- திரைப்பட ஆய்வாளர் மற்றும் நூலாசிரியர் சென்னை
பி.யு.சின்னப்பா தமிழ்த்திரைப்பட வளர்ச்சியிலும் வரலாற்றிலும் மறக்க முடியாத மறுக்க முடியாத முன்னோடி ஆவார். பல்வேறு வீரதீரக் கலைகள் நடிப்பு ஆளுமைகளை ஒரே படத்தில் கொட்டியவர். `ஆர்யமாலா ‘ திரைப்படம் எல்லாக் கிராமங்களிலும் ஊடுருவியது. எம்.கே.டி.பாகவதரும் பி.யு.சின்னப்பாவும் போட்டிப் போட்டு அக்காலத்திய பேசும் தமிழ்த்திரைப்படத்தை வார்த்தார்கள்.10 வேடங்கள் , 5 வேடங்கள் , 3 வேடங்கள் , 2 வேடங்கள் ஆகியவற்றையெல்லாம் அப்போதே செய்து காண்பித்தவர் பி.யு.சின்னப்பா ஆவார். பின்னாளில் வரும் திரைக் கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்ந்தார் என்று கூறினார்.
திரு ராஜகோபால் ஆசிரியர் - புல்லாங்குழல் வித்துவான் புதுக்கோட்டை
பி.யு.சின்னப்பா அவர்கள் தம்புடுபாகவதர், சிதம்பர பாகவதர் போன்ற வித்துவான்களிடம் பாடல்பயின்ற நிலைகள் பற்றி விவரித்தார். அவருடைய மனப்பாடம் செய்யும் திறன் குறித்துக் கூறினார். புகழ்பெற்ற பாடல்களான காதல் கனிரசமே……. , உன்னடியில் அன்பு வைத்தேன்……… போன்ற சிலபாடல்களின் இராகம், தாளம், பல்லவி நயங்கள் பற்றியெல்லாம் சொல்லியும் பாடியும் காட்டினார். பி.யு.சின்னப்பா புதுகையில் பஜனை பாடாத கோயில்களே இல்லை என்றார். எம்.ஜி.ஆர் ,சிவாஜி , ஜெமினிகணேசன் போன்ற பின்னால் வரும் திரைக் கலைஞர்களுக்கெல்லாம் முன்னோடி என்றும் தன்னுடைய படங்களுக்கு உடுமலைநாரயணக்கவிஞர் பாடல் எழுதுவதையே விரும்புவார். பி.யு.சின்னப்பா ஒரு தெய்வப்பிறவி என உயர்வாகச் சொன்னார்.


திரு பி.கிருஷ்ணமூர்த்தி - ஞானாலயா நூலக நிறுவனர் புதுக்கோட்டை
பி.யு.சின்னப்பா தந்தையைப் போலவே அவர் வழியிலேயே நாடகத்துறைக்குச் சென்றார்.‘‘தத்தவ மீனலோசனி வித்துவ பால சபா” என்னும் நாடகக்குழுவில் மாதம் 15 ரூபாய் சம்பளத்திற்கு நடிக்கச்சென்றார்.பின்னர் ஒரிஜனல் பாய்ஸ் நாடகக்குழுவிற்குச் சென்றார்.முதன் முதலில்1936 இல் சவக்கடி சந்திரகாந்தா படத்தில் நடித்துப் புகழ்பெறத் தொடங்கினார். வாலிபப் பருவத்தில் குரல்வளம் உடைந்த போது அவர் அடைந்த துன்பங்களையும் பழைய குரல்வளத்தை மீட்டெடுத்த அருமைப்பாட்டையும் விளக்கிச் சொன்னார்.சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் புதுக்கோட்டைக்கே வந்து பி.யு.சின்னப்பாவை அழைத்துச்சென்று ‘‘உத்தமபுத்திரன்” படத்தில் நடிக்க வைத்த பெருமைமிகு நிகழ்வுகளையும் அண்ணாவின் திரைப்பட வசனத்திற்கான குருவாக விளங்கிய இளங்கோவன் வசனத்தையே பி.யு.சின்னப்பா பெரிதும் விரும்புவார் என்னும் அரிய செய்தியை வெளிப்படுத்தினார்.
திரு கே.எஸ்.கணபதி- பி.யு.சின்னப்பா வழக்கறிஞர் மகன் திருச்சி
பி.யு.சின்னப்பாவின் தந்தை செலவாளி பி.யு.சின்னப்பா மிகவும் சிக்கனமாக வாழ்பவர். தந்தைக்குப் பயந்து திரைத்துறையில் சம்பாதித்தத் தொகைக்கெல்லாம் புதுக்கோட்டையில் வீடுகளையும் வயல் வரப்புகளையும் வாங்கிக் குவித்தார்.ஒரு கட்டத்தில் பி.யு.சின்னப்பா புதுக்கோட்டையில் சொத்து வாங்கக் கூடாதென மன்னர் தடை ஆணையும் பிறப்பித்தார்.நீதிமன்றத்திற்குச் சென்று மன்னர் போட்ட தடை ஆணையை நீக்கிய பெருமை என்னுடைய தந்தையாரைச் சேரும். பி.யு.சின்னப்பா தன்னுடைய வீட்டில் பணிபுரியும் கணக்கப் பிள்ளையை நம்பினார். கணக்கப் பிள்ளையும் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக கடைசிவரை இருந்தார் என்று அக்காலத்திய சுவரசியமான நிகழ்வைச் சொல்லி நெகிழவைத்தார்.
திரு காசிநாதன்-முன்னாள் டிவிஎஸ் தொழிற்சங்கத்தலைவர் புதுக்கோட்டை
பி.யு.சின்னப்பாவை நாங்கள் நிறைய முறை நகர வீதிகளில் பார்த்துள்ளோம்.அமைதியாக நடந்து செல்வார். புதுக்கோட்டை மன்னர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு இருக்கைகள் கொண்ட கார் வைத்திருந்தார்.பின்னாளில் அந்தக் காரை பி.யு.சின்னப்பாவிடம் விற்றுவிட்டார். அந்தக் காருக்குள்ளயே தொலைபேசி பேசும்வசதியெல்லாம் உண்டு.கார் ஓட்டுநர் பின்னால் உட்கார்ந்து இருப்பவர்களைக் காண முடியாது. பின்னால் உட்கார்ந்து இருப்பவர்கள் கார் ஓட்டுநரைக் காணலாம்.என்று பி.யு.சின்னப்பாவின் ஆடம்பரக் கார் பற்றிய செய்திகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.


திரு எஸ்.சுதந்திரராஜன்- பி.யு.சின்னப்பா நகர் புதுக்கோட்டை
இப்பொழுது நாங்கள் வசிக்கும் இந்த இடம் பி.யு.சின்னப்பாவிற்குச் சொந்தமான நிலத்தில்தான் இடம் வாங்கி வீடு கட்டி வசிக்கிறோம் என்றும் பி.யு.சின்னப்பாவையும் அவர்தம் அளப்பரிய வல்லமையை அணுதினமும் தாம் உணர்வதாகக் கூறினார். டூப் இல்லாமலேயே எல்லாவிதமான காட்சிகளில் நடிக்கும் திறமையான பண்புகளைக் கொண்டிருந்தார். சில ஆண்டுக்காலம் பி.யு.சின்னப்பா மன்றத்தை நிர்வகித்து வந்த நிகழ்வைச் சொன்னார். பி.யு.சின்னப்பா நினைவிடம் பற்றிய கவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
திரு சந்திரதுரை -பி.யு.சின்னப்பா வீடு அருகே வசிப்பவர் புதுக்கோட்டை
அய்யனார்புரம் வீடு அருகே கீழ அய்யனார் குளம் உள்ளது.இந்தக் குளத்தில் தினமும் அதிகாலையில் நீராடியும் பாடல் பயிற்சியும்(சாதகம்) பெற்றார்.இவரையும் இவர் பாடல்களைக் கேட்பதற்காகவே குளத்தருகே ஒரு கூட்டம் அந்தக் காலத்தில் கூடியிருக்குமென பி.யு.சின்னப்பாவின் உள்ளுர் ரசிகர் வட்டத்தை நினைவு கூர்ந்தார்.
திரு கே.டீ.கந்தசாமி -எய்ம்ஸ் கல்வி நிறுவனர் புதுக்கோட்டை
அந்தக் காலத்தில் இந்த ஊர் மக்கள் பி.யு.சின்னப்பா புதுக்கோட்டையிலிருந்து வருகிறோம் என்று மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். எம்.கே.டி.பாகவதரும் பி.யு.சின்னப்பாவும் இணைந்து ஒரே ஒரு நாடகத்தில் நடித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.கலைஉலகில் தனக்கென தனி முத்திரைப்பதித்த பி.யு.சின்னப்பாவிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் நினைவுவளைவும் மணிமண்டபமும் அவர்பெயரால் நடிப்பக் கல்லூரியும் அரசு நிறுவவேண்டுமென்ற கோரிக்கையை முன்மொழிந்தார்
மேற்கண்ட கோரிக்கையை வழிமொழிந்து இத்துடன் இந்த ஆவணப்படம் நிறைவுபெற்றது.

எழுதியவர் : damodarakannan (31-Jul-15, 3:21 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே