மாறாதநெறி வேண்டும்
பதிதாகப் பழகுகின்ற மக்கள் எல்லாம்
புன்னகையே சிந்திடுவார் முகத்தில் நன்றாய்
மதிநிறைந்த பேர்கள்தம் வாழ்வில் என்றும்
மறந்துமே தீமைகளை எண்ண மாட்டார்
நதியோரம் இருக்கின்ற வயல்கள் எங்கும்
நன்றாகநீர் பாய்ந்து பசுமை பொங்கும்
அதிகாரம் கொண்டோர்கள் மனதில் என்றும்
அகங்காரம் சேர்ந்தேதான் இருக்கும் மண்ணில்
கரும்பாக பேசுகின்ற மனிதர் வாழ்வில்
கருதுகின்ற எல்லாமே கைக்கு கிட்டும்
அருமைமிகு செயல்செய்து காட்டும் பேர்க்கே
அவணியிலே பெயரென்றும் நிலைத்து நிற்கும்
திருக்குறளை பின்பற்றி மண்ணில் வாழ்ந்தால்
திருவோடு புகழுன்னை பற்றிக் கொள்ளும்
உருவத்தை வைத்திங்கு பிறரை மதித்தே
உள்ளதையே இழந்தவர்கள் அதிகம் உண்டு
மன்பதையில் நடப்பதையே எண்ணிப் பார்த்தால்
மதிநிறைந்த பேர்களுக்கு மதிப்பே இல்லை
தன்னலமே கொண்டிங்கு ஆள்வோர் எல்லாம்
தனமதிகம் குவிக்கின்றார் வாய்ப்பை எண்ணி
முன்னோர்கள் சொன்னசொல்லை புறமே தள்ளி
முடிந்தவரை திரட்டுகின்றார் பணத்தை அள்ளி
அன்றாடம் உழைக்கின்ற மக்கள் கூட்டம்
அடுக்குமா இதுஎன்றே குமுறி வாழ்வார்
எங்குதான் நாம்சென்று முறை யிட்டாலும்
எவருமே தீமைக்கே துணை போகின்றார்
மங்கிடுதே மண்ணிலே வாய்மை நேர்மை
மலர்ந்து மணம்வீசுதே தீமை பொய்மை
நங்கையர்கள் ஆட்சிதான் இல்லம் எங்கும்
நடப்பதுண்டோ ஆடவரின் எண்ணப் படியே
மங்களம்தான் மாநிலத்தில் வேண்டும் என்றால்
மாறாதநெறி கொண்டே நடந்தால் போதும்.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்