​உயிரின் உயர் உறவுகள் - 2 - தேன்மொழியன்

​உயிரின் உயர் உறவுகள் - 2 ( பாரதிக்கு )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வெங்களிச்சாங் கல் வெளிச்சத்தில்
இரவின் இமையை விரட்டுகிறாள்..
மொகுதூள் கற்களை உடைத்தவள்
வெண்ணிற ஓவியம் வரைகிறாள் ..

வாழைத்தோப்பில் நுழைந்தவள்
முதல் திருட்டில் பறக்கிறாள் ..
துளசி இலைகளை பறித்தவள்
ஆட்டைப் பிடித்து ஊட்டுகிறாள் ...

அகத்தி தழையை ஒடித்தவள்
அப்படியே மென்று தின்கிறாள் ..
எருமைக் கொம்பை இழுத்தவள்
என்னை முட்ட சொல்கிறாள் ..

தண்ணீர் எடுக்க ஓடியவள்
குடத்தை உடைத்து அழுகிறாள் .
நீச்சல் கற்க பயந்தவள்
கற்கும் முன்னே குதிக்கிறாள் ..

- தேன்மொழியன்


தங்கை பாரதிக்கான பக்கங்களில் சில ..

எழுதியவர் : தேன்மொழியன் (இராஜ்குமார் ) (1-Aug-15, 8:50 pm)
பார்வை : 137

மேலே