நம்மை அறிந்தால்
பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்றே உலகம் போய்க்கொண்டிருக்கிறது என்பது நம்மில் பலரின் எண்ணமாக இருக்கும். இதுதான் இயற்கையின் திட்டமா? எதற்கு இந்தப் பிறப்பு? என்னில் இருக்கும் நான் யார்? என்னில் இருக்கும் நான் என்னவாக இருக்கிறேன்? நான் என்னவாக இருக்க வேண்டும்? இத்தகையக் கேள்விகள் எல்லோர் மனதிலும் ஒரு காலக்கட்டத்தில் வந்துப் போகும். சிலர் மட்டுமே அதற்கான விடையைத் தேடத் தொடங்குவர். வெகு சிலர் மட்டுமே அதைக் கண்டடைவர். எவர் கண்டடைகிறாரோ அவரே முதலில் தன்னை அறிந்தவராய் இருக்கிறார்.
தன்னை அறிதலின் அவசியமும் முக்கியத்துவமும் ஒருவரின் வாழ்க்கையை மேன்மையடையச் செய்யும். தனது பிறப்பின் காரணத்தை அறிய முற்படும்போது ஞானம் பிறக்கிறது. ஞானத்தின் வழி நிற்கையில் தெளிவு பிறக்கிறது. நமது குழந்தைப் பருவம் நமக்குக் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்பை அளித்திருக்கிறது. 'இல்லை' என்று எவரேனும் சொல்வாராயின் அவர் அதை உணரவில்லை என்றே அர்த்தம். தனக்கிருக்கும் வாய்ப்பை உணராமல் போவது நமது பெரும் குறைபாடாய் இருக்கிறது. அதை எப்படி மாற்றுவது என்றுச் சிந்திக்க ஆரம்பிக்கும் நாள் நம் வாழ்வின்மீது நம்பிக்கைப் பிறக்கும்.
தன்னை அறிந்துகொள்ளத் தன் திறமையை நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். நம் திறமையை அறிந்துகொள்வது எப்படி? நாம் செய்யும் எந்த ஒரு செயலைத் தகுதியான ஒருவர் உண்மையாகப் பாராட்டுகிறாரோ அச்செயலில் நம் கவனத்தைச் செலுத்தினாலே போதும். அல்லது எந்தச் செயலில் நமக்கு இயற்கையாகவே நாட்டம் இருக்கிறதோ அதை மெருகேற்றினாலே போதும். அந்தத் திறமையை எப்படி மெருகேற்றுவது?
உணரப்பட்டத் திறமையின் தன்மையைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதில் சாதித்தவர்களைப் பற்றி மென்மேலும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த திறமையின் அடிப்படை, அதன் வகைகள், அதன் பிரிவுகள், அதன் வளர்ச்சி, அதன் இன்றைய நிலை என்பதையெல்லாம் நன்கு அறிந்திருக்க வேண்டும். நமது கவனம் அதில் தொடர்ந்துச் செலுத்தப்பட வேண்டும். மற்றவர்களிலிருந்து நம்மை அது பிரித்துக்காட்ட வேண்டும். எப்போது நமது எண்ணத்தோடு ஒன்றெனக் கலக்கிறதோ அன்றிலிருந்து அது நமக்கு அடையாளத்தைத் தர ஆரம்பிக்கும். அதன் சுவை நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து அதனை வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
நமக்கான வாய்ப்பை நாம் எப்படி தெரிந்துக் கொள்வது அல்லது ஏற்படுத்திக்கொள்வது? அந்த வாய்ப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரும். அதற்கு முதலில் பொறுமையும் விழிப்புணர்வும் மிகவும் அவசியம். நமது மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினால் நம்மிடமிருக்கும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். நமது திறமையை அதிகப்படுத்தி அதில் அசாத்திய சாதனைகள் புரியும்போது நமது மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும். நமது திறமையை அதிகப்படுத்தினால் நமது மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தலாம். பிறருக்கு நம்மீதான நம்பிக்கையைப் பலப்படுத்தும்போதுதான் நாம் தேடும் வாய்ப்புகள் அதிகமாகும். அதன்பிறகு காலம் தானாய் கனிந்து வழிவிடும்.
கிடைக்கப் பெற்ற வாய்ப்பைத் திடமாய்ப் பிடித்து அதில் நிரூபிக்க வேண்டியது அவசியம். அந்த நிரூபணத்திற்கு திறமையும் கடுமையான உழைப்பையும் தர வேண்டும். எல்லையில்லா அர்ப்பணமும் இடைவெளியில்லா ஈடுபாடும் மிக அவசியம். வெற்றி தோல்வி என்ற வட்டத்திற்குள் சிக்காமல் நமது உழைப்பு மேலும் அதிகரிக்க வேண்டும். நமது
அர்ப்பணத்திற்கும் உழைப்பிற்கும் பலன் எப்போதும் நம்மையேச் சேரும். சில நேரங்களில் அது தாமதம் அடையலாம். ஆனால் அதன் பலன் முழுமையாய் இருக்கும்.
நம்மை வளர்த்தவர்களும் நம்மோடு வளர்ந்தவர்களும் நமக்குச் சொன்னதுதான் நம்மைப் பொறுத்தவரை வாழ்க்கை. ஆனால் ஆழமானக் கல்வியின் மூலம் நமது எல்லைகள் விரிவடையும். இடர்படும் இன்னல்களை எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். நமது கையாலாகாதத் தனத்திற்குக் காரணம் தேடுவதை அந்த ஆழமானக் கல்வி அறிவுத் தடுத்து நிறுத்தும். ஏனென்றால் சாதித்தவர்களிடம் மட்டுமே இந்த உலகம் அவர்களிடம் அதன் காரணத்தைக் கேட்க விரும்பும். பின் சாதிக்காதவர்கள் காரணம் தேடி என்ன பயன்? எந்த சாதனையும் நம்மால் சாத்தியமே நாம் நம்மை அறிந்து இருந்தால். நம்மை நாம் அறிந்துகொள்ள இனியாவது முயற்சி எடுப்போமா?