இன்னிசை இருநூறு - வாழ்த்து 10

அன்பினைப் போற்றுதூஉம் அன்பினைப் போற்றுதூஉம்
அன்பு மறிவனும் வேறென்ப வாய்விலார்
அன்பே வடிவா யறிவ னமர்தலின்
அன்பே உயிர்காத்த லான். 10

அறிவன் - கடவுள்

புரிந்து கொள்ள எளிமையாக சந்தி பிரித்து இப்பாடல்:

அன்பினைப் போற்றுதூஉம் அன்பினைப் போற்றுதூஉம்
அன்பும் அறிவனும் வேறென்பர் ஆய்விலார்
அன்பே வடிவாய் அறிவன் அமர்தலின்
அன்பே உயிர்காத்த லான். 10

தெளிவுரை:

இச்செய்யுளில் அன்பின் பெருமையும், நிலைப்பாடும் சொல்லி அதனை ஆசிரியர் போற்றிப் பாடுவதாகக் கூறியுள்ளார்.

அன்பினைப் போற்றிடுவோம்; அன்பினைப் போற்றிடுவோம். ஆராய்ந்து பார்க்கும் திறனற்றவர்கள் (ஆய்விலார்) அன்பும், இறைவனும் (அறிவன்) வெவ்வேறு என்று சொல்வார்கள்; அன்பே வடிவமாக ஆண்டவன் அமர்ந்துள்ளான். அதன் வழியே உயிர்களைக் காத்து வருகின்றான். ஆதலினால் அன்பினைப் போற்றிடுவோம் என்கிறார் பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே... என்ற திருமூலரின் இந்த வாக்கியங்களும் உணர்ந்து கொள்ளத் தக்கவைகளே.

விளக்க உரை: திரு.கா.எசேக்கியல்

குறிப்பு:

இன்னிசை இருநூறு என்ற இந்நூல் 200 இன்னிசை வெண்பாக்களைக் கொண்டது. இந்நூல் மதுரைத் தமிழ்ச் சங்க வித்வான்களில் ஒருவராகிய சோழவந்தான் திரு.அ.சண்முகம் பிள்ளையவர்கள் இயற்றியது.

இந்நூல் மதுரையில் விவேகபாநுப் பிரஸ் நடத்தி வந்த பத்திராதிபர் திரு. மு.ரா.கந்தசாமிக் கவிராயர் என்பவரால் 01.07.1913 ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இப்பாடல்களுக்கு உரையெழுதும் முயற்சியாக நண்பர் திரு.கா.எசேக்கியல் அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கிசைந்து அவர் எனக்களித்த பாடல் 10 ன் உரையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இத்தளத்திலுள்ள நண்பர்கள் அனைவரும் வாசித்துப் பயன் பெறும்படியும், கருத்தளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

எழுதியவர் : அரசஞ்சண்முகனார் (1-Aug-15, 8:08 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 166

மேலே