பிரபஞ்ச கீதம் - நட்பு

ஒரு புன்னகையில்
பற்றிக்கொண்டது
நமது இரு பிரபஞ்சம்...

ஒளியின் கற்றைகளைக்
கைக்கொண்டு படைத்திடும்
பிரபஞ்ச கீதமாய்...
ஈர்ப்பின் இலக்கணத்தை
மெல்ல மீறிய
ஒரு படைப்பின் சூட்சுமமாய்....

காரண காரியத்தின்
பேருண்மையை
அச்சென பற்றி சுழலும் யாவும்
சற்றே
அதிர்ந்து பார்ப்பது
யாதொரு காரணமும்
யாதொரு காரியமும்
இன்றி சுழலும்
நம்மைத்தான்...

உன் மரபு
என் மரபு
இவை இரண்டின்
நீட்சிகளில் எங்கும்
நமக்கான பிணைப்பு இல்லை..
பின் எங்கனம்
எந்த புள்ளியில்
நாம் சந்தித்துக்கொண்டோம்....

இந்த பூமி கூட
ஆதாயம் பார்த்தே
ஆகாயம் பார்க்கிறது...

பரந்த வெளியும்
அதில் மிதக்கும்
அணுத்துகளும்
ஒன்றை ஒன்று
இறுகப் பற்றிக்கொண்டிருப்பது
அன்பால் அல்ல ...
அண்ட வெளி விட்டு
அகன்றுவிடக்கூடாதென்ற
அச்சத்தால்...

ரத்தத்தில் எழுதப்படாத பாசம்
இருந்தும் ரத்தம் துடிக்கிறது...

முன் ஜென்ம தொடர்கதை அல்ல
ஆனால் இனி வரும் ஜென்மங்களில்
என் கதையிலும் சரி
உன் கதையிலும் சரி
நாம் இல்லாமல்
இருக்கபபோவதில்லை...

கொண்டான் கொடுத்தான்
என்பதெல்லாம்
உனக்கும் எனக்கும் தேவையில்லை...

நமது தேவையெல்லாம்...
நட்புக்கோர் புத்திலக்கணம்...
நட்புக்கோர் புதுக்காவியம்...
நட்பினுள் புத்த தரிசனம்...

வா!
மகாபாரதத்தை
இப்போதே திருத்தி
எழுதுவோம்...
கர்ணன் எல்லோரும்
துரியோதனனை தர்மனாக மாற்றுவோம்....!

எழுதியவர் : மலைமன்னன் (2-Aug-15, 4:08 pm)
பார்வை : 115

மேலே