மனிதம் - உதயா

காகம் கரைவதற்கு முன்
உணவு பண்டமும் நீரும்
காத்துகிடந்த காலத்தில்
வாழ்ந்த மனிதம் எங்கே ...?

பசியால் ஐயா என்று
ஆதரவு குரல் பிறக்கா முன்
விண்ணுக்கு இணையாய்
பரந்த அன்னக்கொடி எங்கே ...?

இயலாதவர்களுக்கு ஈன்ற
உதவியினை அளித்துவிட்டு
ஈன்ற பொழுதிலே ஈன்றதை மறந்துவிட்டு
பலரின் வெற்றிக்காக பாதையை செதுக்கிய
கொடை வள்ளல்கள் எங்கே ...?

நாட்டு மக்களின் நலனே
தலையாய கடமையென்று
நாட்டுக்காகவே வாழ்ந்த
தன்னலமற்ற அரசியல்வாதிகள் எங்கே ...?
சொல் வாக்கு மறவா தலைவன் எங்கே ...?

அடர்ந்த வனத்தினில்
ஆடையின்றியே
அண்ணன் தங்கையாய்
நாட்களை கழிந்த
ஆண்கள் எங்கே ...?
பெண்கள் எங்கே ...?

உறவு என்ற சொல்லுக்கு
அகராதி எழுதிய
உறவுகள் எங்கே ...?
உறவுகள் நிறைந்த
குடும்பங்கள் எங்கே ...?

எப்பிரதிபலன் பாராமல்
விதியின் சதியால்
முளைத்த கற்கள்
நண்பனின் கால்களை
தட்டும் முன்னே
கரங்களை மெத்தையாக்கி
வைத்திருந்த நட்பு எங்கே ...?
நட்புக்கு காவியம் வரைந்த
நண்பர்கள் எங்கே ...?

நன்றி என்ற சொல்லின்
அர்த்தங்கள் எங்கே ...?
கருணை என்ற சொல்லின்
உயிர் எங்கே ...?
நீதி என்ற சொல்லி
துடிப்பு எங்கே ...?
தர்மம் என்ற சொல்லின்
ஆன்மா எங்கே ...?
இவை அனைத்தும் நிறைந்த
மனிதம் எங்கே எங்கே ...?

மனிதம் .
அந்த புழுதி புயலோடு
சேர்ந்தே பறந்து சென்ற
மணல் துகள்களைப் போல

எங்கோ சராசரி விகிதத்தில்
பூஜ்ஜியத்திற்குள்ளே
வாழ்ந்துக் கொண்டும்

அவ்வப்போது சிலரால்
விரும்பியே கொல்லப்பட்டும்
இன்னும் சிலரால்
கொடூரமாய் கொலை செய்யப்பட்டும்

அந்த கானல் நீரில் கரைக்கப்பட்டு
அத்தடயங்கள் தரணியில்
மனிதம் புகா இடத்தினில்
புதைக்கப்படுகின்றன

புதைக்கப்பட்ட இடத்தினில்
துளிவிடும் மனிதத்தை
நான் என்னுள் விருட்சமாக்குவேன்

மீண்டும் நான் சதிகாரர்
வேள்வியில் இரையாகிப் போனால்
என்னுள் இருந்த மனிதத்தோடு இணைத்து
என் இறுதி சொட்டு குருதியும்
மனிதமாய் அவதரிக்கும்

இம்முறை துளிவிட்ட மனிதத்தையும்
அவதரித்த மனிதத்தையும் மீண்டும் விருட்சமாக்க
யார் தயார் நீ ...? நீ ...? நீ ...? நீ ...? நீ ...? நீ ...? நீ ...?

மனிதம் மறந்த மனிதனே
நீயும் ஒருநாள் மரணிக்கப்படுவாய்
மனிதம் மறந்த மனிதனாலே
மறவாதே ........

எழுதியவர் : உதயா (4-Aug-15, 7:08 pm)
பார்வை : 353

மேலே