உனக்காக போராடு கண்மணியே
கோல் எடுத்து மட்டும்
கும்மி அடித்தாய்
கொடுமை என்றபோது ஏன்
குனிந்து ஓடுகிறாய்..
பகை மாந்தர் கொடுங்கோலால்
புடை சூழும் முன்னே உன்
நாணத்தை ஞாயிராக்க ஏன்
மறக்கிறாய்..
சிரித்து கொண்டே நீ இருந்தால்
சீறி பாயும் கையெல்லாம்
சீண்டித்தான் உனை பார்க்கும்..
முறைத்து பார்க்கவும் கற்றுக்கொண்டால்
முறை தவறிய முகமெல்லாம்
முழுமதி உன்முன் மண்டி போட்டிடும்..
நாணம் கொண்டு பேச தெரிந்தவளுக்கு
நாண் எடுத்து எய்ய தெரியாதா..
வானம் பார்த்து ரசிக்க தெரிந்தவளுக்கு
வாளை எடுத்து வீச தெரியாதா..
வெறிநாய்கள் துரத்தும் காட்டில்
வேதம் ஓதி பலன் இல்லை..
பெண்மை மென்மை தான்..
வன்முறை வைத்தியமில்லை தான்..
அகிம்சையெனும்
நன்முறையிலாவது போராடு..
நயவஞ்சகர் உன் மென்மையை
கிழித்தெறியும் போது..
அப்பொழுது மட்டுமே
இன்றைய சமூகத்திற்கு அடையாளம் ஆவாய்..
நாளைய சமூகத்திற்கு அடைமொழி ஆவாய்..
வாருங்கள் தோழிகளே!
வயிறு நிரப்பினால் மட்டும் போதாது..
புகழெனும் பூக்கள் கொண்டு
வாழ்க்கையயும் நிரப்ப கற்றுக்கொள்வோம்..